பட்ஜெட் 2019 - சாமானிய மக்களுக்கு என்ன இருக்கிறது?

நிர்மலா சீதாராமன் படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன்முறையாக இன்று நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோதி மாபெரும் வெற்றி பெற்றபிறகு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துபோன நிலையில், வேலைவாய்ப்பின்மையும் வரலாறு காணாத உச்சத்துக்குச் சென்ற சூழலில் நடப்பு நிதி ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதாரம் வளரும் என நிர்மலா சீதாராமன் கூறினார். ஆனால் எப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.

சாலைகள், இரயில் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள்

உள் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான திட்டத்தை நிர்மலா சீதாராமன் வகுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோதியின் வாக்குறுதியில் உள்கட்டமைப்பு பலப்படுத்துதல் முக்கிய அம்சமாக இடம்பெற்றிருந்தது. 2024-க்குள் 1.44 ட்ரில்லியன் டாலர்கள் உள்கட்டமைப்புக்கு செலவிடப்படும் என அவர் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ரயில்வே முதலீட்டிற்கு (72 பில்லியன் டாலர்கள்) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த வேளையில், அரசு அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 11.6 பில்லியன் டாலர்கள் செலவில் 1,25,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை போடும் என நிர்மலா கூறியுள்ளார்.

பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் ஊரக - நகரப் பகுதிகளுக்கு பாலமாகச் செயல்படுவதை பிரதான நோக்கமாக கொண்டிருந்தன.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் 2022-ல் வருகிறது. இதை இலக்கு வைத்துள்ள நிர்மலா, அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும் மற்றும் சமைப்பதற்கான வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

வீடுகள் கட்டுவதற்கும், அனைத்து வீடுகளுக்கும் 2024-க்குள் குடிநீர் வழங்குவதையும் குறிக்கோளாக வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

வரிகள்

58 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வர்த்தக அளவை தாண்டும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25% ஆக குறைக்கப்படும் என்றார். பல நிறுவனங்களுக்கு இதனால் லாபம் அதிகரிக்கும் என்றார் சீதாராமன். ஆனால், இந்த அறிவிப்பு முதலீடுகளை தூண்டும் விதமான முக்கியமான நகர்வு என்கின்றனர் வல்லுநர்கள்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பொருத்தவரை தொழில் முனைவோர்கள் வருமான வரி மதிப்பீட்டில் ஆய்வுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்றார். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பிரத்யேக தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்படும் என்றார். அவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனங்களே வடிவமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவார்கள் என்றார்.

தனிநபர் வருமான வரம்பில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஆனால் ஆண்டுக்கு 2 -5 கோடி ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 3% கூடுதல் வரியும், ஐந்து கோடிக்கும் அதிகமான வருமானம் பெறுபவர்களுக்கு 7% கூடுதல் வரியும் விதிக்கப்படும் என்றார் சீதாராமன்.

அந்நிய முதலீடு

இந்தியா சமீபத்தில் உலகத்தின் வேகமான வளரும் பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் நாடு எனும் அந்தஸ்தை இழந்தது மேலும் முதலீடுகளை ஈர்த்தால்தான் வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும் என அரசு உணர்ந்திருக்கிறது.

விமான போக்குவரத்து, ஊடகம், அனிமேஷன் மற்றும் காப்பீட்டு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை திறந்துவிடுவது குறித்து ஆராயப்படும் என்றார் இந்தியாவின் நிதியமைச்சர்.

படத்தின் காப்புரிமை AFP

முதலீடு குறித்த விவரங்கள் இன்னும் ஆராய்ந்து செயல்பாட்டுக்கு வர வேண்டியிருக்கும் சூழலில் இந்த அறிவிப்பானது ஐகியா மற்றும் ஆப்பிள் போன்ற ஒற்றை பிராண்ட் விற்பனை நிறுவனங்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. வால்மார்ட் முதலான பல்வேறு பிராண்ட் பொருள்களை விற்கும் அங்காடிகளுக்கு தற்போதுள்ள சூழலே தொடரும். அதாவது இணைய வர்த்தகம் அல்லது இந்திய வர்த்தக கூட்டாளிகளோடு அவர்கள் இணைந்து செயல்படவேண்டும்.

2018 -2019 பொருளாதார ஆய்வானது பட்ஜெட் நாளுக்கு ஒருநாள் முன்னதாக வெளியிடப்பட்டது. அந்நிய முதலீடு அதிகரிப்பது நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கும், நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்றார் மூத்த பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்.

சாமானிய மக்களுக்கு என்ன இருக்கிறது?

பெரும்பாலான குடிமக்களுக்கு வருமான வரி அதிகரிப்பு இல்லை என்றாலும் அவர்களின் செலவு உயரக்கூடும்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கவுள்ளதை சிலர் மின்சார வாகனங்களை அரசு ஊக்குவிக்கும் முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மக்களின் அன்றாடத் தேவைக்கான பொருள்களின் விலை அதிகரிக்கக்கூடும்.

இறக்குமதி வரி உயர்வால் தங்கம் முதலான மதிப்பு மிக்க உலோகங்களின் விலை அதிகரிக்கும்.

சில சாமானிய மக்களுக்கு வாடகை விஷயங்கள் மற்றும் வீடு கட்டுவதில் இந்த பட்ஜெட் வாயிலாக ஏதேனும் லாபம் கிடைக்கலாம். ஆனால் இன்னும் நிதி அமைச்சரின் பட்ஜெட் குறித்த துல்லியமான தகவலுக்காக இந்தியர்களும், வல்லுநர்களும் காத்திருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்