சாதி பாகுபாடு: அங்கன்வாடி முதல் அசோக் கொலை வரை - சாதியின் பங்கு என்ன?

கோப்புப்படம் படத்தின் காப்புரிமை Robert Nickelsberg

தமிழ் நாட்டில் கடந்த சில தினங்களில் சாதி தொடர்பாக நடந்த இரு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்பாக ஊடங்களில் வெளிவந்த செய்திகள் தமிழகத்தில் நடக்கும் தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன.

செய்தி 1 - மதுரை மாவட்டம் வலையபட்டி கிராமத்தில் அங்கன்வாடி ஊழியர்களாக நியமிக்கப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், அவ்விரு பெண்கள் வேலையில் தொடர்ந்தால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

பிறகு இந்த விஷயம் கிராமத்தில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கத் துவங்கியது. இதனால் அவ்விரு பெண்களும் மற்றொரு கிராமத்தில் தற்காலிகமாக பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதன் பின்னர் இன்றைய தினம் (14.06.2019) அவ்விரு பெண்களும் மீண்டும் வலையபட்டி கிராமத்திலேயே பணியாற்றுமாறு கூறியுள்ளனர் அதிகாரிகள்.

செய்தி 2 - திருநெல்வேலியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 23 வயதான அசோக் என்பவர் தனது தாயாரை சாதி இந்துக்கள், இரு சக்கர வாகனத்தில் மோதியது தொடர்பாக காவல்துறையில் ஒரு புகார் கொடுத்திருந்தார். சில தினங்களுக்குப் பின் ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

கொலை செய்யப்பட்ட அசோக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விரு சம்பவங்களிலும் சாதிய மனநிலையே முக்கிய பங்காற்றி இருப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒரு சம்பவத்தில் 'தீண்டாமை' பிரச்சனையால் பதற்றமும் மற்றொரு சம்பவத்தில் சாதிய மனநிலை கொலைக்கும் வித்திட்டதாக கூறுகிறார்கள்.

அசோக் விவகாரத்தில் என்ன நடந்தது?

"பல நாட்களுக்கு முன்னர் கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த அசோக் தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றபோது அதில் வைக்கப்பட்டிருந்த புல்கட்டு மற்றொரு சாதியைச் சேர்ந்தவர் மீது மோதியுள்ளது. இது தொடர்பாக அந்நபர் அசோக்கிடம் தகராறு செய்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசோக் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

சம்பந்தப்பட்ட நபர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து காவலில் வைத்தது.

இதற்கிடையில் அசோக் மற்றும் அவரது குழுவினர் தங்களை தாக்கியதாக எதிர்தரப்பு கொடுத்த மற்றொரு புகாரில், அசோக் உள்பட நான்கு பேரை கைது செய்தோம். அதன் பின்னர் இந்த விவகாரத்தில் பழிவாங்குவதற்காக அந்தத் தரப்பு அசோக்கை படுகொலை செய்திருக்கிறது'' என பிபிசி தமிழிடம் கூறினார் திருநெல்வேலி நகர துணை காவல் ஆணையாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா.

கரையிருப்பு கிராமத்தில் பொதுப்பாதை வழியாக தலித்துகளை செல்லவிடாத ஆதிக்க சாதியினருக்கு எதிராக தட்டிக்கேட்க முன்வருவோரை இடைமறித்து அச்சுறுத்தும் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், அசோக் சாதி வெறியால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது கொலையைக் கண்டித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆனால் காவல்துறை மெத்தனப்போக்கோடு செயல்பட்டது என்கிறார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தில்லிபாபு.

''அசோக் புகார் கொடுத்து கைது செய்யப்பட்ட அந்நபர் சில நாட்களிலேயே பிணை கேட்க, காவல்துறை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பதால் உடனடியாக பிணை கிடைத்துவிட்டது.

அதன் பின்னரே இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தச்சநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்கள் கறாரான அணுகுமுறையை கடைபிடித்திருந்தால் இந்த கொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம்'' என்கிறார் அவர்.

இந்த விவகாரத்தை பொருத்தவரை ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் விசாரணை வளையத்தில் இருப்பதாகவும் இன்னும் சில பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறுகிறது.

படத்தின் காப்புரிமை SEBASTIAN D'SOUZA
Image caption கோப்புப்படம்

''நவீன காலத்திலும் ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெரு வழியாக செல்லக்கூடாது, தீண்டாமை உள்ளிட்டவை இன்னமும் கிராமங்களில் இருக்கிறது. ஆணவப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சாதிய கொடுமை நடைபெறுகிறது. ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே தவறு செய்கின்றனர். ஆனால் தீங்கிழைக்காத பெரும்பான்மை ஆதிக்க சமூகம் இதனை கண்டிக்காமல் கடந்துசெல்கிறது. இது மறைமுகமாக அந்த சிறிய குழுக்களுக்கு ஊக்கமளிக்கிறது'' என்கிறார் தில்லி பாபு.

''இது ஒரு சிறு தகராறில் ஆரம்பித்த பிரச்சனை. இந்த கொலைக்கு நோக்கம் சாதிதான் என உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் சமூகத்தில் சாதி புரையோடிப்போயிருக்கிறது. ஒரே சாதி எனில் இந்த தகராறுகள் வன்மம் ஆவதில்லை, வேறு சாதியினரிடையே தகராறு ஏற்பட்டால் அது சாதிய வன்மம் ஆகிவிடுகிறது. இந்த பிரச்சனையில் அந்த ஊரில் வசிக்கும் ஆதிக்க சாதியினர் மீது பொதுவாக குற்றம்சுமத்தப்படவில்லை; அவர்களில் ஒரு குடும்பத்தின் மீதுதான் குற்றம் சுமத்துகிறார்கள். சிறிதாக ஆரம்பித்த இப்பிரச்சனை கொலையில் முடிந்துவிட்டது'' என்றார் ஃபெரோஸ்கான்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் என பலர் இந்த விவகாரத்தில் நீதி வேண்டி போராடத் துவங்கியுள்ளனர்.

''அங்கன்வாடி பணியாளர்களும் தீண்டாமை கொடுமையும்''

''மதுரையில் நாகராஜ் ஆட்சியராக இருந்தபோது ஜூன் மாத துவக்கத்தில் 1783 பேருக்கு பணி நியமன ஆணை கொடுத்தார். அதில் வலையபட்டியில் அன்னலட்சுமி, ஜோதி லட்சுமிக்கும் பணி ஆணை கிடைத்தது.

இவர்கள் சமைப்பது குழந்தைகளுக்கு தீட்டாகிவிடும், இவர்களை மாற்ற வேண்டும் என அந்த கிராமத்தில் சாதி இந்துக்கள் கோருகின்றனர். இதனால் அருகாமையில் உள்ள மற்றொரு பள்ளிக்கூடத்தில் தற்காலிகமாக சமையல் பணிக்கு அவர்களை அனுப்பினார்கள். ஆனால் தற்போது இதனை மறுக்கிறார்கள். தீண்டாமை இருக்கும் இடத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் வேறு ஒரு இடத்திற்கு அனுப்புவது என்பது தீண்டாமையை ஊக்குவிக்கும் செயலாக அமையும்'' என பிபிசி தமிழிடம் பேசுகையில் கூறினார் எவிடென்ஸ் கதிர்.

படத்தின் காப்புரிமை vincentraj/fb

''தேனியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்தில் அங்கன்வாடியில் ஒரே தட்டில் குழந்தைகள் சாப்பிடுவதை எதிர்த்து சாதி இந்துக்கள் தங்களது குழந்தைகள் உணவருந்த வீட்டில் இருந்து பாத்திரம் கொடுத்தார்கள். ஒரே அறையில் தட்டு வைத்திருக்கும் குழந்தைகள், பாத்திரம் வைத்திருக்கும் குழந்தைகளுக்கு தனித்தனியாக சாப்பாடு போட்டார்கள்.

சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பாப்பம்மாளுக்கு தற்போது வலையபட்டியில் நடந்தது போன்ற கொடுமை நடந்தது. கிருஷ்ணகிரி அருகே ஒரு கிராமத்திலும் இது போலொரு சம்பவம் நடந்தது'' என அங்கன்வாடியில் நடக்கும் பாகுபாடுகள் குறித்து விவரித்தார் கதிர்.

நாகரிக சமூகத்தில் தீட்டு எனச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அரசு சமூக உரையாடலை ஏற்படுத்த வேண்டும். தற்போது மனித உரிமை ஆணையம் மாவட்ட நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆனால் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை. மாநில மனித உரிமை ஆணையத்தில் புலன் விசாரணை குழு இருக்கிறது. அவர்கள் இது போன்ற சம்பவம் நடக்கும் இடங்களில் நேரில் வந்து விசாரணை செய்ய வேண்டும். ஆட்சியர் நேரில் சென்றிருக்க வேண்டும் என்கிறார் கதிர்.

ஆனால் மதுரையில் தற்போது ஆட்சியர் பொறுப்பில் இருக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், எல்லா மட்டத்திலும் அங்கே அதிகாரிகள் சென்று வருகிறார்கள் என்கிறார்.

''சமாதான குழு அமைக்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால் கைது நடவடிக்கைக்கு பயந்து அந்த ஊரை விட்டு கிளம்பிப்போனவர்கள் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைக்கும்போதும் யாரும் முன் வரவில்லை'' என்றும் கூறுகிறார்.

வலையப்பட்டியில் சாதிய ரீதியில் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் புகார் கொடுத்ததை ஆட்சியர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் ஆட்சியர் அலுவலகம் வரைக்கும் அந்த புகார் வரவில்லை. ஒன்றிய அளவில் இருந்த பிரச்சனை அது என்றார்.

''பத்திரிகைகளில் வெளிவந்தது போல அவ்விரு பெண்களுக்கு இடமாற்ற ஆணை கொடுக்கப்படவில்லை.

இந்தச் சம்பவத்திற்கு பிறகு அந்த ஊரில் குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை என்பதால் வாய்மொழியாக அவர்களுக்கு இன்னொரு கிராமத்தில் கூடுதல் பணி பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. மதுரை மாவட்டத்தில் நிறைய காலிப்பணியிடம் இருக்கிறது. நிறைய பேருக்கு கூடுதல் பணி வழங்கப்பட்டிருக்கிறது.

தற்போது அவ்விரு பட்டியலின பெண்களுக்கும் வலையப்பட்டியிலேயே பணிபுரியுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்'' என பிபிசி தமிழிடம் கூறினார் சாந்தகுமார்.

இந்த இரு சம்பவங்களும் சாதி ஒடுக்குமுறை குறித்த விவாதத்தை தமிழகத்தில் தீவிரமாகியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்