ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆவணமாக பிபிசி தமிழ் காட்சிகள் ஏற்பு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பான பிபிசி தமிழ் நேரலை காட்சிகள் மற்றும் செய்தி தொகுப்புகள் விசாரணைக்குத் தேவையான ஆவணமாக பயன்படும் என தமிழக அரசின் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

2018ல் மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நூறாவது நாள் போராட்டத்தை பொது மக்கள் நடத்தியபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் கூடிய மக்களை கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் 13 பொது மக்கள் பலியான சம்பவத்தில் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் என்றும், துப்பாக்கிச்சூடு நடைபெறவுள்ளது என பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்தன.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியின் இணைப்பு:

ஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலி

கடந்த ஒரு வருடமாக காயமடைந்தவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினர், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என 300க்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களை பெற்று ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.

பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேரலையில் துப்பாக்கிச்சூட்டின்போது மக்கள் சிதறி ஓடிய காட்சிகள், வண்டிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட காட்சிகள், காயமடைந்த மக்கள், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட காட்சிகள் உள்ளிட்டவை பதிவாகின.

ஆவணமாக வழங்கப்பட்டுள்ள காணொளிகள்

போராட்டம் தொடங்கிய பனிமய மாதா கோவிலில் இருந்து மாவட்ட ஆட்சியர் வளாகம் வரையில், மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து வந்தது, துப்பாக்கிச்சூடு நடந்த காட்சிகள், கற்கள் வீசப்பட்ட காட்சிகள் உள்ளிட்டவை அதில் அடங்கும். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் நிலைகுறித்து கூறிய செய்திகளை பிபிசி தமிழ் தொடர்ந்து செய்தியாக பதிவு செய்தது.

துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட பிரத்யேக காட்சிகள் விசாரணைக்குத் தேவை என்று கூறப்பட்டதால், அவை நீதிபதி அருணா ஜெகதீசனிடம் அளிக்கப்பட்டன.

தற்போதுவரை நடைபெற்ற விசாரணையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மேல்சிகிச்சைக்கான மருத்துவச்செலவுகளை அரசிடம் பெற்று தந்துள்ள ஆணையம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு ஏற்ற வேலைவாய்ப்பினை வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: