மாநிலங்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக, மதிமுக, பாமக - 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகின்றனர்

நாடாளுமன்றம் படத்தின் காப்புரிமை Getty Images

மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.கவின் சார்பில் கூடுதலாக வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்த என்.ஆர். இளங்கோ தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றிருக்கிறார். இதனால், வேட்புமனு ஏற்கப்பட்ட 6 பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வாகின்றனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் முடிவடைவதை ஒட்டி அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க., அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 3 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.

தி.மு.கவின் சார்பில் வழக்கறிஞர் வில்சன், மு. சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போது ஒப்புக்கொண்டபடி ம.தி.மு.கவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி வைகோ தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

அ.தி.மு.கவில் முஹம்மத் ஜான், என். சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தேர்தல் உடன்படிக்கையின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த ஒரு இடத்தில் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

இதற்கிடையே, 2009-ம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியதாகத் தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் அவருக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த 5ம் தேதி ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

தண்டனை ஓராண்டுதான் என்பதால் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்திவைத்தது நீதிமன்றம்.

இந்த தண்டனையால் வைகோவின் வேட்புமனுவுக்கு பாதிப்பு வராது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மு.கவின் சார்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூடுதலாக மனுத்தாக்கல் செய்தார்.

செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.கவின் சார்பில் கூடுதலாக மனுத்தாக்கல் செய்த என்.ஆர். இளங்கோ தன் மனுவை இன்று திரும்பப்பெற்றார்.

ஆகவே, அ.தி.மு.கவைச் சேர்ந்த என். சந்திரசேகரன், முகமது ஜான், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், தி.மு.கவைச் சேர்ந்த வில்சன், மு. சண்முகம், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாகின்றனர்.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 11. இதற்குப் பிறகு, ஆறு பேரும் தேர்வுசெய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்