மேட்டுப்பாளையம் சாதிய ஆணவப் படுகொலை: தாக்கப்பட்ட தலித் பெண்ணும் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் ஆணவப் படுகொலை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாதியை மீறி காதல் திருமணம் செய்ய முயன்றதால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த பெண்ணும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாக்கில் உயிரிழந்தார்.

அவருக்கு தலை மற்றும் கண்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

கொலை செய்ததாக ஏற்கனவே ஒருவர் காவல் துறையிடம் சரணடைந்துள்ள நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என்று கோரி பெண்ணின் உறவினர்கள் மற்றும் சில அமைப்பினர் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

"எங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம்" என்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் தங்களை மிரட்டியதாக உயிரிழந்த பெண்ணின் தாய் அமுதா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Image caption மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்த பெண்ணின் தாய் அமுதா (இடது) உடன் உடுமலை சங்கரின் சாதிய ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்டவரும் செயல்பாட்டாளருமான கௌசல்யா.

உயிரிழந்த பெண் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார் இடைநிலைச் சாதி ஒன்றைச் சேர்ந்த கனகராஜின் அண்ணன் வினோத் குமார் என்பவர்.

"மிரட்டிய மறுநாளே கொலை"

மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீரங்கராஜன் ஓடை பகுதியினை சேர்ந்த கனகராஜ் தான் காதலித்த 16 வயதான கண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்னை திருமணம் செய்து கொள்ள வெண்டும் என்ற எண்ணத்தில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேறி அந்த பெண்ணை, தான் குடியிருக்கும் பகுதிக்கு அழைத்து வந்தார்.

அன்றைய தினம் கனகராஜ் - கண்மணி ஆகிய இருவரையும் வினோத் தாக்கியதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, கண்மணி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

"காதலித்த இருவரும் தத்தம் வீடுகளை விட்டு வெளியேறியது தெரிந்ததும் எங்களை வீடு தேடி வந்து சிலர் மிரட்டிய மறுநாளே கொலை நிகழ்ந்துள்ளது. அப்போது வினோத் அவர்களுடன் வரவில்லை என்றாலும், கொலை குறித்து அவர்களுக்கு முன்னரே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. எனவே அவர்களும் கைது செய்யப்பட வேண்டும்," என்று பெண்ணின் உறவினரான சிவா என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"அவர்களை விட்டிருந்தால் எங்காவது சென்று உயிரோடு இருந்திருப்பார்கள். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கும், தொடர்புள்ளவர்களுக்கும் தக்க தண்டனை கிடைக்க வேண்டும். எனது மகளே இம்மாதிரியான குற்றத்தில் பாதிக்கப்படும் கடைசி நபராக இருக்க வேண்டும்," என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் தெரிவித்தார்.

"வினோத்தை தவிர வேறு இருவர் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது உறுதியாகவில்லை. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்..

Image caption கனகராஜ்

செவ்வாய்க்கிழமை வினோத்குமார் சரணடைந்த நிலையில் அவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்தது.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளிப்பாளையம் ரோடு பகுதியில் இருக்கும் துப்புறவு பணியாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்