காஞ்சிபுரம், திருவள்ளூரில் தண்ணீர் திருடப்படுவதாக மக்கள் போராட்டம்

கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து 1989ல் வேலைவாய்ப்புத் தேடி சென்னைக்கு இடம்பெயர்ந்தது லதாதேவியின் குடும்பம். சென்னை நகரத்தை அடுத்த கிராமப்புற பகுதியில் வசிக்கலாம் என முடிவுசெய்து பல இடங்களை பார்த்ததில், பாலக்காட்டு நீர்நிலைகளை நினைவுபடுத்தியது சென்னை புறநகரான வேங்கைவாசல் பகுதி.

''மிகுந்தமகிழ்ச்சியோடு வீடு வாங்கினோம். ஏரிக்கு அருகில் வீடு, சுவையான குடிநீர் கிடைத்தது. வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிடப்போகும் வீட்டுக்கு பெரிய முதலீடு செய்தோம். கணவர் ஒய்வுபெற்றுவிட்டார். இனி எங்களுக்கு அமைதியான வாழ்க்கை என்ற எண்ணியபோதுதான் தண்ணீர் பிரச்சனை தொடங்கிவிட்டது. இரண்டு ஆண்டுகளாக குடிநீர் சுத்தமாக கிடைப்பதில்லை. ஆழ்துளைகிணற்றில் நீர் இல்லை. 200 ஏக்கரில் பறந்துவிரிந்திருக்கும் வேங்கைவாசல் பெரிய ஏரி காய்ந்து, தரிசு நிலமாக காட்சியளிக்கிறது,'' என வேதனையுடன் பேசுகிறார் லாததேவி.

Image caption காய்ந்து கிடக்கும் வேங்கைவாசல் ஏரி

வேங்கைவாசல் பகுதி காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டிற்குள் வரும் இடம். இங்குள்ள பெரிய ஏரி மட்டுமல்லாது, அருகில் உள்ள 40க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதாக பலமுறை புகார்கள் கொடுத்துள்ளதாக கூறுகிறார் லதாதேவி.

''நிலத்தடி நீர் சுத்தமாக வற்றிபோய்விட்டது. தனியார் லாரிகள் மூலம் எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துசெல்கிறார்கள். தினசரி பயன்பாட்டிற்கு நாங்கள் காசுகொடுத்து, வீட்டில் பெரிய பிளாஸ்டிக் தொட்டிகளில் நீரை சேமிக்கவேண்டியுள்ளது. எங்கள் வீடுகளில் துணிதுவைப்பதற்கும், பாத்திரம் கழுவுவதற்கும் மிகவும் குறைவான நீரை பயன்படுத்துகிறோம். லாரிகளை நிறுத்தி, காசு கொடுத்தால் கூட தண்ணீர் தரமறுக்கிறார்கள். சென்னையில் அதிகமாக காசுகொடுக்கிறார்கள் என்பதால் அங்கு எடுத்துச்செல்கிறார்கள்.'' என்கிறார் லதாதேவி.

லாததேவி போல வேங்கைவாசலில் வசிக்கும் கிராமமக்கள் இணைந்து சுமார் ரூ.10 லட்சம் செலவில் பெரிய ஏரியின் மையத்தில் கிணறு தோண்ட செலவிடுகிறார்கள். ''பெருங்கனவோடு வேங்கைவாசலுக்கு குடிவந்தோம். இப்போது நாங்கள் மீண்டும் கேரளாவுக்கு போவது சிரமம். தண்ணீருக்காக வருங்காலத்தில் இதேபோல சிரமமப்படுவோமோ என்ற அச்சம் நிலவுகிறது,''என்கிறார் அவர்.

சென்னையின் தண்ணீர் தேவைக்கு அண்டை மாவட்டங்களில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் நங்கநல்லூரில் வசிக்கும் ஆர்.கே.இளையராஜா.

''கடந்த பத்து ஆண்டுகளில் நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கல் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. சென்னையின் தண்ணீர் தேவைக்கு பல லாரிகள் சட்டத்திற்கு புறம்பாக நிலத்தடி நீரை சுரண்டுகிறார்கள். இதனால் குடியிருப்புவாசிகள் அமைத்துள்ள அழ்துளை கிணறுகள் வற்றிப்போய்விட்டது. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.'' என மனுவில் குறிப்பிட்டிருந்தார் இளையராஜா.

Image caption நன்மங்களம் ஏரி

இளையராஜாவின் மனுவை அடுத்து சென்னை நகரத்திற்கு தண்ணீர் எடுத்துவர அரசு அனுமதி அளித்துள்ள லாரிகள் எவை, எத்தனை நபர்களுக்கு, சட்டத்திற்கு உட்பட்டு தண்ணீர் எடுத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை அரசாங்கம் அளிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்திற்கு அருகில் உள்ள கிராமங்களில் சிலர் விவசாய பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு பெற்று ஆழ்துளை கிணறு மூலம் ராட்சத மோட்டார் வைத்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் நிலத்தடி நீரை சென்னையில் உள்ள விடுதிகளுக்கு எடுத்து விற்கிறார்கள் என கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ''திருடாதே திருடாதே தண்ணீரை திருடாதே'' என கோஷமிட்ட மக்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என சாலையில் அமர்ந்தனர்.

''அருமந்தை கூட்டுச்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்போம் என அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தபோது, ராட்சத மின்மோட்டர்களை உடனடியாக அகற்றவேண்டும் என பெண்கள் வேண்டுகோள் விடுத்தனர். கால அவகாசம் தேவை என அதிகாரிகள் கூறியபோது, அங்கிருந்த பெண்கள் உருட்டுக்கட்டைகளுடன் திரண்டு சென்று நிலத்தடி நீர் திட்டத்திற்கு பயன்படுத்தி வந்த மோட்டார்களை அடித்து நொறுக்கினர். நீரை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்,'' என சோழவரம் கொக்குமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Balaji

சென்னை குடிநீர்வழங்கல் வாரிய அதிகாரிகளிடம் பேசியபோது, தனியார் லாரிகளை முறைப்படுத்த சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

''சென்னை உயர்நீதிமன்றம் ஆணையர் ஒருவரை நியமித்துள்ளது. தண்ணீர் எடுத்துவரும் லாரிகள், எடுத்துவரும் இடங்களை ஆய்வு செய்யவுள்ளார்கள். தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்து சம்பவங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிப்போம்.'' என காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக சட்டமன்றத்தில் தண்ணீர் பிரச்னையை விரிவாக பேச தனி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார். ஆனால் உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தற்போது நிலவுவது தண்ணீர் பஞ்சம் அல்ல என்றும் தண்ணீர் பற்றாக்குறைதான் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சட்டமன்றகூட்டத்தில் தண்ணீர் பிரச்னை குறித்து பதில் அளித்த அமைச்சர் வேலுமணி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களின் விவரங்களை பகிர்ந்தார். சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் இரண்டு ஆலைகளோடு, மூன்றாவது ஆலைக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :