சூலூர் அருகே விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் கைது

விவசாயிகள் கைது

கோவை மாவட்டத்தில், சூலூர் அருகே உள்ள விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கருமத்தம்பட்டி, செம்மாண்டம்பாளையம் ஆகிய கிராமங்களில், விவசாய நிலங்களில் புகலூர் முதல் அரசூர் வரை செல்லும் 400 AV உயர் மின் கோபுரத்தினை அமைப்பதற்கான திட்டத்திற்காக அளவீடுகள் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விவசாய நிலங்களின் வழியாக மின்கோபுரங்கள் அமைப்பதற்காக, அளவெடுக்கும் பணியினை கடந்த செவ்வாயன்று (11.06.2019) அதிகாரிகள் தொடங்கினர். அன்று போராட்டம் நடந்ததையடுத்து பணியை தொடர முடியாமல் போனது.

இந்நிலையில், இன்று (15.06.2019) மீண்டும், இந்த கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் நில அளவீடுகள் எடுக்கும் பணி அதிகாலை தொடங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பெண்கள் உட்பட்ட 11 நபர்களை கருமத்தம்பட்டி கத்தோலிக்க திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை காவல் துறையின் உதவியுடன் அப்புறப்படுத்திவிட்டு அளவெடுக்கும் பணி முடிக்கப்பட்டது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய செம்மாண்டம்பாளையம் கிராமத்தினை சேர்ந்த பெண் விவசாயி வசந்தி, "எங்க பூமியில்தான் இந்த டவர் லைன் வருவதாக அளவெடுக்க வந்துள்ளனர், எங்களுக்கு நான்கு ஏக்கர் நிலம் இருக்கிறது. நிலத்தின் நடுவில் போர், தண்ணீர் தொட்டி, மின் இணைப்பு அனைத்தும் உள்ளது. அதற்கு அருகில்தான் மின் கம்பம் போட இருப்பதாக குறித்துள்ளனர். இந்த இடத்தில் மின் கம்பம் அமைத்தால் நான்கு ஏக்கர் பூமியில் நான்கு சென்ட் நிலத்தினைக் கூட நாங்கள் பயன்படுத்த முடியாது. மின்கம்பம் நடப்படுகின்ற 5 அல்லது 10 சென்ட் நிலத்திற்கு மட்டும் நஷ்ட ஈடு தருவதாக கூறுகின்றனர். ஆனால், இனி ஒரு சென்ட் நிலத்தில் கூட எங்களால் விவசாயம் செய்ய முடியாது. விற்கவும் முடியாது. எங்கள் வாழ்வாதரமே போய்விடும்" என்கிறார்.

மேலும், "நாங்கள் இந்தத் திட்டத்தினை எதிர்க்கவில்லை, கேபிள் லைன் அமைத்து கொண்டு செல்வது என ஏதாவது மாற்று நடவடிக்கைகள் எடுங்கள்; அதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று கூறுகின்றோம். ஆனால், அரசு எங்கள் குமுறல்களுக்கு செவி சாய்க்கவில்லை. இதற்கு பதில் எங்களை சுட்டுத்தள்ளி விட்டு எங்கள் நிலங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த பூமிதான் எங்கள் வாழ்வாதாரம், இதை இழந்த பின்பு வாழ்வதில் அர்த்தமில்லை" என்கிறார் வசந்தி.

கருமத்தம்பாளையத்தினை சேர்ந்த விவசாயி சதீஷ் கூறுகையில், "ஏப்ரல் 2018இல் விவசாயிகள் சங்கம் சார்பாக இத்திட்டத்தினை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். மேலும், மார்ச் 2019இல் இந்தத் திட்டத்தினை எங்கள் நிலத்தில் செயல்படுத்த எங்களுக்கு விருப்பம் இல்லை என்று ஒரு ஆட்சேபனை மனுவையும் அளித்தோம். இந்த இரண்டு மனுக்களுக்குமே எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை. மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டோம். 2015இல் இந்த திட்டம் குறித்து பொது கருத்து கேட்பு கூட்டம் நடத்தியதாக பவர் கிரிட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எங்கள் பகுதியில் அப்படி ஒரு கூட்டம் நடைபெறவில்லை. தமிழகத்தில் மூன்று இடங்களில் நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் அரசம்பாளையம், திருப்பூர் மாவட்டத்தில் முதலி பாளையம், நாமக்கல் மாவட்டம் போகராயன்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

ஆனால், அந்த கூட்டங்களில் கலந்து கொண்டவர்களில் இந்த திட்டத்தின் மூலமாக பாதிக்கப்படும் விவசாயிகள் எத்தனை பேர் என்று கேட்டுள்ளோம். அதற்கும் எந்த பதிலும் வரவில்லை.

இதற்கு முன்பு, இந்த மின்கோபுரங்கள் அமைத்தால் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு உடல்ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்று ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதா என்று பல துறைகளுக்கு தகவல் கேட்டு கடிதம் அனுப்பினோம். மின்வாரியத்துறை துறை எங்களிடம் தகவல் ஏதும் இல்லை என்றது.

சுகாதாரத்துறைக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு, இதன் மூலம் ஏற்பட இருக்கும் சூழல் பாதிப்புகள் குறித்து கடிதம் அனுப்பி உள்ளோம். நாங்கள் கேட்ட எந்த தகவல்களுக்கும் பதில் அளிக்காமல், எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் தராமல் எங்கள் நிலங்களுக்குள் அளவெடுக்கும் பணியினை தொடங்க வந்தார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கைது செய்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மூலமாக இந்தப் பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர்" என்று தெரிவித்தார்.

சூலூர் வட்டாட்சியரிடம் இதுகுறித்து கேட்டபோது, "டவர் லைன் எந்தெந்த இடங்களின் வழியாக செல்ல இருக்கின்றது, அந்த நிலங்களின் பட்டா எண் என்ன என்பது போன்ற அடையாளங்களை குறித்து செல்லத்தான் வந்துள்ளோம். அளவெடுத்து பின்பு, யாருடைய நிலங்களில் மின் கோபுர இணைப்புகள் செல்லவிருக்கின்றதோ அதன் உரிமையாளர்களுக்கு அறிக்கை கொடுத்து, பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்தான் மற்ற பணிகள் தொடரும்" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்