‘டிக்டாக்’ மூலம் காணாமல்போன கணவரை கண்டுபிடித்த மனைவி

டிக்டாக் காணொளியால் கைவிட்டு சென்ற கணவரை கண்டுபிடித்த மனைவி

விழுப்புரம் மாவட்டத்தின் வழுதரெட்டியை சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரை கண்டுபிடித்து மீண்டும் ஒன்றுசேர டிக்டாக் செயலி உதவியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபிரதா, கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் என்பவரை திருணம் செய்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சுரேஷ் ஒருநாள் வீட்டுக்கு வரவில்லை.

கணவரை தேடிய ஜெயபிரதா தனது முயற்சிகள் அனைத்து பயனளிக்காததால், விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை (ஃஎப்ஐஆர்) பதிவு செய்துள்ளார்.

காவல்துறையினரும் சுரேஷை தேடி வந்துள்ள நிலையில், சுரேஷ் எங்கிருந்தார் என்பது தெரியாமல் இருந்தது.

சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், இந்த டிக்டாக் காணொளியை பார்த்த ஜெயபிரதாவின் உறவினர்கள், அந்த காணொளியில் இருப்பவர் சுரேஷ் என இனம் கண்டுள்ளனர்.

திருநங்கை ஒருவருடன் இருப்பது தனது கணவர் சுரேஷ்தான் என்பதை உறுதி செய்த ஜெயபிரதா, அந்த காணொளியை விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

திருநங்கையுடன் சுரேஷ் இருப்பதால், விழுப்புரத்திலுள்ள திருநங்கை அமைப்புடன் தொடர்பு கொண்ட காவல்துறை, அந்த காணொளியிலுள்ள திருநங்கை பற்றிய விவரம் கேட்டுள்ளது.

அந்த திருநங்கை ஓசூரில் வாழ்பவர் என்று அந்த அமைப்பினர் தெரிவித்த தகவலின் உதவியோடு, ஓசூர் சென்ற காவல்துறை சுரேஷை விழுப்புரம் அழைத்து வந்து குடும்பத்தோடு சேர்த்து வைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திருமாலை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டது.

"இந்த வழக்கு விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் 2017ம் ஆண்டு கணவரை காணவில்லை (மேன் மிஸ்சிங்) என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் விட்டு சென்ற சுரேஷ், ஓசூரில் தனது தாயோடு வசித்து வந்துள்ளார். திருநங்கையோடு இருந்தபோது புகைப்படம் எடுத்துள்ளனர். அது பின்னர் டிக்டாக்கில் பதிவிடப்பட்டுள்ளது"

"சுரேஷை டிக்டாக்கில் பார்த்த ஜெயபிரதாவின் உறவினர்கள் காவல்துறையிடம் தெரிவித்ததும், காவல்துறையினரும், உறவினரும் சேர்ந்து ஓசூர் சென்று சுரேஷை அழைத்து வந்து குடும்பத்தோடு சேர்த்து வைத்துள்ளனர்" என்று திருமால் தெரிவித்தார்.

"அந்த திருநங்கையை சுரேஷ் திருமணம் செய்யவில்லை" என்றும் அவர் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்னல், பல விமர்சனங்களை எதிர்கொண்ட இந்த டிக்டாக் செயலிக்கு, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றம் அளித்த நிபந்தனைக்கு டிக்டாக் செயலி நிறுவனம் ஒப்புக்கொண்ட பின்னர் இந்த தடை விலக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்