'நீட்' மசோதா குறித்த உண்மையை மறைக்கிறதா தமிழக அரசு?

நீட் படத்தின் காப்புரிமை INSTANTS

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டுமென்ற மாநில அரசின் சட்டங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியது குறித்து சட்டத் துறை அமைச்சர் தவறான தகவலைத் தெரிவித்திருப்பதாக தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.

'நீட்' தேர்வு தொடர்பான மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை தி.மு.க. கொண்டுவந்தது. இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், "தமிழக அரசு நிறைவேற்றிய 'நீட்' தொடர்பான மசோதாக்களை 19 மாதங்களுக்கு முன்பாகவே மத்திய அரசு திருப்பி அனுப்பியிருக்கிறது. இது தொடர்பாக 2017 செப்டம்பர் மாதம் 22ம் தேதியே மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், "அந்த கடிதத்தில், தமிழக அரசின் இரண்டு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை என்பதை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதை ஏன் தமிழக அரசு மறைத்தது? முன்பே இதைத் தெரிவித்திருந்தால், மீண்டும் இந்தச் சட்டங்களை ஒரு தீர்மானத்தை இயற்றி அனுப்பியிருக்கலாம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்கள் தொடர்பாக 19 மாதங்களாக சட்டப்பேரவையில் ஏன் தெரிவிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பாக கேள்வியெழுப்பியபோது, அந்தச் சட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டருக்கின்றன என்று மட்டும் சட்டத்துறை அமைச்சர் கூறினார். தவறான தகவலை அவையில் தெரிவித்ததால் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் பதவிவிலக வேண்டும்" என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.

இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், "நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிப்பு பற்றி மாநில அரசுக்கு முறைப்படி தகவல் கிடைக்கவில்லை. 'நீட்' விவகாரத்தில் நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத் தயார்' என்றார்.

அமைச்சரின் இந்த பதிலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க. சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தது. வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

"நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விதிவிலக்கு வழங்க வேண்டுமென்று இரண்டு மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, அதற்கான தீர்மானம் 01.02.2017 ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.

அந்த இரு மசோதாக்களைப் பற்றி நேற்று முன்தினம் கேட்டபோது, சட்ட அமைச்சர் அவை நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன என்றும் ஆனால், நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். அந்தச் சட்டம் திருப்பி அனுப்பட்டது தொடர்பாக கடிதம் அனுப்பியதைத் தெரிவிக்கவில்லை. அனால், 22.09.2017 இந்த மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருப்பதாக மத்திய அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை FACEBOOK/MK STALIN

ஆகவேதான், மத்திய அரசு அனுப்பிவைத்த இந்தக் கடிதத்தை நான் ஆதாரமாக வைத்து இந்தப் பிரச்சனையை எழுப்பினேன். "Returned herewith two authendicated copies each of both the bills" என அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தக் கடிதத்தை அனுப்பி 19 மாதங்களாகிவிட்டது. 19 மாதங்களாக என்ன செய்துகொண்டிருக்கிறது இந்த அரசு? இதனை அவையில் முன்வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஆறு மாதத்திற்குள் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்க முடியும் என 201வது விதி கூறுகிறது.

இது குறித்துக் கேட்டால், சட்ட அமைச்சரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வேறு எதையோ பேசுகிறார்கள். அதனால்தான் வெளிநடப்புச் செய்திருக்கிறோம்.

அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில்கூட, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் எனச் சொல்கிறார்கள். ஆனால், திருப்பி அனுப்பப்பட்டதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? நீட் தேர்வுக்கு முழு விலக்குப் பெறுவதில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. ஏற்கனவே முதல்வர் இது தொடர்பாக பிரதமரைச் சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்தார்கள். அதுவும் பொய் என்பதுதான்" என்று குற்றம்சாட்டினார்.

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாடு தழுவிய அளவில் தேர்வு ஒன்றை நடத்துவதற்கான சட்டம் 2016ல் நிறைவேற்றப்பட்டது. அந்த ஆண்டு மட்டும் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்த நிலையில், தமிழகத்திற்கு மட்டும் இந்தச் சட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டுமென்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் இரு சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்தச் சட்டங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

இந்தச் சட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து பதில் ஏதும் வராத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கராஜன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு ஏப்ரல் 20ஆம் தேதி பதிலளித்த குடியரசுத் தலைவர் மாளிகை, அப்படி சட்டம் ஏதும் தங்களிடம் நிறுத்திவைக்கப்படவில்லையெனக் கூறியது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றில் ஜூலை ஆறாம் தேதியன்று பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த இரு சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லையென பதில் அளித்தது.

இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், குடியரசுத் தலைவர் 2017ஆம் ஆண்டிலேயே இந்தச் சட்டத்தை நிராகரித்து திருப்பி அனுப்பிய கடிதம் வெளியாகியது. இதையடுத்தே தி.மு.க. இந்த விவகாரம் குறித்து இன்று கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்