தமிழகத்தில் தடம் பதித்துவிட்டதா ஐ.எஸ் அமைப்பு? கோவையில் இன்றும் சோதனை

ஐ.எஸ் அமைப்பு

தேசிய புலனாய்வுத் துறையினர் நேற்றைய தினம் (புதன்கிழமை) கோவையில் ஏழு இடங்களில் சோதனை நடத்திய நிலையில், இன்று தமிழ் நாடு மாநில உளவுத்துறையினரும் கோவை மாவட்ட சிறப்பு உளவுப் பிரிவினரும் கோவை உக்கடம் அருகில் மூன்று இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

உக்கடம் பகுதியினை சேர்ந்த முகமது உசேன், ஷாஜஹான் மற்றும் கரும்புக்கடையினை சேர்ந்த சேக் சபியுல்லா ஆகியோரின் இல்லங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடை பெற்றது.

பின்பு மூன்று நபர்களையும் நுண்ணறிவுத் துறையினரின் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி, ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திரதாரியாக கருதப்பட்டவர் சஹ்ரான் ஹாஷிம். தற்போது கோவையில் நடைபெற்ற சோதனைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறது. சஹ்ரான் ஹாஷிம் மற்றும் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த மூன்று பேர் ஃபேஸ்புக் மூலம் நட்பில் இருந்ததாக தகவல் வந்ததன் அடிப்படையில் புலனாய்வு சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

யார் இந்த முகமது அசாருதீன்?

நேற்று கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதிகாலை தொடங்கி இரவு வரை சோதனை நடைபெற்றது. நீண்ட சோதனைக்கு பின்பு சமூக வலைதளங்களின் வாயிலாக ஐஎஸ் பயங்கரவாத கருத்துக்களை பரப்பி , தென்னிந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த ஆள் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியான சஹ்ரான் ஹாசிம் உடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்து வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு முகமது அசாருதீன் என்ற நபரை கைது செய்தனர்.

அதுமட்டுமின்றி, 'khilafah GFX' என்னும் ஃபேஸ்புக் பக்கத்தின் வழியாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துகளை பரப்பியுள்ளார்.

இன்று கொச்சினில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் முகமது அசாருதீனை ஆஜர்படுத்துகின்றனர்.

முகமது அசாருதீன் மீது கடந்த மே மாதம் 30ஆம் தேதியே தேசிய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அசாருதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் கருத்துகளை பரப்புவதாகவும், இலங்கையினைப் போல் தமிழகம் ,கேரளா ஆகிய தென்னிந்திய பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஆள் சேர்த்து வருகின்றனர் எனும் குற்றச்சாட்டின் பேரில் புலனாய்வு விசாரணைகள் நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வுத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசாருதீனுடன் விசாரணையை எதிர்கொள்ளும் மற்றவர்கள் யார்?

நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஷேக் இதயத்துல்லா, இப்ராகிம், அக்ரம் சிந்தா, சதாம் உசைன், அபுபக்கர் ஆகியோரை மீண்டும் இன்று தேசிய புலனாய்வுத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரணையினை தொடர உள்ளனர்.

இதில்,கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த திட்டமிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரோடு இப்ராகிம் நெருக்கமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மடிக்கணினிகள், பென் டிரைவ்கள், ஹார்டு டிஸ்க் போன்றவற்றை தேசிய புலனாய்வு துறை அலுவலகத்தில் வைத்து சோதனையை தொடருகின்றனர்.

இன்று நடைபெறுகின்ற சோதனை குறித்து மாவட்ட உளவுப் பிரிவு அதிகாரியொருவர் பிபிசி தமிழிடம் பேசியபோது , நேற்றைய சம்பவத்தையொட்டியே சோதனை நடைபெறுகின்றது என்றும், சோதனை இன்னும் முழுமையடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

என்னென்ன தடயங்கள் கைப்பற்றப்பட்டன?

புலனாய்வுத் துறையினரின் சோதனையில், 14 அலைபேசிகள் , 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 மடிக்கணிணிகள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டு டிஸ்க் டிரைவ்கள், 1 இன்டர்நெட் டாங்கிள், 13 காணொளி தகடுகள், 300 ஏர் கன் பெல்லட்டுகள் மேலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றிய ஆவணங்கள், மற்றும் நபர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது என தேசிய புலனாய்வுத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் - காற்றாலையில் மின் உற்பத்தி செய்வது எப்படி?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :