வேலூர் தொகுதியில் நிற்கும் திமுக - அதிமுக வேட்பாளர்கள்; மாநிலங்களவைக்கு அன்புமணி போட்டி

மாநிலங்களவை தேர்தல் படத்தின் காப்புரிமை Getty Images

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் ஆவார். புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே நடக்க இருந்த வாக்குபதிவின்போது இரு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாமக சார்பில் அன்புமணி போட்டி

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் வேலூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் அதிமுகவின் மேட்டூர் நகர கழக செயலாளரான சந்திரசேகரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முகமது ஜான் அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவின் இணைச் செயலாளராக உள்ளார்.

அதிமுகவுக்கு கிடைக்கும் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இரண்டு அந்த கட்சியின் உறுப்பினர்களுக்கும், மற்றொரு இடம் மக்களவை தேர்தலின்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என அதிமுகவின் தலைமை கழக செய்தியறிக்கை கூறுகிறது.

அதிமுக சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு அந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி போட்டியிடுகிறார் என்று அந்த கட்சி பிற்பகல் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து 18 பேர் மாநிலங்களவையில் உறுப்பினர்களாக உள்ளனர். 18 நபர்களில் அதி.மு.கவில் அர்ஜுனன், ஆர். லட்சுமணன், வி. மைத்ரேயன், டி. ரத்தினவேல், தி.மு.கவில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வருவதால் புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தின் அடிப்படையில், ஆளும் அ.தி.மு.கவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும் தி.மு.கவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும் கிடைக்கும்.

இதன்படி, திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் மு. சண்முகம் மற்றும் வழக்கறிஞர் பி. வில்சன் ஆகியோர் ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தனர்.

வில்சன் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனெரலாக ஆகஸ்டு 2012 முதல் மே 2014 வரை பதவி வகித்தவர். 2008 ஆகஸ்டு முதல் 2011இல் அதிமுக அரசு பொறுப்பேற்கும் வரை அதற்கு முன் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்தவர்.

மூன்றாவது உறுப்பினராக மதிமுக பொதுச் செயலர் வைகோ இருப்பார் என அறிவிக்கப்பட்டது. தற்போது அதிமுகவும் உறுப்பினர்களை அறிவித்துள்ளது. திமுக சார்பாக இவர்கள் மூவருமே தங்களது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாளான ஜூலை 8ம் தேதி அதிமுக உறுப்பினர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்