கர்நாடகா அரசியல் குழப்பம்: 'சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது' - உச்ச நீதிமன்றம்

கர்நாடகா அரசியல் குழப்பம் படத்தின் காப்புரிமை Getty Images

கர்நாடக அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜிநாமா மற்றும் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் எந்த நடவடிக்கையும் தற்போதைக்கு எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளும் கூட்டணியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜிநாமா விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரி சபாநாயகர் ரமேஷ் குமார் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஒருவர் ராஜினாமா கடிதத்தை கொடுக்கும்போது அதனை ஆய்வுக்கு உட்படுத்தாமல் முடிவெடுக்க முடியாது என்று வாதிட்டார்.

சபாநாயகரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் எந்த கேள்வியும் எழுப்பக் கூடாது என நினைக்கிறீர்களா என சிங்விக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் தரப்பு, "நிச்சயமாக இல்லை. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி ராஜினாமா கடிதத்தை கொடுக்கவில்லை" என்றது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்ற கேள்வி தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது.

இதில் பல சட்ட சிக்கல் உள்ளது, எனவே வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் சபாநாயகர் தற்போது ராஜிநாமா மற்றும் தகுதி நீக்கம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்தது என்ன?

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த காங்கிரசுக்கு சபாநாயகரையும் சேர்த்து 79 உறுப்பினர்கள் உள்ளனர். மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 37 உறுப்பினர்கள். மேலும் ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினரும், 2 சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரிப்பதால் ஆளும் கூட்டணி அரசுக்கு 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

ஆனால், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இதனால் ஆளும் கூட்டணிக்கு நெருக்கடி தொடங்கியது.

இந்த ராஜிநாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

ரிசாட்டில் தஞ்சம்

ராஜிநாமா செய்த எம்எல்ஏக்களில் 10 பேர் மும்பைக்கு சென்று அங்கிருந்த ரிசாட் ஒன்றில் தங்கினார்கள்.

அவர்களை சமாதானப்படுத்த மும்பைக்கு சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே சிவகுமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் சென்ற அதிருப்தி எம்எல்ஏக்கள்

இந்நிலையில், தங்களது ராஜிநாமா கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறி, அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். சபாநாயகர் வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

நிலைமை இப்படியிருக்க, கடந்த இரு நாட்களுக்கு முன்பு மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தார்கள். இதனைத் தொடர்ந்து ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்தது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டது.

சபாநாயகரை சந்தித்த எம்எல்ஏக்கள்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 10 எம்எல்ஏக்களும் சபாநாயகர் ரமேஷ் குமாரை சந்தித்தனர். இவர்களின் ராஜிநாமா கடிதம் மீது உடனடியாக முடிவெடுக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் ரமேஷ் குமார் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் எம்எல்ஏக்களின் ராஜிநாமா விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அந்த கடிதங்கள் குறித்த உண்மைத்தன்மையை ஆராய வேண்டியுள்ளது என்றும் பின்புதான் முடிவெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த மனுவே இன்று உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் பரபரப்பான சூழலில் இன்று கர்நாடக சட்டமன்றம் கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் - மஜத ஆட்சி கவிழுமா?

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தைச் சேர்ந்த 15 எம் எல் ஏக்களின் ராஜிநாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால், சட்டசபையில் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 209 ஆக குறையும்.

இதனால் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்