டி.டி.வி. தினகரன் - தங்க தமிழ்ச் செல்வன் மோதல்: பின்னணி என்ன?

டி.டி.வி. தினகரன் - தங்க தமிழ்ச் செல்வன் மோதல்: பின்னணி என்ன? படத்தின் காப்புரிமை Facebook

டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்டச் செயலாளரும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான  தங்கத் தமிழ்ச் செல்வன், தினகரனை கடுமையான வார்த்தைகளால் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தங்க தமிழ்ச்செல்வன் வேறு இடத்திற்குச் செல்ல முடிவுசெய்து இவ்வாறு பேசுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருக்கிறார்.  

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி ஒருவருடன் தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி. தினகரன் குறித்துக் கடுமையாகப் பேசும் ஆடியோ ஒன்று திங்கட்கிழமையன்று வெளியானது. அந்த ஆடியோவில், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவர் பேசியுள்ளார். மேலும், "நான் விஸ்வரூபம் எடுத்தா அழிஞ்சு போவீங்க. நீ உட்பட அழிஞ்சு போவ. நான் நல்லவன்.  தேனி மாவட்டத்துல கூட்டம் போடுற.. நாளைக்கு நான் மதுரை மாவட்டத்துல கூட்டம் போடுறேன்.  பாரு. பாரு.. என்ன நடக்குதுன்னு பாரு. உங்க டிடிவி தினகரன்கிட்ட சொல்லீரு.. இந்த மாதிரி அரசியல் பண்ணவேணாம். நீ தோத்துப் போவ.. ஜெயிக்க மாட்ட" என்று பேசியிருந்தார். 

அவரது இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்குப் பிறகு ஊடகம் ஒன்றிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், திருநெல்வேலி, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் குறித்து தான் வைத்த விமர்சனங்களின் காரணமாக, டி.டி.வி. தினகரனின் தூண்டுதலின் பேரில் தன்னைத் தாக்கி சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியாவதாக குற்றம்சாட்டினார். 

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரனின் வீட்டில் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் வேறு இடத்திற்குச் செல்ல முடிவுசெய்துவிட்டதாகக் கூறினார். 

"இந்த ஆலோசனைக் கூட்டம் திடீர் ஆலோசனைக் கூட்டம் அல்ல. ஏற்கனவே திட்டமிட்டதுதான். சில நாட்களுக்கு முன்பு எஃப்.எம். ரேடியோ ஒன்றுக்கு சில நிர்வாகிகளைக் குறைகூறி தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டி குறித்து நிர்வாகிகள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை அழைத்து விசாரித்தேன். கேள்விகேட்டவர் தாறுமாறாகக் கேட்டுவிட்டதாக தமிழ்ச்செல்வன் பதிலளித்தார்.  'கேள்விக்குப் பதில்சொல்ல முடியாவிட்டால் ஏன் போய் மாட்டிக்கொள்கிறீர்கள்' என்று கேட்டேன். இனிமே டிவிகளுக்கு பேட்டியளித்தால் ஒழுங்கா கொடுங்க. இல்லாவிட்டால் நான் உங்களை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்தும் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தும் வேறு ஆளை போட வேண்டியிருக்கும் என்று கூறினேன்" என்றார் டிடிவி தினகரன்.

"கலைராஜனை நீக்கியதுபோல இவரை நீக்காதது ஏன் என்கிறார்கள். எங்களுக்குத் தேவைப்படும்போதுதான் நீக்குவோம். ஏப்ரல் 19ஆம் தேதி எங்கள் கட்சிக்கு பொதுச் செயலாளரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுத்தோம். தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம். மற்ற நிர்வாகிகளை பிறகு அறிவிப்போம் எனச் சொல்லியிருந்தோம். கட்சியைத் தேர்தல் அணையத்தில் பதிவுசெய்யும் வேலை நடப்பதால் தேர்தல் ஆணையத்திற்கு இந்த நியமனங்கள் குறித்த தகவல்களை அனுப்பியிருந்தோம். தலைமைக் கழக நிர்வாகிகளைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு அணியாக இருந்தபோது இருந்தவர்கள்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்களை முறையாக நியமிக்கும் அறிவிப்பை முதலில் வெளியிட வேண்டுமென நினைத்தேன். ஆகவே, அதற்கு முன்பாக  ஒருவரைக் கட்சியைவிட்டு நீக்கும் அறிவிப்வை வெளியிட வேண்டாம் என நினைத்தேன். மற்றபடி யாரைக் கண்டும் எனக்குப் பயமில்லை. தயக்கமில்லை"  என்று கூறினார்.

வரும் வாரத்தில், அதாவது ஜூலை முதல் வாரத்தில் பெங்களூர் சென்று சசிகலாவைச் சந்தித்துவிட்டுவந்து புதிய நிர்வாகிளின் பட்டியலை அறிவிக்கப் போவதாகவும் தினகரன் தெரிவித்தார். 

தன்னைத் தங்க தமிழ்ச்செல்வன் சந்திக்கவந்தபோது, வேறு ஏதாவது முடிவெடுக்க விரும்பினால் அதைச் செயல்படுத்தும்படி கூறியதாகவும் கடந்த வாரமே பத்திரிகை ஒன்றில், அவர் ஒரு கட்சியில் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைக் கேட்பதாக செய்திகள் வெளிவந்ததாகவும் டி.டி.வி. தினகரன் சுட்டிக்காட்டினார்.

தங்களைப் பிரிந்துசென்ற ஆர்.பி. ஆதித்தன், பாப்புலர் முத்தைய்யா ஆகியோரையும்கூட தான் கட்சியைவிட்டு நீக்கவில்லையென்றும் அப்படி அவர்கள் விலகிச் சென்றால் புதிய நிர்வாகிகளை நியமிக்க தனக்கு வசதியாக இருக்குமென்று நினைப்பதாகவும் கூறிய தினகரன், தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் இப்படிப் பேட்டியளித்தால் பதவியிலிருந்து நீக்க வேண்டியிருக்கும் என எச்சரித்ததாகவும் தெரிவித்தார். 

படத்தின் காப்புரிமை Facebook

தலைமை தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பதாக தங்க தமிழ்ச் செல்வன் குற்றம்சாட்டியிருப்பது குறித்துக் கேட்டபோது, அவர் வேறு இடத்திற்குச் செல்ல முடிவெடுத்துவிட்டு அவ்வாறு கூறுவதாக தினகரன் பதிலளித்தார். அவர் எப்போதுமே இதுபோல செயல்படுபவர்தான் என்றும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்திலும் முதலில் ஒன்று பேசிவிட்டு, பிறகு மாற்றிக்கொண்டவர் என்றும் கூறிய தினகரன், தன்னிடம் நேரில் எதையும் சொல்லாமல் வெளியில் சென்று பேட்டியளிப்பார் என்றும் வாய்க்கு வந்ததைப் பேசுவார் என்றும் பல நாட்களாக தான் அவரை எச்சரித்து வந்ததாகவும் தெரிவித்தார். 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், இடைத்தேர்தலில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்று கூறியதை தினகரன் ஏற்கவில்லையென தங்க தமிழ்ச்செல்வன் கூறியது குறித்துக் கேட்டபோது, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்போதே இதைச் சொல்லியிருக்கலாமே எனக் கேள்வியெழுப்பினார்.   

தன்னைத் தாக்கிப் பேசும்படி அவருக்கு சொல்லப்பட்டிருப்பதாலேயே அவர் அப்படிப் பேசுவதாகவும் விரைவிலேயே அவர் என்ன முடிவெடுத்திருக்கிறார் என்பது தெரியவருமென்றும் தினகரன் கூறினார். ஊடகங்கள் 'பில்டப்' கொடுத்ததை நம்பி தங்க தமிழ்ச்செல்வன் வீணாகப்போய்விட்டதாகவும் தினகரன் கூறினார். 

தனக்கு ஆதரவளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ததால், சபாநாயகர் தனபால் மீது தி.மு.க. கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப்போவதாகவும் தினகரன் கூறினார்.  

நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிட்ட  டேவிட் அண்ணாதுரை, உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பரங்குன்றம் தொகுதியில்  அ.ம.மு.க சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான மகேந்திரன் ஆகிய இருவர் முன்னிலையில் தேனியில் சமீபத்தில் ஒரு கூட்டம் போட்டப்பட்டதாகவும் தேனி மாவட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக வேறு நபரை நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதாலேயே தங்க தமிழ்ச்செல்வன் ஆத்திரமடைந்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகி செல்லப்பாண்டியனை அழைத்து தங்க தமிழ்ச்செல்வன் பேசிய  ஆடியோவே தற்போது வெளிவந்திருக்கிறது.

58 வயதாகும் தங்க தமிழ்ச்செல்வன், தேனி மாவட்டம் நாராயணத்தேவன் பட்டியைச் சேர்ந்தவர். 2001ஆம் ஆண்டில் அ.தி.மு.க. சார்பில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதா டான்ஸி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டபோது அவர் போட்டியிட ஏதுவாக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பிறகு, 2002ஆம் ஆண்டில் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். 

2011, 2016ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்ற, தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது சசிகலா - தினகரன் பிரிவுக்கு ஆதரவளித்தார். தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம்செய்யப்பட்டபோது, தங்க தமிழ்ச்செல்வனும் பதவியிழந்தார். 

இதற்குப் பிறகு இடைத்தேர்தலில் உடனடியாக போட்டியிட வேண்டுமென தங்க தமிழ்ச்செல்வன் விரும்பிய நிலையில், இந்த விவகாரத்தை தினகரன் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல விரும்பினார். அப்போது முதலே, தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுடன் அவ்வப்போது முரண்பட்டுவந்தார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்