மூன்றாண்டுகள் தண்ணீர் பஞ்சத்தால் கிராமமே அசுத்த நீரை குடிக்கும் அவலம்

தண்ணீர் எடுக்க காத்திருக்கும் மூதாட்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், கால்நடைகள், பொதுமக்கள் குடிநீரின்றி பரிதவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பெரிதும் நம்பியுள்ள வடகிழக்கு பருவமழை, கடந்த சில ஆண்டுகளாக சிறிதளவு கூட பெய்யவில்லை. முன்மழை, பின்மழை, மத்திய மழை என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த வடகிழக்கு பருவமழை கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் பெய்யாமல் போய் விட்டது.

கடும் புயல் காலங்களிலும் இந்த பகுதியில் மட்டும் சொட்டு தண்ணீர் கூட மழையாகப் பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது என்று கூறும் அளவிற்கு ஒரு நாள் பெய்த மழையும் கடல்பகுதியில் பெய்து வீணாகி போனது.

இதனால் நிலத்தடி நீர் ஆதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மழையில்லாமல் போனதால் நீர் ஆதாரங்கள் வறண்டுபோய் கிணறுகளின் நீர் மட்டம் மணல் மற்றும் பாறைகள் தெரியும் அளவிற்கு அடிமட்டத்திற்கு சென்றுவிட்டது.

கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் கல், மண் தெரிகிறது. வறட்சி காலங்களில் வழக்கமாக கிணறுகளில் எட்டி எடுக்கும் நிலையில் தண்ணீர் இருப்பது மாறி கிணறுக்குள் இறங்கினாலும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. நீர்மட்டம் குறைந்ததால் பொதுமக்கள் குடிநீர்க்கு அலைந்து திரிந்து பரிதவித்து வருகின்றனர்.

ஆனால், சிலர் கிணறுகளை நம்பி இனி பயனில்லை என்று உணர்ந்து ஆழ்துளை குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வழக்கமாக இப்பகுதிகளில் 20 முதல் 25 அடி ஆழத்திலும், சில இடங்களில் 50 அடி ஆழத்திலும் ஆழ்துளை குழாய் அமைத்தால் தண்ணீர் வந்துவிடும் நிலையில் தற்போது மாவட்டத்தில் 100 அடி ஆழத்திற்கு ஆழ்துளை குழாய் அமைத்தாலும் தண்ணீர் வரவில்லை என்பதுதான் வேதனை.

மூன்று ஆண்டுகளாக தண்ணீர் இல்லாத கிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லிருக்கை கிராமம், இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களின் முக்கிய தேவையான குடிநீர் கிடைக்கவில்லை என்கின்றனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இக்கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் குழாய், இரண்டு கி.மீ தூரத்தில் உடைந்து சேதம் அடைந்ததால் இன்று வரை காவிரி தண்ணீரை கண்ணால் கூட பார்க்க முடியவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

நல்லிருக்கையில் கண்மாயில் நான்கு கிணறுகள் அமைக்கபட்டும் தண்ணீர் இல்லாததால் பயன்படவில்லை, டேங்க் இருக்கிறது, குழாய் இருக்கிறது ஆனால் தண்ணீர் மட்டும் இல்லை என்பதே இந்த ஊரின் நிலை. தூர் வாரப்படாமலும், முறையான பராமரிப்பின்றியும் காய்ந்து வறண்ட பூமியாக காட்சி தருகிறது கண்மாய்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மாரியம்மாள் எங்கள் நல்லிருக்கை கிராமத்திற்கு 'காவிரி தண்ணீர் வந்து மூன்று ஆண்டு ஆகிறது, ஒன்றுக்கு நான்கு கிணறுகள் உள்ளன. ஆனால் கிணற்றில் மண்ணும் பாறையும் மட்டுமே' உள்ளன. கிணற்றில் தண்ணீர் கிடையாது. தண்ணீர் எடுக்க காலையில் வந்தால் 'சாப்பிடகூட முடியாமல் பசியும், பட்டினியுமாக காத்து இருந்தால்தான் ஆளுக்கு ஒரு குடம் இரண்டு குடம் தண்ணீர் கிடைக்கும' என்றார்.

நல்லிருக்கை கண்மாயில் உப்பு நீரை நன்னீராக மாற்றுகின்ற ஒரு ஆர்.ஓ பிளாண்ட் உள்ளது அந்த குழாயில் ஒரு நாள் தண்ணீர் வந்தால் ஒரு மாததிற்கு தண்ணீர் வருவதில்லை, அந்த தண்ணீரையும் உணவு சமைப்பதற்கோ,குடிப்பதற்கோ முடியாது. தண்ணீர் கஷ்டம் மிக பெரிய கஷ்டமாக உள்ளது. குடிநீரின்றி ஆடு,மாடுகள் ஆங்காங்கே இறந்து விடுவதாக வெள்ளையம்மாள் பிபிசி தமிழிடம் சோகத்துடன் கூறினார்.

சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் அவலம்

ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள சிக்கல், சாயல்குடி, தரைக்குடி, ஆர்.சி.புரம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது, அக்குழாயிலிருந்து கசியும் நீரை அள்ளி பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குழாயின் உடைப்பை சரிசெய்யாமல் விட்டுவிட்டதால், குழாயின் அருகே ஓர் அடி ஆழத்திற்கு குழி தோண்டி ஒழுகிக்கசியும் சுகாதரமற்ற நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேறும் சகதியுமாக குடங்களில் எடுத்துச்சென்று குடிக்கவும் சமையல் செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். நிலவும் கடும் வறட்சியால், வேறு வழியின்றி சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராக்காயி எங்கள் ஊரில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. இதனால், மனிதர்களும், ஆடு மாடுகளும் சந்திக்கும் கஷ்டம் அதிகம்.

குடிப்பதற்கு தனியார் தண்ணீர் வண்டிகளில் ஒரு குடம் ஏழு ரூபாய்க்கு வாங்கி வருகிறோம் ஆனால் எங்களால் அவ்வளவு பணம் செலவு செய்து தண்ணீர் வாங்க முடியாததால் குழாய்களில் ஏற்படும் உடைப்பில் வரும் தண்ணீரை எடுத்து குடித்து வருகிறோம், இந்த தண்ணீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் வருகின்றன என வேதனையுடன் தெரிவித்தார் அவர்.

மேலும் பிபிசி தமிழிடம் பேசிய தெய்வானை, கடந்த ஐந்து வருடங்களாக எங்கள் கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த தண்ணீர் பஞ்சத்தால் 'எங்கள் கிராமத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத பெண்களை, மாப்பிள்ளை வீட்டார் திருமண செய்ய பெண் கேட்டு வருவதில்லை'. குடி தண்ணீருக்காக 'ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் நிலை தான்' இங்குள்ளளது” என்று தெரிவித்தார்.

இது குறித்து திருப்புல்லாணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மங்களேஸ்வரியிடம் கேட்டபோது, “நல்லிருக்கை கிராமத்திற்கு செல்லும் காவிரி குழாய் பல இடங்களில் உடைந்து சேதமடைந்த நிலையில் அவற்றை; சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அக்கிராம மக்களின் குடி நீர் தேவைக்காக ரூபாய் நான்கு லட்சம் மதிப்பீட்டில் புதிய கிணறு அமைக்கும் பணி துவங்க உள்ளது” என தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பிபிசி தமிழிடம் கூறுகையில், “மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. மேலும் காவேரி கூட்டு குடிநீர் குழாயை உடைத்து தண்ணீர் திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. அதேபோல் மாவட்டத்தில் குழாய் உடைப்பு அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றால் உடனடியாக பொது மக்கள் 1800 425 7040 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க முழுமுயற்சி எடுக்கப்படும்” என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்