செங்கல் சூளையில் 124 டிகிரியில் வேலை செய்யும் கொடுமையை நீங்கள் அனுபவித்ததுண்டா?

செங்கல் சூளை

124 டிகிரி வெப்பநிலை. இது இந்தியாவில் சாதரண மனிதர் ஒருவர் எதிர்கொள்ளும் வெப்பநிலையைக் காட்டிலும் இருமடங்கு அதிகம்.

இதுதான் உங்களை மழையிலும் வெயிலிலும் பாதுகாக்கும் வீட்டைக் கட்ட பயன்படும் செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்களின் கதை.

செங்கல் சூளைகளில் வேலை செய்வது எவ்வளவு கடினம்?

இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் செங்கல் சூளைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கண்களை நீங்கள் உற்றுப் பார்க்க வேண்டும்.

அவர்களின் உள்ளங்கைகளை நீங்கள் தொட்டுப் பார்க்க வேண்டும்.

மரத்தால் செய்யப்பட்ட செருப்புகளை அணிந்து கொண்டு நிலக்கரியை பயன்படுத்தி அவர்கள் செங்கல் எரிக்கின்ற தரையில் நீங்கள் நிற்பீர்களானால் அவர்களின் துயரம் உங்களுக்கும் நிச்சயமாக புரியும்.

இந்த அதிகபட்ச வெப்பநிலையில் நிற்பதும், பணிபுரிவதும், சுவாசிப்பதும் மிகவும் ஆபத்தானது.

பின் ஏன் இவர்கள் இம்மாதிரியான ஆபத்தான பணியில் ஈடுபட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.

இத்தகைய அதிகபட்ச வெப்பத்தில் வேலை செய்தால்தான் அவர்களின் வாழ்க்கையை நடத்த முடியும், அவர்களின் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியும். அதற்காகதான் இத்தகைய கொளுத்தும் 45 - 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், அவர்கள் வேலை செய்கிறார்கள்.

இதுதான் முறைசாரா தொழில் அமைப்புகளில் பணிபுரியும் பெரும்பாலானவர்களின் கதை.

ஆனால் ஐநா வின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, இந்தியாவில் இம்மாதிரியாக உள்ள 3.4 கோடி வேலைகள் 2030ஆம் ஆண்டிற்குள் ஒழிக்கப்படும் என தெரிய வருகிறது.

இந்தியாவில் கொளுத்தும் வெயிலை எதிர்த்து உணவுப் பண்டங்களை விற்பவர்கள், சாலையோரங்களில் வாகனங்களை பழுது பார்பவர்கள் என கோடிக்கணக்கானவர்கள் இம்மாதிரியான பணிகளையே செய்கிறார்கள்.

அதே சமயம், விவசாய நிலங்களில் வேலை செய்பவர்கள், பிஸ்கட் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், உலோக உருக்கு ஆலை தொழிலாளிகள், தீயணைப்பு வீரர்கள், சுரங்க பணியாளர்கள் மற்றும் செங்கல் சூளைகளில் பணிபுரிபவர்கள் என இவர்கள் அனைவரும் அதிகப்படியான வெப்பநிலையில் பணிபுரிய வேண்டியுள்ளதால் அவர்கள் அதிகம் ஆபத்துக்குள்ளாகின்றனர்.

அதிக வெப்பநிலை நிலவினால் மதிய நேரங்களில் வேலை செய்வதை இவர்கள் தவிர்க்க வேண்டியிருக்கும். ஆனால் அது இவர்களுக்கு ஊதிய இழப்பைதான் தரும்.

மில்லியன் கணக்கான இத்தகைய தொழிலாளர்கள் எந்த வெப்பநிலையில் வேலை செய்கிறார்கள் என்பதை தெர்மாமீட்டரின் உதவியுடன் கண்டறிய முனைந்தது பிபிசி. மேலும் அந்த வெப்பநிலையில் வேலை செய்வதால் வரும் ஆபத்து குறித்தும் ஆராய்ந்தது.

"இங்கு வேலை செய்வது எளிதானதல்ல. நாங்கள் ஒரு கட்டாயத்தில் இங்கு வேலை செய்கிறோம். மரத்தால் செய்யப்பட்ட செருப்பை அணிகிறோம். ஏனென்றால் பிளாஸ்டிக் அல்லது ரப்பரால் ஆன செருப்பை அணிந்தால் அது உருகி விடும்" என்கிறார் செங்கல் சூளையில் பணிபுரியும் ராம் சூரத்.

ராம் சூரத் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் தரையின் வெப்பநிலை 110 டிகிரி செல்ஷியஸ். அங்குள்ள காற்றின் வெப்பநிலை 80 டிகிரி செல்சியஸ்.

ராம் சூரத்தின் உடலின் வெப்பநிலையை சோதித்தால் அது 39 டிகிரியிலிருந்து 43 டிகிரி வரை சென்றது.

ஐநாவின் அறிக்கைப்படி, ஒருவர் உடலின் வெப்பநிலை 39 டிகிரி செல்ஷியசை தாண்டினால் அது அவரின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

இந்த தொழிலாளர்களுடன் சிறிது நேரம் அந்த வெப்பத்தில் நின்றவுடன் நமது செய்தியாளருக்கு கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. மேலும் வாந்தியும் தலைவலியும் வந்தது.

மேலும் அந்த இடத்தில் நின்று கொண்டு பேசியபோது செய்தியாளர் அணிந்திருந்த ஷூவின் அடிப்பாகம் தீயில் கருகியது.

இம்மாதிரியான சூழ்நிலையில், இங்கு வேலை செய்பவர்களின் உடலில் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

அந்த கேள்விக்கு பதில் சொல்கிறார் ராம் சூரத்: "நாங்கள் சிறுநீர் கழிக்கும்போது எங்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படும். இந்த வேலை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும். ஆறு மணிநேர பணியில் நாங்கள் ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க முடியாது. எரிச்சலை தடுக்க நாங்கள் தண்ணீர் குடிப்போம். அப்போது சிறுநீர் சற்று வெள்ளையாக மாறும்" என்கிறார்.

"நான் மருத்துவரை சந்தித்தேன். அவர்கள் நான் செங்கல் சூளையில் பணிபுரிவதால்தான் இவ்வாறு நிகழ்கிறது என்று சொல்கிறார்கள். இங்கு பணிபுரிவதை நிறுத்திவிட்டால் எல்லாம் சரியாகும். ஆனால் அந்த முடிவை என்னால் எடுக்க முடியாது. இங்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்".

தீ தொடர்ந்து எரிவதற்கு நிலக்கரியை பரப்புகிறார் ராம் சூரத்.

பருவநிலை மாற்றங்களாலும் செங்கல் சூளைகளில் பணிபுரிபவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்;

பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என்பதாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் அவர்களுக்கு அரசின் சுகாதார நலத்திட்டங்கள் ஏதும் கிடைப்பதில்லை. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தை சேர்ந்த நிவித் குமார் இந்த அறிக்கை குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

"இந்த அறிக்கையில் வெறும் 3.4 கோடி பேர் என்றுதான் குறிப்பிட்டுள்ளது; அது எனக்கு கவலை அளிக்கிறது. எங்களுக்கு தெரிந்த வரையில் மேலும் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்" என்று அவர் கூறுகிறார்.

"60-70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எந்தவித பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் மணிக்கணக்காக செங்கல் சூளைகளில் வேலை செய்வது மிக கடினம்" என்று அவர் மேலும் சூறினார்.

இந்த தொழிலாளர்கள், தங்களின் குழந்தைகளின் வாழ்க்கைக்காக வெறும் கைகளில், கையுறைகள் இன்றி, முகமுடிகள் இன்றி எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வேலை செய்கின்றனர்.

விவசாயிகளுக்கு உள்ள நெருக்கடி?

சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த பத்திரிகையான ’டவுன் டு எர்த்தின்’ அறிக்கைபடி, 2001ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 ஆயிரம் பேர் விவசாயத்தை விட்டுச் செல்வதாக தெரிகிறது.

அதிகரிக்கும் இந்த வெப்பம் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என பிபிசியின் ஆய்வில் கண்டறியப்பட்டது.

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் விவசாய தொழிலாளியான 60 வயது ஷ்ரவன் சிங், "இப்படி ஒரு வெப்பத்தை பார்த்ததில்லை" என்று தெரிவித்துள்ளார்.

"நாங்கள் பல கோடைக்காலத்தை பார்த்திருக்கிறோம் ஆனால் இத்தகைய வெயிலை பார்த்ததில்லை. நேற்று எனது மகளுக்கு சிறிது நேரம் வேலை செய்தவுடன் வாந்தியும் வயிற்றுப்போக்கும் வந்துவிட்டது. அவளுக்கு மருந்து கொடுத்தோம். ஆனால் என்ன செய்வது... நாங்கள் வேலை செய்யாமல் இருக்க முடியாது" என்கிறார் அவர்.

"மழை பெய்திருந்தால் எங்கள் தோள்பட்டை வரை பயிர்கள் வளர்ந்திருக்கும். ஆனால் மழை பெய்யவில்லை. இந்த வெப்பத்தை இதில் நின்று வேலை செய்பவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஏசியில் வாழ்பவர்களுக்கு, அவர்களுக்கு உணவு தயாரிக்க விவசாயிகள் எவ்வளவு வெப்பத்தை தாங்கி கொள்ள வேண்டும் என்று தெரியாது" என்கிறார் ஷ்ரவன் சிங்.

மதிய வேலைகளின் முடிவு

நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய பணிகளில் ஈடுபடுபவர்களின் நிலை குறித்து அறிய பிபிசி அங்கு சென்றது. வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ்.

நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கும் முகமது முஸ்டகிம் சயிஃபி, "கடந்த சில வருடங்களாகவே மதியம் 12 மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை எனக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை" என்று தெரிவித்தார்.

"வெப்பம் அதிகரித்துள்ளதால், சில நாட்களில் வேலையே இருக்காது. எங்கள் குடும்பமே இதை நம்பிதான் உள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் இந்த சாலையில் ஒருவரும் வரமாட்டார்கள்" என்று சயிஃபி கூறுகிறார்.

"வெப்பம் அதிகரித்துவிட்டதால் எங்கள் வாழ்க்கை என்ன ஆகும் என்பது அல்லாவுக்கு மட்டுமே தெரியும். எங்களுக்கு யார் உதவி செய்வார்கள். பிரதமர் மோதி அரசில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அல்லாவால் மட்டுமே எங்களை காப்பாற்ற முடியும்" என்று அவர் கூறுகிறார்.

"எதிர்வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும். எனவே பாரம்பரியமான சில பணிகளை செய்வது மிக கடினம். அம்மாதிரியான சூழலில், இந்த தொழிற்சாலைகளில் வேலை செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, செங்கல் சூளைகளில் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டால் இந்த பிரச்சனை ஓர் அளவுக்கு தீர்க்கப்படும். இதுகுறித்து அரசாங்கம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்" என்று நிவித் குமார் தெரிவிக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சில செங்கல் சூளைகள் தங்கள் உற்பத்தி நடவடிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் தொழிலாளர்கள் ஓய்வெடுக்கவும் இடம் ஒதுக்கியுள்ளன.

"பாரம்பரிய முறைகளோடு ஒப்பிட்டால் இந்த முறையில் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே பழைய முறைகளை கொண்டு எதிர்காலத்தில் நாம் தொழில் நடத்த முடியாது. நாம் மாறியே ஆக வேண்டும்" என்கிறார் நிவித் குமார்.

எடுத்துக்காட்டாக செங்கல் சூளைகளில் `சிக்சாக்’ தொழில்நுட்ப முறைகளை தயார் செய்வது மாசு அதிகரிப்பை குறைக்கும்.

இந்த செங்கல் சூளைகள் நவீனமயமாக்கப்பட்டால் இந்த தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்க முடியும்.

இந்தியாவில், புதிய வேலைவாய்ப்பு ஆதாரங்களை உருவாக்குவதுதான் அரசியல் கட்சிகளுக்கு சவாலாக இருக்கும்.

இம்மாதிரியான சூழலில் ஒரு கேள்வி எழுகிறது. இதுபோல் வெப்பத்தில் தொடர்ந்து வேலை செய்தால், இம்மாதிரியான பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் எவ்வாறு காக்க முடியும்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :