பட்ஜெட் 2019-20 முக்கியத் தகவல்கள்: பான் இல்லாதவர்களுக்கு ஆதார், பணமாக எடுத்தால் வரி

நிர்மலா சீதாராமன் படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய அரசின் 2019-2020ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சில முக்கியத் தகவல்கள்:

 • 2013-14 6.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் நேரடி வரி வருவாய், 78% அதிகரித்து 2018-19இல் 11.37 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
 • பான் அட்டை இல்லாதவர்கள் ஆதார் எண்ணை தெரிவித்து வரிகளை செலுத்தலாம்.
 • ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய மதிப்புகளில் புதிய நாணயங்கள் வெளியிடப்படும்.
 • இரண்டு கோடி முதல் ஐந்து கோடி மற்றும் ஐந்து கோடிக்கும் அதிகமாக வரி வருவாய் உள்ளவர்களுக்கு சர்சார்ஜ் முறையே 5% மற்றும் 7% ஆக உயர்த்தப்படுகிறது.
 • பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரி லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்படுகிறது.
 • தங்கம் மற்றும் பிற விலை உயர்ந்த கனிமங்கள் மீதான கலால் வரி 10%இல் இருந்து 12.5% ஆக உயர்த்தப்படுகிறது.
 • தொழில் நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்க ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேல் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டால் 2% வரி பிடித்தம் செய்யப்படும்.
 • பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1,50,000 கோடி ரூபாய் நிதி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
 • ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் 2019-2020இல் 1,05,000 கோடி ரூபாய் திரட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
 • 80,250 கோடி ரூபாய் மதிப்பில் 1,25,000 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.
 • பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் மூலதனமாக வழங்கப்படும்.
 • உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

"எல்லா அம்சங்களிலும் வளர்ச்சி"

பட்ஜெட்டுக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் தெரிவித்த 5 முக்கிய கருத்துக்கள்

2019-20 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த சீதாராமன், அவர்கள் இந்த அறிக்கை தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார். அதில் தெரிவித்த 5 முக்கிய கருத்துக்கள்.

 1. இந்தியாவின் கிராமபுற மற்றும் நகர்புற வளர்ச்சி, இளைஞர்கள், சுற்றுச்சூழல், பெண்கள் என சமூகத்தின் எல்லா அம்சங்களிலும் வளர்ச்சி கொண்டு வரும் நோக்கத்தில் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது.
 2. பெண்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் பயன்பெறும் திட்டத்தோடு இந்த நிதிநிலை அறிக்கையின் அம்சங்கள் அமைந்துள்ளன.
 3. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரி லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்திருப்பது வரி செலுத்தும் தனிநபர்களை பாதிக்காமல் நிதிதிரட்டும் முறையாகும்.
 4. பாதுகாப்பு துறையில், பென்சன், கேப்பிட்டல் அவுட்லெட் மற்றும் பாதுகாப்பு ரெவன்யூ பிரிவில் இதற்கு முன்னர் வழங்கப்பட்டதைவிட கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பில் சிவில் துறைக்கு மட்டும் முந்தைய ஒதுக்கீட்டை சரிசெய்து சற்று குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு 0.25 சதவீதம் அதிமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 5. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டமாக முதலீடுகளை ஈர்ப்பது, புதிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள், மேக் இன் இந்தியா திட்டம், தொழில் திறமை மேம்பாட்டு பயிற்சி ஆகியவை உள்ளது.

வர்த்தக சபை கருத்து

தொழில்துறையினரின் 60 சதவீத எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளதாகவும் இருப்பினும் ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் இந்திய தொழில் வர்த்தக சபை தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் லட்சுமி நாராயணசாமியிடம் கேட்ட போது போதுபுதிய தொழில் துவங்குவோருக்கு சலுகைகள் என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது எனவும் அதே சமயம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய அறிவிப்புகள் இல்லை எனவும் அவர் கூறினார்.

சிறு, குறு தொழில்துறையினருக்கு புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாகவும் பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வு காரணமாக அதன் விலை 2 ரூபாய் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இது தொழில் துறையினருக்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்திய வர்த்தகம் 3 டிரில்லியன் டாலர் வர்த்தமாக உயரும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது என கூறிய அவர் இதனால் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் பயனடையும் என்றும் ஒரே நாடு ஒரே மின் கிரிட் என்ற அறிவிப்பால் மின் கட்டணம் தமிழகத்தில் 1.50 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.

மேலும் பிளாஸ்டிக் மீதான இறக்குமதி வரி அதிகரித்துள்ளதால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் மின் சக்தியில் இயங்கும் ஈ - வாகனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் அவர் கூறினார். ஒட்டுமொத்தமாக தொழில்துறையினரின் 60 சதவீத எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ள போதும் ஜி.எஸ். டி வரிவிதிப்பில் கோரப்பட்ட ஜாப் ஆர்டர்களுக்கான வரிவிதிப்பு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :