"மகாராஷ்டிராவில் 3 ஆண்டுகளில் 12,000 விவசாயிகள் தற்கொலை"

"மகாராஷ்டிராவில் 3 ஆண்டுகளில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை" படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் - "மகாராஷ்டிராவில் 3 ஆண்டுகளில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை"

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அங்கு முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார். தற்போது அங்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது.

சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறுகையில், " கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இந்த ஆண்டில் முதல் 3 மாதங்களில் மட்டும் 610 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.

தற்கொலை செய்து கொண்ட 12 ஆயிரத்து 21 விவசாயிகளில் 6,888 விவசாயிகள் இழப்பீடு பெற தகுதியானவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதில் 6,845 விவசாயிகளுக்கு இழப்பீடாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் 3 மாதங்களில் 610 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதில் 192 பேர் இழப்பீடு பெற தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 96 பேர் விவசாயிகள் இல்லை. மீதமுள்ள 323 வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது," என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி - 'மூன்றாண்டுகளில் இஸ்ரோ மனிதனை விண்ணுக்கு அனுப்பும்'

படத்தின் காப்புரிமை ANI
Image caption சந்திராயன் - 2

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ககன்யான் விண்கலம் மூலம் மனிதன் விண்ணுக்கு அனுப்பப்படுவான் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"ககன்யான் விண்கலத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. பிரதமர் அறிவிப்பின்படி ஆக.15, 2022-ல் விண்ணுக்கு மனிதன் அனுப்பப்படுவான். சந்திராயன் - 2 விண்கலம் ஜூலை 15-ல் விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் தயார். செப்டம்பர் முதல் வாரத்தில், விண்கலம் நிலவில் தரை இறங்கும்" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "இறை நம்பிக்கை அடிப்படையிலேயே யாகம்"

Image caption ஜெயக்குமார்

நம்பிக்கையின் அடிப்படையிலேயே மழை வேண்டி யாகம் நடத்துவதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "நம்பிக்கை அடிப்படையில் நாங்கள் யாகங்களை செய்கிறோம். நம்பிக்கைக்கு இறைவன் மதிப்பளித்து மழையைத் தருவார். சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் மூலம் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறோம்.

புதிய வீராணம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்த காரணத்தால், இப்போது நமக்குத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கேரளம் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தருவதாகத் தெரிவித்தது.

இதனை நாங்கள் மறுத்ததாகக் கூறுவது தவறு. பக்கத்து மாநிலம் என்பதால் பரஸ்பரம் உதவி செய்ய முன்வந்தனர். நமக்குத் தேவைப்படும்போது அந்த உதவியைப் பெற்றுக் கொள்வோம். ஆனால் இதைக்கூட எதிர்க்கட்சியினர் அரசியலாக்குகின்றனர்" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்