தவிக்கும் சென்னை: எங்கிருந்து எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது? - அச்சம் தரும் தகவல்கள்

தவிக்கும் சென்னை: எங்கிருந்து எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது? படத்தின் காப்புரிமை Getty Images

கடுமையான குடிநீர் பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது சென்னை நகரம். சுமார் 85 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நகரத்திற்கு குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது?

நெருக்கமான நகரம்

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை இந்தியாவில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மிகச் சில நகரங்களில் ஒன்று. தற்போதைய நிலவரப்படி சென்னை நகரில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 27000-28000 பேர் வரை வசிக்கின்றனர். தமிழகத்தின் சராசரி மக்கள் நெருக்கத்தைவிட சுமார் 25 மடங்கு அதிக மக்கள் நெருக்கமுள்ள நகரம் சென்னை. 

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செம்பரம்பாக்கம் ஏரி

இந்த நகருக்கு குடிநீர் வழங்கும் பணியை 'மெட்ரோ வாட்டர்' என்று அழைக்கப்படும் சென்னைக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மேற்கொள்கிறது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாத காலகட்டத்தில் சென்னை முழுவதற்கும் சேர்ந்து ஒரு நாளைக்கு 850 மில்லியன் லிட்டர் தண்ணீரை குடிநீர் வாரியம் விநியோகம் செய்கிறது.  இது தவிர, ஆழ்துளை கிணறுகள் மூலமும் சென்னை நகர மக்கள் தண்ணீரைப் பெற்றுவருகின்றனர். 

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புழல் ஏரி

சென்னையின் பிரதானமான நீர் ஆதாரம், சென்னையைச் சுற்றியுள்ள நான்கு ஏரிகள்தான். அவை, பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகியவை. இதில் செம்பரம்பாக்கம் ஏரியே மிகவும் பெரியது. இதன் மொத்தக் கொள்ளளவு, 3645 மில்லியன் கன அடி. இதற்கு அடுத்தபடியாக பூண்டி ஏரி. இதன் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. சோழவரம் ஏரி 1081 மில்லியன் கன அடி நீரையும் செங்குன்றம் ஏரி 3300 மில்லியன் கன அடி நீரையும் தேக்கவல்லவை. ஒட்டுமொத்தமாக 11,257 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட ஏரிகளில் தற்போது வெறும் 20 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருக்கிறது. 

வீராணம் ஏரி

சென்னை நகரின் மற்றொரு முக்கியமான குடிநீர் ஆதாரம், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரி. சென்னையில் இருந்து 235 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஏரி பிரதானமாக விவசாய பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் என்றாலும், 2004ஆம் ஆண்டிலிருந்து சென்னைக்கு தினமும் 180 மில்லயன் லிட்டர் கொண்டுவரும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டு நீர் எடுக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பைப் பொறுத்தும் தேவையைப் பொறுத்தும் இங்கிருந்து சென்னைக்குத் தண்ணீர் பெறப்படும். தற்போது வீராணம் ஏரியில் 451 மில்லியன் கன அடி நீர் இருப்பில் இருக்கிறது. 

இது தவிர, தெலுங்கு கங்கைத் திட்டதின் கீழ் கிருஷ்ணா நதி நீரும் சென்னைக்கு பெறப்படுகிறது. கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சைலம் அணையிலிருந்து தண்ணீர் சென்னைக்குத் திருப்பிவிடப்படுகிறது. இந்தத் தண்ணீர் 406 கி.மீ. தூரம் பயணித்து சென்னையை வந்தடைகிறது. ஊத்துக்கோட்டையில் தமிழகத்திற்குள் நுழையும் நீர், பூண்டி ஏரிக்குத் திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து சென்னை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 12 டி.எம்.சி. கிடைக்கவேண்டும். ஆனால் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து 2011-12ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 8.19 டி.எம்.சி. நீர் பெறப்பட்டது. 

இதற்கு அடுத்தபடியாக சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நோக்கத்தில் மீஞ்சூரிலும் நெம்மேலியிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த இரு இடங்களிலும் தலா 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை தினமும் சுத்திகரிக்க முடியும். 

இவைதவிர, நெய்வேலி, பூண்டி, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்தும் நீர் இறைக்கப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. 

குவாரி தண்ணீர்

தற்போது, மேலே சொன்ன பல இடங்களிலும் தண்ணீர் கிடைப்பது குறைந்திருப்பதால், சென்னையைச் சுற்றியுள்ள கல் குவாரிகளில், தேங்கியுள்ள மழை நீரைச் சுத்திகரித்தும் குடிநீர் வாரியம் வழங்கிவருகிறது. 

படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு நாளைக்கு 850 மில்லியன் லிட்டர் நீரை வழங்க வேண்டிய குடிநீர் வாரியம், பற்றாக்குறையின் காரணமாக ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லியன் லிட்டர் நீரையே விநியோகித்துவருகிறது. இதில் குழாய்கள் மூலம் 432.89 மி.லிட்டர் நீரும் லாரிகள் மூலம்   69.69 மி.லிட்டர் நீரும் விநியோகிக்கப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக பூண்டி, தாமரைப்பாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 116.45 மி.லிட்டர் நீரும் நெம்மேலி கடல்நீர் குடிநீர் ஆக்கும் ஆலையிலிருந்து 92.12 மி.லிட்டர் நீரும் எடுத்து விநியோகிக்கப்படுகிறது. வீராணம் ஏரியிலிருந்து 97.6 மி.லிட்டர் நீரும் நெய்வேலியிலிருந்து 32.75 மி.லிட்டர் நீரும் வழங்கப்பட்டுவருகிறது. 

மீதமுள்ள நீர், எரிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள், நெய்வேலி சுரங்க நீர், பரவனாறு ஏரி,  கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழை நீர் ஆகியவற்றின் மூலம் பெறப்படுகிறது. 

தொடர்ந்து, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள், கல்குவாரிகளில் எந்த அளவுக்கு நீரைப் பெறமுடியும் என்ற சோதனையிலும் சென்னைக் குடிநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது. தவிர, கழிவுநீரைக் குடிநீராக்கும் திட்டமும் விரைவில் செயல்படவிருக்கிறது. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :