மாநிலங்களவை: திமுக சார்பில் மேலும் ஒருவர் போட்டி - என்ன சொல்கிறார் வைகோ?

நாடாளுமன்றம். படத்தின் காப்புரிமை Getty Images

மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் மேலும் ஒரு வேட்பாளராக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மனுத்தாக்கல் செய்திருக்கிறார். தேசத் துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் மாற்று ஏற்பாடாக இளங்கோ மனு தாக்கல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து 6 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ள நிலையில், தி.மு.கவின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு வழக்கறிஞர் பி. வில்சன், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் மு. சண்முகம் ஆகியோர் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஒரு இடம் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி தி.மு.கவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் வைகோ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இருந்தபோதும், ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், ம.தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று தி.மு.கவின் சார்பில் மேலும் ஒரு வேட்பாளராக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மனுத்தாக்கல் செய்தார். ஜூலை 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மாநிலங்களவே வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கும்போது வைகோவின் வேட்புமனுவை ஏற்பதில் பிரச்சனை ஏற்பட்டால், என்.ஆர். இளங்கோ தி.மு.கவின் சார்பில் தேர்வுசெய்யப்படலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

வைகோவின் மனு ஏற்கப்பட்டால், என்.ஆர். இளங்கோ தனது மனுவை வாபஸ் பெறலாம். அவர் அவ்வாறு வாபஸ் பெறாவிட்டால், போட்டியிடும் 7 பேரில் இருந்து ஆறு பேரைத் தேர்வுசெய்ய வாக்குப் பதிவு நடைபெறும். இதற்கு முன்பாக, தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவையில் 18 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் தி.மு.கவைச் சேர்ந்த கனிமொழி, அதி.மு.கவைச் சேர்ந்த அர்ஜுனன், ஆர். லட்சுமணன், வி. மைத்ரேயன், டி. ரத்தினவேல், சி.பி.ஐயைச் சேர்ந்த டி. ராஜா ஆகிய ஆறு உறுப்பினர்களின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.

புதிய உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தின் அடிப்படையில், ஆளும் அ.தி.மு.கவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும் தி.மு.கவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும் கிடைக்கும்.

இம்மாதிரியான சூழலில் கூடுதலாக ஒருவர் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து தி.மு.க. சார்பில் அதிகாரபூர்வமான விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

என் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன் - வைகோ

மாநிலங்களவை உறுப்பினருக்கான தமது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் எம்.பி. ஆவதாக இருந்தால் மதிமுகவுக்கு சீட் கொடுப்பதாக எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொண்டபோது ஸ்டாலின் கூறினார்" என்று தெரிவித்தார்.

தம் மீதிருந்த தேச துரோக வழக்கில் தனக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் வைகோ கூறினார்.

"சுதந்திர இந்தியாவில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர் நானாக இருந்தேன். தேச துரோக குற்றச்சாட்டில் முதல் முறையாக தண்டிக்கப்பட்ட நபரும் நான்தான்" என்று வைகோ தெரிவித்தார்.

முன்னதாக ஒரு வேளை நான் இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டால், மாற்று ஏற்பாடு செய்யுமாறு தாம்தான் ஸ்டாலினிடம் சொன்னதாக தெரிவித்த வைகோ, "என் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், என்.ஆர் இளங்கோ அவரது மனுவை திரும்பப் பெறுவார் என்று ஸ்டாலின் கூறினார்" என்றும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :