நிர்மலா சீதாராமன் கொண்டு சென்ற தோல் பை: சூட்கேஸ் தவிர்த்தது பற்றி விளக்கம்

நிதிநிதி அறிக்கை படத்தின் காப்புரிமை AFP

நாடாளுமன்றத்தில் முதல் முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்ற இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சூட்கேசுக்குப் பதில் தோல் பையில் இந்த நிதிநிலை அறிக்கையை கொண்டு சென்றது சுவாரசியமான விவாதங்களை கிளப்பியுள்ளது.

வழக்கமாக நிதியமைச்சர்கள் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லப் பயன்படுத்தும் சிவப்பு சூட்கேஸை நிர்மலா சீதாராமன் தவிர்த்துள்ளார்.

தோல் பையில் நிதிநிலை அறிக்கையை சீதாராமன் கொண்டு வந்தது, மேற்குலக சிந்தனையின் அடிமைதனத்தில் இருந்து விடுபடுவதை அடையாளப்படுத்துகிறது என்று சீதாராமனின் பொருளாதார தலைமை ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோதி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள காலத்தில் சமர்பிக்கப்படும் முதலாவது நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதி, புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள், உள்கட்டுமானங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் உள்பட பல நடவடிக்கைகளை இந்த நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பிரதமராக இருந்தபோது, 1970-71ம் ஆண்டு நிதியமைச்சராகவும் இருந்த இந்திரா காந்திக்கு பின்னர், நிதியமைச்சர் பதவியை வகிக்கும் முதல் பெண், நிர்மலா ஆவார்.

இவர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தவுடன், முதலாவது முழுநேர நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளதை தெரிவித்து நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா அவரை பாராட்டினார்.

ஆனால், வழக்கமாக சூட்கேஸில் கொண்டு செல்லப்படும் நிதிநிலை அறிக்கை, தோல் பையில் கொண்டு செல்லப்பட்டது, சமூக வலைதளங்களில் விவாதத்தை தோற்றுவித்துள்ளது.

இந்தியப் பராம்பரியத்தை பாதுகாப்பது பற்றி பலரும் பாராட்டியுள்ள நிலையில், பிறர் இதனை கேலியும் செய்துள்ளனர்.

மாட்டுவண்டியில் செல்வதற்கு பதிலாக வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு சென்றது ஏன் என்றும், பனை ஓலைகளில் எழுதி செல்லாமல் அச்சிடப்பட்ட காகிதங்களில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது ஏன் என்றும் பலரும் கேலி செய்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :