தமிழக மாணவர்களுக்கு புத்தக சுமை இனி இல்லை, வருகிறது கையடக்க கணினி

தமிழக மாணவர்களுக்கு புத்தக சுமை இனி இல்லை, வருகிறது கையடக்க கூட்டணி படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'தமிழக மாணவர்களுக்கு புத்தக சுமை இனி இல்லை'

பாடப்புத்தகங்கள் இல்லாமல் கையடக்க கணினி மூலம் படிக்கும் வசதியை மாணவர்களுக்கு வழங்க இருக்கிறோம் என்றும், முதற்கட்டமாக கையடக்க கணினி 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

523 ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் புத்தாக்க நூலை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர், ஆசிரியர்களுக்கு விருதுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

"ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் சிறந்த கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மொழிகள் படிப்பை படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கு மட்டும் தான் தேவைப்படுகிறது.

மாணவர்களின் திறமையையும், ஆற்றலையும் வளர்த்து கொள்ள ஆசிரியர்களின் ஆற்றலும், சிந்தனையும் தேவை. அது தமிழகத்தில் சரியாக கிடைக்கிறது. மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை எந்த தயக்கமும் இல்லாமல் அமைத்து கொள்ளலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் என்ஜினீயரிங் படித்த ஏறத்தாழ 8 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அதேபோல், தமிழகத்தில் என்ஜினீயரிங் படித்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். திறன்மேம்பாடு எப்போது உயருகிறதோ? அப்போது தான் தமிழகத்தில் அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் கிடைக்கும். பின்லாந்தில் கல்வி சார்ந்த திறன்மேம்பாடுகளை கற்றுத்தருகிறார்கள். அதை தொடர்ந்து தான் தமிழகத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

அரசும், ஆசிரியர்களும் நினைத்தால் ஒரு மாணவரை கோபுரத்தில் உட்கார வைக்க முடியும். இந்த அரசு 15 லட்சத்து 40 ஆயிரம் மடிக்கணினிகள் ஒரே ஆண்டில் வழங்கி இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் கணினி மயமாக்கப்பட்டு, இணையதள வசதி கொடுக்கப்படும்.

மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, ஒவ்வொரு மாணவருக்கும் கையடக்க கணினி (டேப்) இலவசமாக வழங்குவதற்கு இந்த அரசு திட்டமிட்டு இருக்கிறது.

இதன் மூலம் பாடப்புத்தகங்கள் இல்லாமல் 'கியூ ஆர் கோடு' மற்றும் 'பி.டி.எப்' வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. 15 லட்சம் மாணவர்களுக்கு இந்த வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் 'ஸ்மார்ட்' வகுப்புகளாக மாற்றப்படும். நம்முடைய கல்வி முறை இந்தியாவிலேயே பெரிய மாற்றத்தை கொண்டு வரும். கல்வி சேனல் மிக விரைவில் முதல்-அமைச்சர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது." என்று அவர் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினமணி: 'நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்'

மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதற்காக மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் விவகார சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அது போல போக்ஸோ சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க முடியும்.

நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்ததை அடுத்து, அத்தகைய பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது போக்ஸோ சட்டமாகும்.

போக்ஸோ சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் மூலம் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம். மேலும் சிறார்களை பாலியல் விடியோக்களில் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்ச அபராதமும், சிறைத் தண்டனை விதிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

- இவ்வாறாக விவரிக்கிறது தினமணி நாளிதழ்.

இந்து தமிழ்: 'தமிழக மாணவர்கள் மட்டுமே சேர முடியும்'

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய திமுக உறுப்பினர் பழனிவேல் தியாக ராஜன், "தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலில் இடம்பெற் றுள்ள பல மாணவர்களின் பெயர்கள் வெளிமாநிலங்களின் தர வரிசைப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Twitter

கடந்த 2017-ம் ஆண்டிலும் இப்பிரச்சினை எழுந்தது. எனவே, கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் இடங்களில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சேர முடியாதபடி அரசு தடுக்க வேண்டும்" என்றார்.

அவருக்கு பதிலளித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், " தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் இடங்களில் தமிழக மாணவர்கள் மட்டுமே சேர வேண் டும் என்பதில் அதிமுக அரசு உறுதி யாக உள்ளது. தமிழக அரசு ஒதுக் கீட்டுக்கான 3,968 எம்பிபிஎஸ் இடங்களுக்கு 39,013 விண்ணப் பங்கள் வந்தன. தகுதியானவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்க வேண்டும் என்பதால் விண்ணப்பங் களையும், மாணவர்களின் பிறப்பு, இருப்பிடச் சான்றிதழ், மாணவர்கள், பெற்றோரின் ஜாதிச் சான்றிதழ், அவர்கள் தமிழகத்தில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகமும் தேர்வுக் குழுவும் ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி 3,611 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களிடம், "நான் தவறான சான்றிதழ்கள் அளித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தது கண்டறியப்பட்டால் எனது எம்பிபிஎஸ் சேர்க்கையை ரத்து செய்யலாம். காவல் துறை நடவடிக்கையும் எடுக்கலாம்" என சுய சான்றிதழும் பெறப்படுகிறது. ரண்டு இடங்களில் இருப்பிடச் சான்றிதழ் இருந்தால் அவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியாது. எனவே, வேறு மாநிலங்களைச் சேர்ந்த யாரும் தமிழக ஒதுக்கீட்டில் சேர முடியாது." என்று கூறினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்'

படத்தின் காப்புரிமை ARUN KARTHICK

மேக்கேதாட்டு அணை தொடர்பாக கர்நாடகத்தின் பரிந்துரைகளை, நடைபெறவுள்ள மத்திய அரசுக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் என்கிறத்ய் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

"காவிரி நதிநீர் படுகை என்பது நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகையாகவே இருந்து வருகிறது. இதில், மேக்கேதாட்டு அல்லது வேறெந்த அணை திட்டங்களையாவது காவிரி நதியின் மேற்பகுதியில் இருக்கும் கர்நாடகம் போன்ற மாநிலங்கள் செயல்படுத்தினால் நதியின் கீழ்புறம் இருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு கடுமையாகப் பாதிப்பு ஏற்படும்.

காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் துறையின் கீழ் இயங்கும் நதிநீர் மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான நிபுணர் குழுவின் 25ஆவது கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகத்தின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்." என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்