நிர்மலா தேவி நீதிமன்ற வளாகத்தில் தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

இந்து தமிழ்: 'நீதிமன்றத்திலிருந்து வெளியேற நிர்மலா மறுப்பு'

வழக்கு விசாரணைக்காக, திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வந்த பேராசிரியை நிர்மலாதேவி, சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டு பிதற்றி வெளியேற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி, கடந்த 2018 ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். திருவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது உதவிப் பேராசிரியர் முருகன் விடுவிப்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆய்வு மாணவர் கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜரானார். அதையடுத்து, வழக்கின் விசாரணையை இம்மாதம் 22ஆம் தேதிக்கு நீதிபதி காயத்ரி ஒத்தி வைத்தார்.

நீதி மன்றத்துக்குத் தாமதமாக வந்த பேராசிரியை நிர்மலாதேவியின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் காணப்பட்டது.

எப்போதும், படுநேர்த்தியாக நீதிமன்றத்துக்கு வரும் நிர்மலா தேவி, நேற்று சுடிதார் அணிந்து, அதற்கு மேல் சேலை கட்டி நெற்றி நிறைய விபூதி, குங்குமம் பூசி வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தார்.

மேலும், நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற மறுத்து, பல இடங்களில் அமர்ந்து கண்களை மூடியபடி, அவ்வப்போது சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.

அப்போது 'எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது. என் மீது குற்றம் சுமத்திய மாணவிகளுக்கு தக்க தண்டனை கிடைத்துவிட்டது. எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் வந்து என்னை அழைத்துச் செல்வார்கள்' என அவ்வப்போது பிதற்றிய படி இருந்தார்.

அவரது விநோதமான செயல்பாடுகளால் நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த னர்.

பின்னர், வழக்கறிஞர்கள் சிலர், நிர்மலாதேவியை சமாதானப்படுத்தி காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

தினமணி: 'பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிவு'

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் கடும் சரிவு காணப்பட்டது. நடப்பு 2019-ஆம் ஆண்டில் முதல் முறையாக ஒரே நாளில் சென்செக்ஸ் 792 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

மத்திய நிதி அமைச்சர் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பங்குச் சந்தையை ஊக்குவிக்கும் வகையில் எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

மாறாக, நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் விதமாக பங்குகளில் அவர்களின் கையிருப்பு விகிதத்தை தற்போதைய 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரிக்க பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டது. அதுதவிர, அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கான வரியை அதிகரிப்பது, பங்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு கட்டணம் விதிப்பது உள்ளிட்ட பங்குச் சந்தைக்கு சாதகமற்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கின.

இதனால், திங்கள்கிழமை வர்த்தகத்தில் லாப நோக்கம் கருதி பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்தனர்.

வரும் காலாண்டில் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி விகிதம் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கும் என்ற முதலீட்டாளர்களின் நிலைப்பாடு பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

சர்வதேச சந்தையில் காணப்பட்ட மந்த நிலையும் இந்திய பங்குச் சந்தைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

திங்கள்கிழமை வர்த்தகத்தில் பஜாஜ் பைனான்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 8.18 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டது. இதைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி பங்கின் விலை 5.43 சதவீதமும், எல் & டி 4.3 சதவீதமும், எஸ்பிஐ 4.14 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 2.84 சதவீதமும் குறைந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகளுக்கும் சந்தையில் போதிய வரவேற்பில்லை.

மும்பை பங்குச் சந்தையில், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், மின்சாரம், வங்கி, எண்ணெய்-எரிவாயு , உலோகம், பொறியியல் சாதன துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண் 3.78 சதவீதம் வரை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 792 புள்ளிகள் (2.01%) சரிந்து 38,720 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 252 புள்ளிகள் (2.14%) குறைந்து 11,558 புள்ளிகளாக நிலைத்தது.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினத்தந்தி: 'மத்திய அரசு துறைகளில் 3.81 லட்சம் பேருக்கு வேலை'

கடந்த 2 நிதி ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் 3.81 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 7.91 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் மத்திய அரசுத் துறைகளில் 3.81 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

மத்திய அரசு நிறுவனங்களில் 2017-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி நிலவரப்படி 32 லட்சத்து 38 ஆயிரத்து 397 பேர் வேலை பார்த்து வந்தனர். 2019-ம் ஆண்டு இதே தேதியில் இந்த எண்ணிக்கை 36 லட்சத்து 19 ஆயிரத்து 596 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 லட்சத்து 81 ஆயிரத்து 199 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக ரெயில்வேயில் மட்டும் 98,999 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் படையில் 80 ஆயிரம் புதிய வேலைகளும், மறைமுக வரிகள் துறைகளில் 53 ஆயிரம் வேலைகளும், நேரடி வரிகள் துறைகளில் 29,935 வேலைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

ராணுவ அமைச்சக துறையில் 46,347 புதிய வேலைகளும், அணுசக்தி துறையில் 10 ஆயிரம் வேலைகளும், தொலைதொடர்பு துறையில் 2,250 வேலைகளும், நீராதார துறைகளில் 3,981 வேலைகளும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் 7,743 வேலைகளும், சுரங்கத்துறை அமைச்சகத்தில் 6,338 வேலைகளும், விண்வெளித்துறையில் 2,920 வேலைகளும், பணியாளர் துறை அமைச்சகத்தில் 2,056 வேலைகளும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் 1,833 வேலைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

கலாசாரத்துறை அமைச்சகத்தில் 3,647 வேலைகளும், வேளாண் அமைச்சகத்தில் 1,835 வேலைகளும், விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தில் 1,189 வேலைகளும் கடந்த 2 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவணங்களை மேற்கோள்காட்டித் தெரிவிக்கிறது இந்த செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'நீட் விவகாரம் - நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்'

படத்தின் காப்புரிமை ARUN KARTHICK

நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் கருத்தைப் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தை பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை எழுப்பினார். அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "ஒரு மாநில அரசானது மத்திய அரசை எதிர்த்து கண்டனத் தீர்மானம் இயற்றுவது என்பது சரியாக இருக்காது. அதேசமயம், இந்தப் பிரச்னை தொடர்பாக உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்." என்றார். அதன்பின் முதல்வர் பழனிசாமி, "நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கும்." என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்