தமிழகத்தில் 1848 அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள்

1848 அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் படத்தின் காப்புரிமை BSIP

இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி - ஆளில்லாத அரசுப் பள்ளிகள்

தமிழகத்தில் 1,848 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாக கல்வித்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற மாணவர்களும் கல்வி பயிலவேண்டும் என்பதற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது அரசுப் பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்களின் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது.

இந்தநிலையில் தொடக்கக் கல்வித்துறை எடுத்த கணக்கெடுப்பில், 45 பள்ளிகளில் ஒரு மாணவரும் இல்லை, 76 பள்ளிகளில் தலா ஒரு மாணவரும், 82 பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்கள் என மொத்தம் 1,848 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகவே பயின்று வருகின்றனர்.

மத்திய அரசின் விதிமுறைகளின்படி மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்தப் பள்ளியின் பட்டியல்களை ஓரிரு நாள்களுக்குள் பெறுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமலர்: ஹெல்மட் அணியாத போலீஸார் மீது நடவடிக்கை

'காவல் துறையில் பணிபுரியும், ஆண், பெண் போலீசார் என, அனைவரும், கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும். மீறினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Hindustan Times

'தமிழகத்தில், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்வோர், கட்டாயம், ஹெல்மெட் அணிய வேண்டும்' என்ற உத்தரவை, 2016, ஜூலை, 1ல், தமிழக அரசு, அமல்படுத்தியது. இவற்றை, 75 சதவீதம் பேர், பின்பற்றாததால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.'போக்குவரத்து சட்ட விதிமுறைகளை, போலீசார் கடுமையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், கே.கே.ராஜேந்திரன் என்பவர், மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' அரசுக்கு, சமீபத்தில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதனால், மாநிலம் முழுவதும், ஹெல்மெட் சோதனையை, போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னையில், ஹெல்மெட் அணியாதது உட்பட, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரின் முகவரிக்கு, அபராத தொகை செலுத்துவற்கான, 'சம்மன்' போலீசாரால் அனுப்பப்படுகிறது.போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் போலீசாரும், காலை, 7:00 மணிக்கு பணிக்கு வரும் போது, ரோல்காலில், 'ஹெல்மெட் அணிந்து, இரு சக்கர வாகனம் ஓட்டுவேன்' என, உறுதிமொழி எடுக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹெல்மெட் அணியாமல், பணிக்கு வரும் போலீசாரின் வாகன சாவியை பறிமுதல் செய்ய வேண்டும். அவர், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற, ஹெல்மெட் வாங்கி வந்து காட்டினால் மட்டுமே, பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் எனவும், உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி இருந்தும், மாநிலத்தின் பல பகுதிகளில், திருந்தாத போலீசார் பலர், ஹெல்மெட் அணிவது இல்லை என, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, போலீஸ் கமிஷனர்கள், மண்டல, ஐ.ஜி.,க்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, டி.ஜி.பி., திரிபாதி, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழக காவல் துறையில் பணிபுரியும், ஆண், பெண் போலீசார் என, அனைவரும், ஹெல்மெட் கட்டாயம் அணிந்தே, இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும்; பின்னால் அமர்ந்து செல்ல வேண்டும்.சீருடையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். போக்குவரத்து விதிகளையும், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.மீறுவோர் மீது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி.,க்கள் மற்றும், மாவட்ட எஸ்.பி.,க்கள், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தி இந்து - பொறியாளரை கட்டிவைத்த முன்னாள் முதல்வர் மகன்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆகாஷ் விஜய்வர்கியா மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கைதாகி பிணையில் வெளியில் வந்துள்ள நிலையில் அதே போன்றதொரு சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.

முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவின் மகனும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான நிதேஷ் ரானே சிந்துதுர்க் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் உதவி பொறியாளர் ஒருவரை தெருக்களில் இழுத்துச் சென்று, பாலம் ஒன்றில் கட்டி வைத்து, தமது ஆதரவாளர்கள் முன்னிலையில் பக்கெட் ஒன்றில் இருந்த சேற்றை அவர் மீது கொட்டியுள்ளார்.

பிரகாஷ் ஷெடேகர் எனும் அந்தப் பொறியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நிதேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காமல் மக்கள் துன்புறவுதால், நீங்களும் அதை அனுபவிக்க வேண்டும் என்று நிதேஷ் அந்த பொறியாளரிடம் கூறி அவர் மீது சேற்றை கொட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மக்கள்தொகை அதிகரிப்பில் வீழ்ச்சி

படத்தின் காப்புரிமை NurPhoto

அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பெரும் அளவில் குறையும் என்று பட்ஜெட்டை முன்னிட்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2021ஆம் ஆண்டில் முழு கருவள வீதம் ( மகப்பேறு வயதுடைய பெண்களுக்கு சராசரியாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை) 2.1 என்ற அளவைவிட குறையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை அதிகரிக்கும் வேகம் குறைவதால் 2030களில் சில மாநிலங்களில் முதியவர்களின் எண்ணிக்கை பெருகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்