ரத்னகிரி அணை உடைந்து 9 பேர் பலி - தற்போதைய நிலை என்ன?

இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி: மகாராஷ்டிராவில் அணை உடைந்தது - 9 பேர் பலி

படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption போவாய் ஏரி

மகாராஷ்டிர மாநிலம், கொங்கன் பிராந்தியத்தில் பலத்த மழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் பெருக்கு ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளனர் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை 20 லட்சம் கன மீட்டர் கொள்ளளவு கொண்டது. இடைவிடாத மழை காரணமாக அணை முழுவதும் நிரம்பியது.

அபாய அளவை தாண்டிய அணை, செவ்வாய்க்கிழமை இரவு உடைந்தது.

இதையடுத்து, அணையையொட்டி அமைந்துள்ள 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. 3 பெண்கள் உள்பட 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 16 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை BBC / SWATIPATILRAJGOLKAR

ரத்னகிரி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் விஷால் கெய்க்வாட் கூறுகையில், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும், போலீஸாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு போலீஸார் இடமாற்றம் செய்து வருகின்றனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார்.

ஏற்கெனவே அணையில் விரிசல் ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டிவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி, தவறு நேர்ந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார். அத்துடன், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்துக்கு ஃபட்னவீஸ் உத்தரவிட்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமலர்: ரூ.100 கோடி அபராதம்; மேகாலயா அரசுக்கு உத்தரவு

சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் செயல்படுவதை தடுக்கத் தவறிய, வடகிழக்கு மாநிலமான மேகாலயா, பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின்படி, 100 கோடி ரூபாய் அபராத தொகையை உடனடியாக செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Fairfax Media

மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான, தேசிய மக்கள் கட்சி அரசு அமைந்துள்ளது. இங்கு, கிழக்கு ஜெயிந்தியா மலை மாவட்டத்தில் உள்ள, சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய, 15 பேர், கடந்த ஆண்டு இறுதியில் உயிரிழந்தனர். இதில், இரண்டு உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. இந்நிலையில், மாநிலத்தில் இயங்கி வரும், சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்களை மூடக் கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் செயல்படுவதை தடுக்க தவறியதால், மேகாலயா அரசுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, மாநில அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை எடுத்துச் செல்வதற்கு, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள், அசோக் பூஷண், கே.எம். ஜோசப் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின்படி, 100 கோடி ரூபாய் அபராத தொகையை, மேகாலயா அரசு உடனடியாக செலுத்த வேண்டும். அனுமதி பெறாமல் இயங்கி வரும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிலக்கரியை, 'கோல் இந்தியா' நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலக்கரியை, ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை, மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அமர்வு உத்தரவிட்டுள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

தி இந்து: ஹைட்ரோகார்பன் திட்டம்: சட்டமன்றத்தில் அதிமுக-திமுக மாறி மாறி குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை Getty Images

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு 2011ஆம் ஆண்டு திமுகதான் அனுமதி அளித்தது என்று அமைச்சர் சி.வி சண்முகம் சட்டப்பேரவையில் கூறியதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை எதிர்த்த திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, திமுக இத்திட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் இது பற்றிய ஆய்வுக்கே அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று திமுக உறுப்பினர்கள் மற்றும் சட்ட அமைச்சர் சண்முகத்துக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சமீபத்தில் இதனை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றதாகவும் ராஜா தெரிவித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் சண்முகம், ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த "இதுவரை தமிழக அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை, இனியும் வழங்காது" என்று குறிப்பிட்டார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றும் கோரிக்கை நிராகரிப்பு

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை 'பங்களா' என்று மாற்ற வேண்டும் என்ற அம்மாநில அரசின் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டுமானால், அரசியல் சாசனத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதோடு, பல காரணிகளையும் கருத்தில் கொண்டே இதனை செய்ய முடியும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்துக்கு பெயர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு முதல்வர் மம்தா பேனர்ஜி, பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: