தண்ணீர் இல்லை - மதிய உணவை நிறுத்தும் சென்னை உணவகங்கள்

தண்ணீர் இல்லை - சென்னையில் 60 சதவீத ஓட்டல்கள் மதிய உணவை நிறுத்த முடிவு படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'சென்னையில் 60 சதவீத ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் பாதிப்பு'

சென்னையில் 60 சதவீத ஓட்டல்களில் தண்ணீர் இல்லாததால் மதிய உணவு விற்பனையை நிறுத்த திட்டமிட்டு இருக்கின்றனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதன் தாக்கம் தற்போது சென்னையில் உள்ள ஓட்டல் கடைகளிலும் ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் சிறு கடைகள் மூலம் 5 நட்சத்திர ஓட்டல்கள் என சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஓட்டல்கள் இருக்கின்றன.

இந்த ஓட்டல்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 60 சதவீதம் ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் பிரச்சினைகளை சந்திப்பதாகவும் சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது:-

ஓட்டல்களில் மதிய உணவு தயாரிப்பதற்கு தான் தண்ணீர் செலவு அதிகம் ஆகிறது. குறிப்பாக மதிய உணவுக்கு தேவையான அரிசி கழுவுவதற்கும், காய்கறி கூட்டு வைக்க காய்கறிகளை கழுவுவதற்கும், அதை சமைப்பதற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. பின்னர், அதை சமைக்க பயன்படுத்திய பாத்திரங்களை கழுவுவதற்கும் நீர் வேண்டும்.

இப்போது ஏற்பட்டு இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டால், இதை சமாளிக்க எங்களால் முடியவில்லை. நிலத்தடி நீர் இல்லாததால் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க முடியவில்லை. குடிநீர் வாரியத்தில் இருந்து எப்போதும் ஓட்டல்களுக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை. தனியார் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை நம்பி தான் இருக்கிறோம்.

அந்த தண்ணீர் லாரிகளும், சென்னை சுற்றியுள்ள சில பகுதிகளில் தண்ணீர் எடுக்க ஐகோர்ட்டு தடை விதித்து விட்டது. இதனால் அந்த தண்ணீர் லாரிகளும் சரியான நேரத்தில் நீரை வழங்குவது இல்லை. இதனால் சமையலும் பாதிக்கிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மனக்கசப்பும் ஏற்படுகிறது.

இதனால் மதிய உணவு நிறுத்துவது தொடர்பாக பல கடைகள் ஆலோசித்து வருகின்றன. என்னுடைய 2 கடைகளில் மதிய உணவை நிறுத்த திட்டமிட்டு இருக்கிறேன். சென்னையில் மட்டும் சிறிய கடைகள் முதல் 5 நட்சத்திர ஓட்டல்கள் வரை 60 சதவீத ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளன.

இது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. லாரி தண்ணீரை நம்பி மட்டும் தான் எங்களுடைய இப்போதைய பிழைப்பு ஓடிக்கொண்டு இருக்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினமணி: 'தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல்: தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரணை'

மதுரை மாவட்டம், வலையபட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் குறித்து தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய துணைத் தலைவர் முருகன் சனிக்கிழமை விசாரணை நடத்தினார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ் பின்வருமாறு விவரிக்கிறது,

வலையபட்டியில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும், தாழ்த்தப்பட்ட அங்கன்வாடிப் பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்தும் விசாரணை நடத்துவதற்காக, தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய துணைத் தலைவர் எல். முருகன் அந்த கிராமத்துக்கு நேரில் சென்றார். அங்குள்ள மக்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்த அவர், சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டு, காயமடைந்த மக்களையும் சந்தித்து விசாரணை நடத்தினார். பின்னர், கலவரத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மின்வாரிய ஊழியர் ஆறுமுகத்தையும் சந்தித்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: எஸ்.வலையபட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் 70 குடும்பங்களும், 500-க்கும் மேற்பட்ட பிற சமுதாயத்தினர் குடும்பங்களும் உள்ளன. இந்நிலையில், இங்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரான கொடுமைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதும், அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் சமாதானக் கூட்டம் நடத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது, அம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு, விளையாட்டுப் போட்டிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில், தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மின் மீட்டர்கள் உடைக்கப்பட்டு மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 4-ஆம் தேதி வலையபட்டி கிராமத்தில் பணியாற்றி வந்த தாழ்த்தப்பட்ட அங்கன்வாடிப் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்த தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.

தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரிப்பதை அறிந்தவுடன், வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட அங்கன்வாடிப் பெண் ஊழியர்களை, அவசர அவசரமாக மீண்டும் வலையப்பட்டி கிராமத்தில் பணியில் அமர்த்தி உள்ளனர். இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்தப்படும். இச்சம்பவங்கள் காரணமாக வெளியூர் சென்றுள்ள பள்ளிக் குழந்தைகள், பிற சமுதாயக் குழந்தைகள் அனைவரையும் ஜூன் 17-ஆம் தேதிக்குள் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை உடனடியாக வழங்கவேண்டும். காயமடைந்தவர்களுக்கும், சேதமடைந்த வீடுகளுக்கும் ஜூன் 17-ஆம் தேதிக்குள் இழப்பீடு வழங்கவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்து, சமூக நல்லிணக்க விழிப்புணர்வுக் கூட்டங்களை, மாவட்ட நிர்வாகம் அடிக்கடி நடத்தவேண்டும் என்றார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'வேகமாக குறையும் நிலத்தடி நீர்'

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அஞ்சதக்க அளவில் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலையில் 4.5 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாத இடைவெளியில் மட்டும், கடலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கணிசமான அளவு நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

இந்து தமிழ்: "என்கவுன்ட்டர் கொலை"

போலீஸாரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடியை தனிப்படை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். மேலும் அவரது கூட்டாளிகள் 2 பேரை கைது செய்தனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"வியாசர்பாடி, தேசிங்கானந்தபுரத்தைச் சேர்ந்தவர் வல்லரசு (19). இவர் மீது கொலை, திருட்டு, அடிதடி உட்பட 7 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.40 மணிக்கு வியாசர் பாடி காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் நிலைய காவலர் ரமேஷுக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் வியாசர்பாடியில் ரவுடிகள் ஆயுதங்களுடன் சுற்றி திரிகின்றனர். அவர்களை கைது செய்யுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காவலர் ரமேஷ் தன்னுடன் பணிபுரியும் மற்றொரு காவலர் பவுன்ராஜ் உடன் வியாசர்பாடி எம்.எம்.கார்டனுக்குச் சென்றபோது அங்கு ரவுடிகளான வியாசர்பாடி தேசிங்கானந்தபுரம் கதிரவன், வல்லரசு, பெரம்பூரைச் சேர்ந்த கார்த்திக் (32) ஆகியோர் நின்றிருந்தனர். அவர்கள் 3 பேரும் அங்கு வந்த போலீஸாரை தாக்க முயன்றனர். குறிப்பாக வல்லரசு அரிவாளால் காவலர் ரமேஷை தாக்க முயன்றார். அவர் குனிந்து கொண்டதால் அருகில் நின்றிருந்த பவுன்ராஜின் இடது மற்றும் வலது தலையில் இரண்டு பக்கமும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைத் தொடர்ந்து ரவுடிகள் 3 பேரும் அங்கிருந்து தப்பினர்.

போலீஸார் தாக்கப்பட்டது குறித்து வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் பெரியதுரைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் சம்பவ இடம் விரைந்து காயம் அடைந்த காவலர் பவுன்ராஜை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பவுன்ராஜின் தலையில் 20 தையல் போடப்பட்டது.

இதைத் தொடர்ந்து தப்பியோடிய 3 ரவுடிகளையும் கைது செய்ய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன் மேற்பார்வையில் புளியந்தோப்பு ஆய்வாளர் ரவி, எம்.கே.பி.நகர் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், தீபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ரவுடி வல்லரசு மாதவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிஎம்டிஏ டிரக் பார்க்கிங் யார்டு பின்புறம் உள்ள காலி மைதானத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு அங்கு விரைந்தனர். போலீஸாரை பார்த்ததும் அவர் களை வல்லரசு அரிவாளால் வெட்டி னார். இதில், உதவி ஆய்வாளர்கள் பிரேம் குமார், தீபனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தற்காப்புக்காக துப்பாக்கி யால் சுட்டார். இதில், வல்லரசு மார்பில் இரண்டு குண்டுகளும் காலில் ஒரு குண்டும் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது."

- என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :