வைகோ வேட்பு மனு ஏற்பு: மாநிலங்களவை உறுப்பினர் பதவி - திமுக வேட்பாளர் மனுவை வாபஸ் பெறுவாரா?

வைகோ படத்தின் காப்புரிமை Facebook
Image caption கோப்புப் படம்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனு ஏற்கப்படுமா என்ற ஐயம் நிலவியது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் முடிவடைவதை ஒட்டி அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வலு அடிப்படையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 3 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போது வைகோ-வுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக திமுக-வும், பாமக-வுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக அதிமுக-வும் ஒப்புக்கொண்டிருந்தன.

தற்போது மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக - அதிமுக இரண்டு கட்சிகளுமே தலா இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. மீதம் இருந்த தலா ஒரு இடத்தை திமுக வைகோ-வுக்கும், அதிமுக பாமக-வுக்கும் ஒதுக்கின.

படத்தின் காப்புரிமை Getty Images

பாமக தங்கள் சார்பில் தங்கள் இளைஞரணித் தலைவர் அன்புமணியை அந்த ஒரு இடத்துக்கான வேட்பாளராக நியமித்தது.

இதற்கிடையே, 2009-ம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியதாகத் தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் அவருக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இது தொடர்பான விரிவாக தகவல்களுக்கு: தேச துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை

தண்டனை ஓராண்டுதான் என்பதால் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்திவைத்தது நீதிமன்றம்.

இந்த தண்டனையால் வைகோவின் வேட்புமனுவுக்கு பாதிப்பு வராது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக ஒரு மாற்று வேட்பாளரையும் நிறுத்தியது.

தமது வேட்பு மனு ஏற்கப்பட்டால் திமுக-வின் மாற்று வேட்பாளர் என்.ஆர். இளங்கோ தமது மனுவை வாபஸ் பெறுவார் என்று தெரிவித்தார் வைகோ.

எனவே, வைகோ-வின் வேட்புமனுவை ஏற்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்ற ஒரு ஐயம் நிலவி வந்தது. இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்தபோது, வைகோ மனு ஏற்கப்பட்டுள்ளது.

11 மனுக்கள்...

இது குறித்து பிபிசி தமிழின் சென்னை செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் மேலும் கூறுவது:

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு 4 சுயேச்சைகள் உட்பட 11 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலையில் துவங்கியது. போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை இல்லாததால், கு. பத்மராஜன், கோ. மதிவாணன், அக்னி ராமச்சந்திரன், ந. நடராஜன் ஆகிய நான்கு சுயேட்சை உறுப்பினர்களின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்குப் பிறகு வைகோவின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக சட்ட ஆலோசனை பெறப்பட்டதாகவும் அவரது வேட்புமனுவை ஏற்பதில் பிரச்சனை இல்லையென தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதற்குப் பிறகு வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, பிற வேட்புமனுக்களும் பரிசீலிக்கப்பட்டு, ஏற்கப்பட்டன. அதன்படி அ.தி.மு.கவைச் சேர்ந்த என். சந்திரசேகரன், முகமது ஜான், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், தி.மு.கவைச் சேர்ந்த வில்சன், மு. சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

தி.மு.கவின் சார்பில் கூடுதலாக மனுத்தாக்கல் செய்த என்.ஆர். இளங்கோ தன் மனுவை 11ஆம் தேதியன்று திரும்பப் பெறுவார் என நம்பப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :