200 ரூபாய் கடனை அடைக்க இந்தியா வந்த கென்ய நாடாளுமன்ற உறுப்பினர்

மளிகைக் கடைக்காரர் காசிநாத் காவ்லி உடன் ரிச்சர்ட் நியாககா டோங்கி
Image caption மளிகைக் கடைக்காரர் காசிநாத் காவ்லி உடன் ரிச்சர்ட் நியாககா டோங்கி

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்: 200 ரூபாய் கடனை திருப்பித்தர இந்தியா வந்த கென்ய எம்.பி

மகாராஷ்டிராவில் உள்ள மளிகைக் கடையில் 22 ஆண்டுகளுக்குமுன், தான் வைத்த 200 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, கென்ய நாட்டைச் சேர்ந்த எம்.பி., இந்தியா வந்ததாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஃப்ரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் நியாககா டோங்கி. இவர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில், எம்.பி.,யாக பதவி வகிக்கிறார். இவர், 1985 - 89 வரை, மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாதில் உள்ள மவுலானா ஆஸாத் கல்லுாரியில் நிர்வாகத் துறையில் பட்டப்படிப்பு படித்தார்.

அப்போது, அவுரங்காபாதில் ரிச்சர்ட் தங்கியிருந்த வீட்டின் அருகே, காசிநாத் காவ்லி என்பவர், மளிகை கடை நடத்தி வந்தார். அங்கிருந்து, தனக்கு தேவையான பொருட்களை, ரிச்சர்ட் கடனில் வாங்கி வந்தார். இந்நிலையில், 1989ல் படிப்பு முடிந்தவுடன், ரிச்சர்ட் கென்யாவுக்கு திரும்பினார். ஊர் திரும்பிய பின், காசிநாத்துக்கு, 200 ரூபாய் மளிகை பாக்கி தர வேண்டும் என்பது, ரிச்சர்ட்டின் நினைவுக்கு வந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்தியா சென்று, அதை திருப்பித் தர வேண்டும் என, மனதிற்குள் நினைத்துக் கொண்டார். பின், கென்யாவில் எம்.பி., ஆனார்.

22 ஆண்டுகளுக்கு பின், 200 ரூபாய் பாக்கியை திருப்பிக் கொடுப்பதற்காகவே, அவர் தன் மனைவி மிச்சேல் உடன் இந்தியா வந்தார். இங்கு, காசிநாத் காவ்லியை சந்தித்து, 200 ரூபாயை திருப்பிக் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத காசிநாத், பழைய நினைவுகளில் நெகிழ்ந்தார்.

வெறும், 200 ரூபாய் கடனை, 22 ஆண்டுகளுக்குபின் திருப்பிச் செலுத்த, பல்லாயிரம் கி.மீ., துாரம் பயணித்து வந்த கென்யா நாட்டு, எம்.பி.,யின் நேர்மை, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமணி: "திமுகவின் வாக்குறுதிகளை அமெரிக்காவாலேயே நிறைவேற்ற முடியாது"

தேர்தல் வெற்றி குறித்து சட்டப்பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை அன்று சட்டப்பேரவையில், காரசார விவாதம் நடைபெற்ற போது பேசிய மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், திமுகவின் வாக்குறுதிகளை அமெரிக்காவாலேயே நிறைவேற்ற முடியாது என்று கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கைத்தறித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் க.சுந்தர், மக்களவைத் தேர்தலில் அதிமுக 1.25 கோடி வாக்குகள் மட்டுமே பெற்றது. திமுக 2 கோடி வாக்குகள் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்ற அதிமுகவின் சாதனையை திமுக தட்டிப் பறித்துள்ளது என்றார்.

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் அதிகமாக தோல்வி அடைந்த கட்சி என்றால் அது திமுகதான். தமிழகத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சி என்றால் அது அதிமுகதான். மக்களவைத் தேர்தலில் உண்மைக்கு மாறான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றீர்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளை அமெரிக்காவாலேயே நிறைவேற்ற முடியாது. இந்தியா முழுவதற்கும் போடப்படும் நிதிநிலை அறிக்கையின் ஒட்டுமொத்த நிதியை ஒதுக்கினாலும், திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது தற்காலிகப் பின்னடைவுதான். ஆனால், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றும் முழுமையான மகிழ்ச்சியைப் பெற முடியாமல் திமுக இருக்கிறது. அறுவைச் சிகிச்சை வெற்றி. நோயாளி இறந்தார்' என்பது போல உங்களுக்குத் தேர்தல் முடிவு கிடைத்துள்ளது என்று கூறியதாக தெரிவிக்கிறது தினமணி செய்தி.

படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை' - உச்சநீதிமன்றம் வழக்கு

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது குறித்த பல செய்திகள் வெளியாவதை தொடர்ந்து, இதுகுறித்து தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணை நடத்தவுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தை வழிநடத்த அல்லது உதவ மூத்த வழக்கறிஞர் வி கிரியை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அன்னிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு நியமித்துள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பது, விசாரணையை வீடியோ பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர் விதிமுறைகளை வகுத்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

இந்த வழக்கில் உதவும்படி சொலிஸிட்டர் ஜெனரல் துஷர் மேதாவையும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தாண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் தொடர்பாக 24,212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படிப் பார்த்தால் இதுபோல நாள் ஒன்றுக்கு 133 சம்பங்கள் நடந்துள்ளன.

இந்த எண்ணிக்கை 2016ஆம் ஆண்டை காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.

தமிழர் உருவாக்கிய கழிவறையுடன் கூடிய கட்டில்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :