சாதி ரீதியாக மாணவர்களை துன்புறுத்தியதாக புகார்: தலைமை ஆசிரியர் பணிநீக்கம்

தலைமை ஆசிரியர் பணிநீக்கம்

கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்களை சாதி ரீதியாக துன்புறுத்தியதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில், கரட்டு மேடு கந்தசாமி நகர் என்னும் இடத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் திங்கள் கிழமை (24.06.2019) பெற்றோருடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தி என்பவர் பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்களை சாதியின் பெயரால் இழிவுபடுத்துவதாகவும், கழிப்பறைகள் சுத்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரியின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு இன்று ஆசிரியை ஜெயந்தியின் மீது பணி இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புகார் அளித்த மாணவர் ஒருவரின் பெற்றோர் கூறுகையில், இந்த ஆசிரியை பள்ளிக்கு நான்கைந்து வருடங்களாகவே இந்த பிரச்சனைகள் தொடர்ந்து நடக்கின்றது. காலனியில் இருந்து வருகின்ற மாணவர்களை சாதியின் பெயரை சொல்லி திட்டுவதாகவும், அடிப்பதாகவும் பிள்ளைகள் வீட்டிற்கு வந்து அழுகின்றனர். இது குறித்து கேட்டால் முதலில் அப்படியெல்லாம் இல்லை என்றவர் ,இப்பொழுது கேட்டால் எங்களையும் மிரட்டுகிறார் என்றார்.

இதனால் சிலர் இந்தப்பள்ளியில் சேர்ப்பதற்கு பயந்து கொண்டு மூன்று கிமீ தள்ளி உள்ள அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.

இது குறித்து பேசிய ஆசிரியை ஜெயந்தி, என் மீது வீண்பழி சுமத்துகின்றனர். கழிப்பறையினை யார் பயன்படுத்தினாலும், பயன்படுத்தியவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்றுதான் கூறினேன். நான் பாகுபாடு பார்க்கவில்லை,இப்பொழுது மன்னிப்பு கேட்கச் சொன்னால் அதற்கு தயாராக உள்ளேன் என்றார்.

மாவட்ட கல்வி அதிகாரி கீதா அவர்களிடம் பேசிய பொழுது , மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தவுடனேயே நாங்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினோம். விசாரணையில் அந்த ஆசிரியை மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய களத்திற்கு வந்து இருந்த சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிரிடம் பேசிய பொழுது, நிறைய குழந்தைகளிடம் பேசினோம். சாதியின் பெயரை சொல்லி இழிவு படுத்துவது, இந்த மாணவர்கள் அருகில் வந்தால் மூக்கை பொத்திக்கொள்வது, நீயெல்லாம் படித்து என்ன செய்ய போகிறாய் என்று நிறைய துன்புறுத்தல்களை அந்த பிள்ளைகள் சந்தித்து உள்ளனர்.

இந்தப் பள்ளியில் படித்து முடித்து வெளியில் சென்ற தலித் மாணவர்களிடமும் பேசினேன். நாங்கள் காலையில் வந்தவுடன் எங்களைத்தான் கழிப்பறைகளை சுத்தம் செய்ய சொல்வார், ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிப்பறையினையும் நாங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்கின்றனர். அத்தனை குழந்தைகளும் சேர்ந்து எப்படி பொய் சொல்வார்கள் என்றார். மேலும், அவருக்கு நெருக்கமாக இருந்த ஆசிரியை ஒருவரையும் சந்தித்தேன், நான் தலித் என்று தெரிந்தவுடன் ஜெயந்தி என்னுடன் பேசுவதுவையே நிறுத்திவிட்டார் என்று அந்த ஆசிரியர் கூறுகிறார். அரசும் தவறு நடந்து இருப்பதனால் தானே நடவடிக்கை எடுத்து இருக்கின்றது. ஆனால், பள்ளியில் இது போன்ற சாதி வன்முறைகள் நடப்பது , பணி நீக்கம் என்பதனை எல்லாம் தாண்டி ஒரு கிரிமினல் குற்றம் என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்