பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு: திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் , பா.ஜ.க, மக்கள் நீதி மையம், சி.பி.எம் - நிலைப்பாடு என்ன?

பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு: ஆதரித்தது யார், எதிர்த்தது யார்?

பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த ஐந்து கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க. வெளிப்படையாக தன் கருத்தைத் தெரிவிக்கவில்லை. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென இந்திய அரசு சமீபத்தில் சட்டத்திருத்தம் ஒன்றை மேற்கொண்டது. தற்போது தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியிருக்கும் நிலையில், இந்தச் சட்டத்தை அமல்படுத்தலாமா, கூடாதா என்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை. துணை முதல்வரும் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் கூட்டத்தைத் துவக்கிவைத்துப் பேசினார்.

"பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால், மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, தமிழகத்திற்குக் கூடுதலாக ஆயிரம் மருத்துவக் கல்லூரி இடங்கள் கிடைக்கும். இவற்றில் இந்திய அளவிலான ஒதுக்கீடு போக, தமிழகத்திற்கு கூடுதலாக 586 இடங்கள் கிடைக்கும்" என்று கூறினார்.

இதற்குப் பிறகு பிற கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராகப் பேசினார். தி.மு.கவின் சார்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின், பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

"இந்திய அரசியல் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டபோது, அந்தத் திருத்தத்தின் மூலம், அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்ட 15 (4) என்ற புதிய பிரிவில் "சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும் (Socially and Educationally)" என்ற சொற்றொடர்தான் இணைக்கப்பட்டது. "பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு" என்று எந்த சொற்றொடரும் அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் இடம்பெறவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களோ, தலைவர் கலைஞர் அவர்களோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களோ, - ஏன் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களோ, இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

முதல் முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டபோதே சிலர் பொருளாதார ரீதியாக என்ற வார்த்தையும் இடம்பெற வேண்டுமெனக் கோரினார்கள். ஆனால், பிரதமர் நேருவோ, சட்ட அமைச்சர் அம்பேத்கரோ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

சுதந்திர இந்தியாவின் 15 பிரதமர்களில் 14 பேர் இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல என பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே மருத்துவக் கல்லூரிகளில் பத்து சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த முடியாது என தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

திராவிட இயக்கத்தின் மூலாதாரமான சமூக நீதியை நிலைநாட்ட இந்த அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.க. முழு ஒத்துழைப்பு வழங்கும்" என மு.க. ஸ்டாலின் பேசினார்.

ம.தி.மு.கவின் சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த மல்லை சத்யா கலந்துகொண்டார். அக்கட்சியும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தது. "பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களைக் கைதூக்கி விடுவதற்கான நடவடிக்கைகளை ம.தி.மு.க. ஆதரிக்கிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, தமிழகத்தில் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டைப் பாதிக்கும் வகையில் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தை ம.தி.மு.க. எதிர்க்கிறது" எனக் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். "பத்து சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஆகவே தமிழகத்தில் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது. மேலும் மத்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு பின்பற்றுவதில்லை. அதைச் செய்ய வலியுறுத்த வேண்டும். மேலும் நீட் தேர்வுக்கு தொடர்பான மசோதாக்களுக்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கோரி இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றும் அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இது சமூக நீதிக்கு எதிரானது எனக் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவையும் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை ஆதரித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகாரப்பூர்வமற்ற தகவலின் படி ஏறக்குறைய 95 சதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகித மக்கள் மட்டுமே இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை. இவர்களுக்கு 10 சதமான இடஒதுக்கீடு என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும். எனவே, இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய வேண்டும். அம்மக்கள் தொகை எத்தனை சதமானம் என கணக்கிட்டு அதில் சரிபாதி சதமான அளவு இப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதமான இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பில்லாமல் கூடுதல் மருத்துவ இடங்களைப் பெற்று மேலே குறிப்பிட்டுள்ள விகிதப்படி பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீட்டினை செயல்படுத்தலாம்" எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், ஊடகப் பிரிவின் தலைவர் கோபண்ணா ஆகியோரும் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசினர். "முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் எவ்வளவு பேர் என்று கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு அந்த விகிதாச்சார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்கலாம். எந்த காரணத்தை கொண்டும் 10 சதவீதம் என்று பொதுவாக இடஒதுக்கீடு வழங்கக் கூடாது. தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த வகையில் முற்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரிக்கிறது" என அவர்கள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்தமாக இந்தக் கூட்டத்தில் 21 அரசியல் கட்சிகள் பங்கேற்றன. சி.பி.எம்., பா.ஜ.க., காங்கிரஸ், த.மா.கா., புதிய தமிழகம் ஆகிய 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அ.தி.மு.க. பொதுப்படையாகவே கருத்துத் தெரிவித்தது. பிற கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அனைவரும் கருத்துக்களைத் தெரிவித்த பிறகு, தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், "ஜெயலலிதாவின் கொள்கைப்படி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறோம். இது தொடர்பாக சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்" என்று மட்டும் கூறினார்.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, திராவிடர் கழகம், தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், சி.பி.ஐ. சி.பி.எம்., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, புரட்சி பாரதம், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :