பி.எஸ்.என்.எல்: மூழ்கும் நிலையில் அரசு நிறுவனம் - வீழ்ச்சிக்கு யார் காரணம்?

பி.எஸ்.என்.எல் படத்தின் காப்புரிமை NurPhoto/Getty Images

பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்ஸவா மிகவும் வேதனையில் இருந்தார்.

தன்னுடைய 1.7 லட்சம் பணியாளர்களுக்கு ஊதியம் தருவதற்கு நிதி திரட்ட முடியாமல் பி.எஸ்.என்.எல். திண்டாடியது. ``நிறுவனத்துக்குள்ளும், வெளியிலும் உள்ள சவால்கள்'' காரணமாக, பி.எஸ்.என்.எல். கடுமையான நிதித் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே போவதால் வங்கிகள் விதித்த நிபந்தனைகளும் இதற்குக் காரணம்.

பிப்ரவரி மாதத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கு 15 நாட்கள் தாமதம் ஏற்பட்ட நிகழ்வு தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.

இந்தத் தலைப்புச் செய்திகள் நீண்ட காலத்துக்கு பரவுமானால், வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குவது சிரமமாகிவிடும் என்பதை அனுபம் ஸ்ரீவத்ஸவா அறிந்திருந்தார்.

”பணம் வசூலிப்பது எப்படி, அதன் புழக்கத்தை எப்படி கையாள்வது என்பதுதான் சவாலானதாக இருந்தது. அது தற்காலிகமானது என்றாலும், அதில் சவால் இருந்தது'' என்கிறார் ஜூன் மாதம் ஓய்வு பெற்ற அனுபம் ஸ்ரீவத்ஸவா.

நிதிக்கு ஏற்பாடு செய்ததும், மார்ச் மாதத்தில் தனது ஊழியர்களுக்கு இந்த நிறுவனம் சம்பளத்தை வழங்கிவிட்டது.

செல்போன் சேவை தொடங்கப்பட்ட 1.5 முதல் 2 ஆண்டுகளுக்குள் முதலாவது இடத்தைப் பிடித்த இந்த நிறுவனம் சுமார் ரூ. 20,000 கோடி கடனில் தத்தளிக்கிறது.

Image caption அனுபம் ஸ்ரீவத்ஸவா

இலவச இன்கமிங் மற்றும் இலவச ரோமிங் என கவர்ச்சிகரமான வசதிகளை பி.எஸ்.என்.எல்தான் அறிமுகம் செய்தது என்றும், அதனால் கட்டணங்கள் பெருமளவு சரிந்தன என்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் நினைவுகூர்கின்றனர்.

இருந்தபோதிலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கடன் நிலைமை ``மிகவும் குறைவானது'' என்று அதன் ஊழியர்கள் உறுதியுடன் வாதிடுகின்றனர்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடிவிட வேண்டும் என்று சிலரும், அதைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று சிலரும் கூறுகின்றனர்.

நிறுவனத்துக்குள் இருக்கும் சவால்கள், நிறுவனத்தின் மீது அரசின் கட்டுப்பாடு மற்றும் அரசின் தலையீடுகள்தான் இப்போதைய நிலைமைக்குக் காரணம் என்று பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 1.7 லட்சம் ஊழியர்களின் சராசரி வயது 55 ஆண்டுகள் என்பதாக உள்ளது. அதில், ``80 சதவீதம் பேர் நிறுவனத்துக்கு சுமையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு கிடையாது. புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. அது இளம் வயது ஊழியர்களின் பணிநெறியைப் பாதிக்கிறது'' என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்கம் மறுக்கிறது.

இந்த நிறுவனம் சம்பளத்துக்காக மட்டும் சுமார் 70 சதவீத நிதியைப் பயன்படுத்துகிறது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் இது 3 முதல் 5 சதவீதம் வரை என்ற அளவில்தான் உள்ளது.

ஒரு வாடிக்கையாளர் மூலமாக வரும் சராசரி வருவாய் அளவு (ஏ.ஆர்.பி.யூ) தனியார் நிறுவனத்துக்கு ரூ. 60 கிடைக்கும் நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர் மூலமாக வரும் சராசரி வருவாய் ரூ.30 என்ற அளவில்தான் உள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறைந்த வருவாய்ப் பிரிவினராக இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE/GETTY IMAGES

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கூடுதல் நிதி உதவி வழங்குவது பற்றி தொலைத் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார். ஆனால், நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் நிறைய இருக்கின்றன.

ஒரு காலத்தில் முதலாவது இடத்தில் இருந்த ஒரு நிறுவனம் எப்படி இவ்வளவு மோசமான நிலைக்கு வந்தது என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

பி.எஸ்.என்.எல். தொடக்கம்

2002 அக்டோபர் 19 ஆம் தேதி பி.எஸ்.என்.எல். செல்போன் சேவைகளை லக்னோ நகரில் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி தொடங்கி வைத்தார்.

மறுநாள் அந்த நிறுவனம் புதிய இணைப்புகளை ஜோத்பூரில் வழங்கத் தொடங்கியது. அப்போது அங்கு பொது மேலாளராகப் பணியில் இருந்தவர் அனுபம் ஸ்ரீவத்ஸவா.

``புதிதாக பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகள் வந்தால், அதை வாங்குவதற்கு கூட்டம் சேரும், குழப்பங்கள் ஏற்படும் என்ற அச்சத்தால், பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டு காவல் துறையினருக்கு நாங்கள் தகவல் தெரிவிப்போம். அப்போதெல்லாம் பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகள் வாங்குவதற்கு 3 முதல் 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு மக்கள் காத்திருந்தார்கள்'' என்று அனுபம் ஸ்ரீவத்ஸவா தெரிவிக்கிறார்.

அப்போதுதான் தனியார் நிறுவனங்கள், சில மாதங்களுக்கு முன்னதாக செல்போன் சேவையைத் தொடங்கி இருந்தன. இருந்தபோதிலும் பி.எஸ்.என்.எல். சேவைகள் பிரபலமானதால், பி.எஸ்.என்.எல். செல் ஒன் சேவைக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமான வரவேற்பு கிடைத்தது.

படத்தின் காப்புரிமை Mint/Getty Images
Image caption பி.எஸ்.என்.எல் மும்பை அலுவலகம்

தொடங்கிய சில மாதங்களிலேயே செல்போன் சேவையில் நாட்டில் முதல் இடத்தை பி.எஸ்.என்.எல். பிடித்துவிட்டது என்று அதிகாரிகள் பெருமையுடன் கூறுகின்றனர்.

அரசின் தலையீடு

2000 ஆம் ஆண்டு அக்டோபரில் தொலைத்தொடர்புத் துறையில் பி.எஸ்.என்.எல்லின் சேவை தொடங்கியது. அப்போது, அரசுக்கு அதில் 100 சதவிகித பங்கு இருந்தது.

மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இருந்தது.

டெல்லி மற்றும் மும்பையில் எம்.டி.என்.எல். நிறுவனமும், நாட்டின் மற்ற பகுதிகளில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் தொலைத் தொடர்பு சேவைகளை அளித்து வருகின்றன.

2000 ஆம் ஆண்டில் பி.எஸ்.என்.எல். உருவாக்கப்பட்ட பிறகு, தனியார் துறையினருடன் போட்டியிடுவதற்கு ஏற்ப, கூடிய விரைவில் செல்போன் சேவையைத் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகள் விரும்பினர். ஆனால், அதற்குத் தேவையான அரசின் ஒப்புதல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த காலக்கட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்தவர் விமல் வக்லு. ``போட்டியில் நாங்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப ஒரு அணுகுமுறையை உருவாக்க நாங்கள் விரும்பினோம். ஆனால், ஏமாற்றம் அடைந்தோம்'' என்று அவர் கூறினார்.

``இந்தத் திட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். இயக்குநர் குழு ஒப்புதல் அளித்து, சேவைகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது'' என்கிறார் அவர்.

அந்த சமயத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முதல் தலைவராக இருந்தவர் டாக்டர் டி.பி.எஸ். சேத். பல முக்கிய முடிவுகள் எடுப்பதில் ஆரம்பத்தில் இருந்த சுதந்திரம், படிப்படியாகக் குறைந்துவிட்டது என்கிறார் சேத்.

படத்தின் காப்புரிமை SOPA Images/Getty Images

``பி.எஸ்.என்.எல். நிறுவனம் சேவைகளைத் தொடங்கிய போது, தனியார் நிறுவனங்கள் வெளியில் பேசுவதற்கு ஒரு நிமிடத்துக்கு ரூ. 16-ம், இன்கமிங் காலுக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ. 8-ம் கட்டணமாக வசூலித்துக் கொண்டிருந்தன. இன்கமிங் கால்களை நாங்கள் இலவசமாக ஆக்கினோம். வெளியில் செய்யும் அழைப்புகளுக்கான கட்டணம் ரூ. 1.50 என குறைத்தோம். இது தனியார் நிறுவனங்களை அதிர்ச்சி அடையச் செய்தது'' என்று விமல் வக்லு தெரிவித்தார்.

2002 முதல் 2005 வரையிலான காலக்கட்டம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பொற்காலமாக இருந்தது. அப்போது பி.எஸ்.என்.எல். சிம் கார்டு வாங்க எல்லோரும் விரும்பினர். நிறுவனத்தில் ரொக்கக் கையிருப்பு ரூ.35,000 கோடி இருந்தது. பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகள் வாங்கித் தருமாறு, அலுவலர்களை அவர்களுக்குத் தெரிந்தவர்கள் கேட்கும் நிலை இருந்தது.

சிவப்பு நாடா அணுகுமுறை

2006 முதல் 2012 வரையிலான காலம்தான் பி.எஸ்.என்.எல்லின் இப்போதைய நிலைமைக்குக் காரணம் என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.

செல்போன் சேவையில் இந்தக் காலக்கட்டம்தான் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்ட காலம். ஆனால், பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிவப்பு நாடா அணுகுமுறையில் சிக்கிக் கொண்டது.

சந்தையில் தங்களுடைய திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு, பி.எஸ்.என்.எல். நிறுவனம் வேகமாக முடிவு எடுத்து, புதிய சாதனங்களை வாங்க வேண்டியது முக்கியம்.

தனியார் நிறுவனங்கள் உடனுக்குடன் முடிவு எடுக்கும் நிலையில், அரசு நிறுவனமாக இருப்பதால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் டெண்டர்கள் வெளியிட்டு முடிவு செய்யும் நடைமுறையை கடைபிடிக்க வேண்டியிருந்தது. அந்த நடைமுறைகளை முடிப்பதற்குப் பல மாதங்கள் ஆனது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஆறாவது கட்ட விரிவாக்க பணி மேற்கொள்ளும் கட்டத்தில், நாட்டில் மொத்தம் 22 கோடி செல்போன் இணைப்புகள் இருந்தன. அதில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்கு 22 சதவிகிதமாக இருந்தது என்று பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

``93 மில்லியன் இணைப்புகளாக அதிகரிக்கும் வகையில் இந்த நிறுவனம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், ஏதாவது ஒரு காரணத்தால் அது தாமதமானது. சில நேரங்களில் ஊழல் புகார்கள் காரணமாகவும், வேறு சில நேரங்களில் வேறு காரணங்களாலும் இந்தத் தாமதம் ஏற்பட்டது. பி.எஸ்.என்.எல். திறனில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், சந்தையில் அதனுடைய பங்கு குறைந்துவிட்டது. தனியாருடைய பங்கு வெகு வேகமாக அதிகரித்தது'' என்று அவர் கூறினார்.

``அந்த காலக்கட்டத்தில் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அமைதியின்மை இருந்தது. நாம் ஏன் பின்தங்கி இருக்கிறோம் என்று புரியவில்லை. சரியாக கால்களுக்கு இணைப்பு கிடைக்கவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களால் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். -ஐ விட்டு வேறு தனியார் நிறுவனங்களுக்கு மாறினர்'' என்று அவர் விவரிக்கிறார்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மோசமான சேவைகள் குறித்து மக்கள் மிகுந்த கோபம் அடைந்தனர்.

அப்போது பி.எஸ்.என்.எல். நிறுவன தொழிற்சங்க பொதுச் செயலாளர் அபிமன்யூ அஹமதாபாத் நகருக்குச் சென்றார். அன்று மாலையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.

அப்போது சிகிச்சை அளித்த டாக்டர், ``முதலில் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். பிறகு உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். என்னிடம் பி.எஸ்.என்.எல். செல்போன் இணைப்பு ஒன்று உள்ளது. கால்கள் பேசும்போது வெளியில் சாலைக்கு வந்து நான் பேச வேண்டியுள்ளது. நான் பேசுவது மறுமுனையில் இருப்பவருக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக நான் அதிக சப்தமாகப் பேச வேண்டியுள்ளது. முதலில் என்னுடைய பிரச்சனையைத் தீர்த்து வையுங்கள்'' என்று கூறியதாக அபிமன்யூ நினைவுகூர்கிறார்.

அந்தக் காலக்கட்டத்தில் அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல்கள் கிடைப்பதும் தாமதம் ஆனது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக, சந்தையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகள் குறைய வேண்டும் என்று அமைச்சகத்தில் இருந்த சிலர் விரும்பினார்கள் என்று சொல்லும் அளவுக்கு மோசமான நிலைமை இருந்தது என்று தொலைத்தொடர்பு விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் சூர்யா மகாதேவன் தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை MANAN VATSYAYANA
Image caption தயாநிதி மாறன்

2004 முதல் 2007 வரையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அதன்பிறகு 2007 முதல் 2010 வரையில் அந்தப் பொறுப்பை ஆ. ராசா வகித்தார்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பரிதாபகரமான நிலைமை பற்றி கருத்து கேட்பதற்கு ஆ. ராசாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. ``என்னுடைய காலத்தில், பி.எஸ்.என்.எல். செழிப்பாக இருந்தது. எந்த முடிவை எடுப்பதற்கும் பி.எஸ்.என்.எல். இயக்குநர் குழுவுக்கு அதிகாரம் இருந்தது. அது பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குப் பொற்காலமாக இருந்தது. அப்போது அந்த நிறுவனம் விரிவாக்கப்பட்டது. எனது காலத்தில் ஒரு டெண்டர்கூட ரத்து செய்யப்படவில்லை. இது தவறு என்று நிரூபிக்க யாரிடமாவது ஆதாரம் இருக்கிறதா? என்னுடைய பதவிக் காலத்தின் போது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை எடுத்துக் கொள்ள ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அந்த நிறுவனத்துக்கு தண்டனை விதித்தோம்'' என்று தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.

தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளையும் தயாநிதி மாறன் மறுத்தார்.

``எனது காலத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. தனியார் நிறுவனங்கள் ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்தது'' என்று அவர் கூறினார்.

சென்னையில் தன்னுடைய வீட்டில் பி.எஸ்.என்.எல். இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், ``எனக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, அரசியல் ரீதியில் எழுப்பப்பட்ட புகார் அது'' என்கிறார் தயாநிதி மாறன்.

அதுகுறித்த பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது.

படத்தின் காப்புரிமை Pacific Press/Getty Images

2010ல் 3ஜி அலைக்கற்றை ஏலம்

2010 ஆம் ஆண்டில் 3 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. அரசு நிறுவனம் என்பதால் அதில் பி.எஸ்.என்.எல். பங்கேற்க முடியாமல் போனது. ஒட்டுமொத்த நாட்டிற்குமான அலைக்கற்றை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்தபோதிலும், ஏலத்தில் தனியார் வாங்கிய விலையை பிஎஸ்என்எல் நிறுவனமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மேலும், WiMAX தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான வயர்லெஸ் அதிவேக இன்டர்நெட் வசதிக்கான அலைக்கற்றைக்கும் பி.எஸ்.என்.எல். மிக அதிகமான தொகை செலுத்த வேண்டியிருந்தது.

எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களில் நிதி நிலையை இது வெகுவாகப் பாதித்தது. இந்த ஏலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.17,000 - ரூ.18,000 கோடி செலவிட வேண்டியிருந்தது. அதனால், நிறுவனத்தின் கையிருப்பு காலியானது. எம்.டி.என்.எல். நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்த மாதம் ரூ.100 கோடி கட்ட வேண்டியிருந்தது என்று முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கீற்று

படத்தின் காப்புரிமை SOPA Images/Getty Images

2014 முதல் 2017 வரையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் புதிய நம்பிக்கை பிறந்தது. அப்போது இந்த நிறுவனம் நடைமுறை காலத்தில் லாபம் ஈட்டியது. இதை செங்கோட்டையில் ஆற்றிய உரையில் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

``2014-15ல் நடைமுறைக்கால லாபமாக ரூ.67 கோடியை பி.எஸ்.என்.எல். ஈட்டியது. 2016-17ல் அது ரூ.2500 கோடியாக உயர்ந்தது. 2016 ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் உரையாற்றியபோது, பிரதமர் நரேந்தி மோதி, பிஎஸ்என்எல் வெற்றி பற்றிக் குறிப்பிட்ட போதும்கூட, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நல்ல எதிர்காலம் பிறந்துவிட்டது என்ற நிலைதான் இருந்தது'' என்று முன்னாள் தலைவர் அனுபம் ஸ்ரீவத்ஸவா கூறுகிறார்.

இதுதவிர பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் வயர் இல்லாத அதிவேக இன்டர்நெட் அலைக்கற்றையை அரசிடம் ஒப்படைத்தன. அதற்குப் பணமும் கிடைத்தது. மோசமாகி வந்த நிதி நிலைமைக்கு, உத்வேகம் அளிப்பதாக அது இருந்தது.

இருந்தபோதிலும், நடைமுறை காலத்தில் லாபம் ஈட்டியதாகச் சொன்னதே நகைப்புக்குரியது என்று மற்றொரு பி.எஸ்.என்.எல். அதிகாரியான விமல் வக்லு கூறுகிறார். சாதனங்களின் விலை மதிப்பு குறைவதை அதில் கணக்கில் கொள்ளவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், நடைமுறைக் கால லாபத்தைக் கணக்கிடும்போது, சாதனங்களின் மதிப்புக் குறைவு குறித்தும் கணக்கில் கொள்ளப்பட்டது என்கிறார் ஸ்ரீவத்ஸவா. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கணக்கியல் நடைமுறைகள் உயர்தரமானவை என்று அவர் குறிப்பிட்டார்.

ஜியோவின் வருகை

படத்தின் காப்புரிமை AFP

தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகை புதிய மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் பாதித்துவிட்டது.

பி.எஸ்.என்.எல். நிலைமை மோசமானதற்கு ஜியோதான் காரணம் என ஒருதரப்பினர் கூறினாலும், பலர் அதை ஏற்கவில்லை.

ஜியோ நிறுவனத்தின் விலை நிர்ணய முறையும், தனியார் நிறுவனங்களின் தாக்கமும்தான் நிதி நிலைமைக்குக் காரணம் என்று பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்க நிர்வாகி அபிமன்யூ கூறுகிறார். ஜியோ நிறுவனத்தின் அணுகுமுறைகள் காரணமாக, ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ், ரிலையன்ஸ் இன்ஃபோகாம், டெல்நார் போன்ற சிறிய மற்றும் நடுத்தர தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

அதே சமயத்தில், ``ஜியோ நிறுவனம் எந்த வகையிலும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்குப் போட்டியாக இருக்கவில்லை. ஜியோ நிறுவனம் சேவையைத் தொடங்கிய போது, பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்கெனவே மோசமான நிலைமையிலதான் இருந்தது. பலரும் ஜியோதான் காரணம் என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள்'' என்று மற்றொரு அதிகாரியான விமல் வக்லு கூறுகிறார்.

ஜியோ நிறுவனத்தால் தொலைத் தொடர்பு சேவைகளைத் தொடங்க அவ்வளவு நிதியை முதலீடு செய்ய முடியுமானால், மற்ற நிறுவனங்கள் முதலீடுகளைத் திரட்ட வேண்டாம் என்று யார் தடுத்தது?!

4 ஜி அலைக்கற்றை ஏலம்

படத்தின் காப்புரிமை CHINA NEWS SERVICE

உலகம் 5 ஜி அலைக்கற்றையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் 4 ஜி அலைக்கற்றையே இல்லை என்பது ஆச்சர்யத்துக்குரிய விஷயம்.

2016ல் 4 ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தபோதும், அதில் பி.எஸ்.என்.எல். பங்கேற்க விடாமல் மீண்டும் தடுக்கப்பட்டது என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.

``அது தொடர்பான கோப்பு சுற்றிக் கொண்டே இருந்தது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன'' என்று அந்த அதிகாரி கூறினார்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை கொடுக்காததால்தான் அதன் நிலைமை மோசமாகிவிட்டது என்று தயாநிதி மாறன் கூறினார். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல். போட்டியிடுவதை அரசு விரும்பவில்லை. அதன் கழுத்தை நெறிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கட்டுரையை எழுதிய போது, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த மனோஜ் சின்ஹாவை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் பேச முடியுமானால், இந்தக் கட்டுரையில் அந்தத் தகவல்களைச் சேர்ப்போம்.

பி.எஸ்.என்.எல். நேரடியாக 5 ஜி அலைக்கற்றையை வாங்குவது பற்றி சிந்திக்கலாம் என்பது பொதுவான எண்ணம். ஆனால், அதற்காக சாதனங்களை தயார்படுத்துவதற்கு, முதலில் 4 ஜி நிறுவியாக வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பி.எஸ்.என்.எல். எதிர்காலம்

பி.எஸ்.என்.எல். பணி கலாசாரத்தில் சுதந்திரம் கிடையாது என்று பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் அதிகாரி ஒருவர் எங்களிடம் கூறினார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கான நிதி ஒப்புதல்கள் அரசிடம் நிலுவையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, செயல்பாட்டு முறையை மேம்படுத்த வேண்டியது இப்போதைய அவசியமாக உள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முதல் தலைவரான டாக்டர் டி.பி.எஸ். சேத் முதல், இன்றைய ஊழியர்கள் வரையில், எல்லோருமே, சில மாதங்களுக்காவது பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு அரசின் உதவி தேவை என்று கருதுகின்றனர்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி இருக்கும் என்று அந்த நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். ரூ.20,000 கோடி மதிப்புள்ள உயர் கோபுரங்கள் உள்ளன. 8,00,000 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஆப்டிகல் கேபிள் பதித்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.64,000 கோடி. தேவை ஏற்பட்டால், முதலீடு திரட்டுவதற்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

``இந்தியா போன்ற நாடுகளில் பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனம் அவசியமானது. சந்தையில் அரசு நிறுவனத்தின் தலையீடு இருந்தால்தான், சமத்துவ நிலையை உருவாக்க முடியும்'' என்று அனுபம் ஸ்ரீவத்ஸவா கூறுகிறார்.

ஆனால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார்மயமாக்கிவிட வேண்டும் என்று பேராசிரியர் சூரியா மகாதேவன் கூறுகிறார்.

அதிக காலத்துக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நீங்கள் நடத்தினால், இழப்பும் அதிகமாகும் என்கிறார் அவர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறுப்பேற்பு நிலை எதுவும் கிடையாது. நல்ல பணியாற்றியதற்கு யாருக்கும் பாராட்டு கிடைப்பதில்லை. மோசமாக வேலை செய்ததற்கு தண்டனையும் கிடையாது. பல அரசு நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டு, போட்டியில்லாதிருந்தால், சவால்கள் இல்லாதிருந்தால் மட்டுமே நன்றாகச் செயல்படுகின்றன என்கிறார் அவர்.

தனியார் மயமாக்குவதை தாம் ஆதரிக்கவில்லை என்று தயாநிதி மாறன் தெரிவித்தார். தனியார் நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல். போட்டியிடுவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு திட்டத்தை அரசு உருவாக்கி வருவதாகவும், அதுபற்றி வேறு எதுவும் சொல்ல முடியாது என்றும் பி.எஸ்.என்.எல். உயர் பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :