கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம் - இதுவரை கிடைத்தது என்ன?

தினமணி - கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றுள்ளது.

தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அகழாய்வுப் பணிகளை தொடக்கி வைத்திருக்கிறார்.

''2014 -2017 வரையிலான மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.அதில் உறைகிணறுகள் , செங்கல் கட்டடங்கள், பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தந்தத்தால் ஆன பொருள்கள் உள்பட 7818 தொல் பொருள்கள் கிடைத்துள்ளன.

2018-ம் ஆண்டில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பாசி, மணிகள், தங்கத்தால் ஆன பொருள்கள், மான்கொம்பு, இரும்புக் கருவிகள் உள்ளிட்ட 5280 தொல்பொருள்கள் கிடைத்தன.

இந்நிலையில் ஏழு ஏக்கர் பரப்பளவில் 47 லட்சம் மதிப்பீட்டில் ஐந்தாவது கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கீழடி ஆற்றங்கரை மற்றும் நகர்ப்புற நாகரிகம் கொண்ட இடம்.

இதில் கிடைக்கும் தொல்பொருள்கள் மற்றும் ஏற்கனவே கிடைத்தவை கீழடியில் இரண்டு ஏக்கர் 10 சென்ட் பரப்பளவில் அமையவுள்ள அகழ் வைப்பகத்தில் விரைவில் காட்சிப்படுத்தப்படும்.

சிகாகோவில் நடைபெற உள்ள உலக தமிழ் மாநாட்டுக்கு 'கீழடி என் தாய் மடி'எனப் பெயர் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்தககைய சிறப்பு வாய்ந்த கீழடி அகழாய்வுப் பணி எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது'' என பாண்டியராஜன் பேசியுள்ளார்.

தினத்தந்தி - வாக்குச் சீட்டு மூலம் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - பொதுநல மனு

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை. எனவே வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி புதிதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக விடுமுறைகால அமர்வில் விசாரிக்க வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் மனோகர்லால் சர்மா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ''பாஜக இன்னும் அதன் உயரங்களை எட்டவில்லை'' : அமித் ஷா

மக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பாஜக இன்னும் அதன் உயரங்களை எட்டவில்லை என கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக எப்போது கேரளா, மேற்குவங்கம் மற்றும் சில மாநிலங்களில் ஆட்சி அமைகிறதோ அப்போதுதான் பாஜக வெற்றியின் உயரத்தை எட்டியதாக அர்த்தம். ஆகையால் அதற்கேற்ப வேலைகளை முடுக்கிவிட அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களை வென்றிருந்த பாஜக 2019 மக்களவை தேர்தலில் 303 தேர்தலில் வென்றுள்ளது.

தினகரன் - ''அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையில்லை''

''அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது தேவையில்லாத பிரச்சனை. ஒரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அவரது கருத்தை சொன்னார். அதிமுக கூட்டத்தில் கூட ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி எந்த பிரச்சனையும் வரவில்லை.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு சில அமைச்சர்கள் வரவில்லை என செய்தி வந்தது. அது தவறான கருத்து. சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் , ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இருவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தால் வர முடியவில்லை எனக்கூறி தலைமை கழகத்துக்கு முறையாக தகவல் அனுப்பி இருந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் குன்னம் ராமச்சந்திரனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்று வராதவர்கள் அதற்கான காரணத்தை தெரிவித்து விட்டார்கள்'' என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்