30 ஆண்டுகளுக்கு பின் கடனை கொடுக்க இந்தியா வந்த கென்ய எம்.பி - சொல்லும் காரணம் என்ன?

200ரூபாய் கடனை கொடுக்க இந்தியா வந்த கென்ய எம்பி படத்தின் காப்புரிமை RAVIKANT GAVALI

எழுபத்து ஐந்து வயதாகும் காஷினாத் மர்டண்ட்ரோ கவேலி மகராஷ்டிராவில் அவுரங்காபாத் நகரிலுள்ள வாங்கடேநகரில் வசித்து வருகிறார். ஐந்து மாடி குடியிருப்பில், முதல் தளத்தில் மளிகை கடையும், மற்ற நான்கு மாடிகளில் வீடுகளும் உள்ளன.

ஞாயிறன்று மாலை சுமார் 7 மணியளவில், காஷிநாத் வீடு திரும்பினார். சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் 7.30 மணிக்கு இரவு உணவு சாப்பிட அமர்ந்தார்.

வயதாகிவிட்ட காரணத்தால் அவர் சற்று சீக்கிரமே இரவு உணவை முடித்துக் கொள்வது வழக்கம். சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அவரின் மகன் நந்தகுமார் வந்து அவரை காண யாரோ வந்திருப்பதாக தெரிவித்தார்.

15-20 நிமிடங்கள் கழித்து தன்னை காண வந்தவரை சந்திக்க கீழே சென்றார் காஷிநாத்.

நடுத்தர வயதுடைய ஒரு வெளிநாட்டவர் காஷிநாத்தை சந்திக்க கடையில் நின்று கொண்டிருந்தார்.

அவருடன் பெண் ஒருவரும் வந்திருந்தார். காஷிநாத்துக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் காஷிநாத்தை சந்தித்தவுடன் அவர்கள் கண்களில் நீர் வழிய தொடங்கியது. ஐந்து நிமிடங்கள் அவர்களால் பேசவே முடியவில்லை. காஷிநாத்தை பார்த்து அழுதுக் கொண்டே இருந்தனர்.

படத்தின் காப்புரிமை RICHARD TONGI/RAVIKANT GAVLI

காஷிநாத்திற்கு அவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. ஆனால் அவர்கள் அழுவதை பார்த்து இவரும் உடைந்துவிட்டார்.

அதன்பிறகு அந்த நடுத்தர வயது நபர் தன்னை காஷிநாத்திடம் அறிமுகம் செய்து கொண்டபின் அவருக்கு சட்டென அனைத்தும் நினைவுக்கு வந்தது.

அது 1985-ல் நடந்த கதை. அவுரங்காபாத்தில், வாங்கடேநகருக்கு அடுத்து மெளலான அசாத் கல்லூரிக்கு அருகில் ஒரு புதிய காலனி ஒன்று உருவாகியது.

அந்த காலனியில் பெரும்பாலான உரிமையாளர்கள் தங்களின் வீடுகளை பக்கத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டனர். அதில் பல வெளிநாட்டு மாணவர்களும் இருந்தனர்.

அதில் ரிச்சர்ட் நியாக்கா டாங்கியும் ஒருவர். 1985ஆம் ஆண்டு கென்யாவிலிருந்து அவுரங்காபாத்திற்கு ரிச்சர்ட் படிக்க வந்திருந்தார். காஷிநாத்தின் கடைக்கு அருகில் அவர் வாடகைக்கு குடியிருந்தார்.

பல சமயங்களில் கென்யாவிலிருக்கும் தனது குடும்பத்திடமிருந்து அவருக்கு சரியான நேரத்தில் பணம் வந்து சேராது. எனவே அவர் காஷிநாத்தின் கடையில் இருந்து சில சமயம் பொருட்களை கடன் வாங்கிவந்தார்.

காஷிநாத்தும் ரிச்சர்ட்டுக்கு பால், ரொட்டி, முட்டைகள், ரவை, நெய் என பல பொருட்களை எந்தவித தயக்கமும் இன்றி கடன் வழங்கினார்.

தனது படிப்பை முடித்த பிறகு ரிச்சர்ட் 1989ஆம் ஆண்டு கென்யாவுக்கு திரும்பினார். ஆனால் தனது செலவுகளை கணக்கு பார்த்ததில் காஷிநாத்திற்கு கடன் பாக்கியாக 200 ரூபாய் வழங்க வேண்டும் என்று தெரியவந்தது. அந்த சமயத்தில் இருந்து அந்த கடனை திரும்பி தர வேண்டும் என அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால், நிலைமை மாறியது. ரிச்சர்ட் அரசியலில் நுழைந்தார். அவர் கென்ய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஆனார். தான் ஒரு பெரிய அரசியல்வாதியாக இருந்தபோதும் அவர் காஷிநாத்திடம் வாங்கிய கடனை நினைவில் வைத்திருந்தார். அதனை தனது மனைவியிடமும் தெரிவித்தார். அந்த கடனை நான் திரும்பிக் கொடுக்கவில்லை என்றால் "நான் கடவுளை எவ்வாறு எதிர்கொள்வேன்" என்று தனது மனைவியிடம் அவர் கூறினார். தனக்கு இந்தியா செல்ல ஒரு வாய்ப்பு உண்டாக்கி தர வேண்டும் எனவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்.

30 வருடங்களுக்கு பிறகு வாய்த்த சந்தர்ப்பம்

30 வருடத்துக்கு பிறகு, கடந்த வாரம் ரிச்சர்ட்டுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. தற்போது கென்ய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் கமிட்டியின் உறுப்பினராக உள்ளார் ரிச்சர்ட். சமீபத்தில் அவர் தனது பணி பயணமாக இந்தியா வந்தார்.

டெல்லியில் தனக்கு இருந்த பணியை முடித்துவிட்டு, மருத்துவரான தனது மனைவியுடன் அவுரங்காபாத் வந்தார் ரிச்சர்ட். வாங்கடேநகரில் காஷிநாத்தின் வீட்டை தேடினார். அந்த இடம் பெரிதும் மாறியிருந்தது. அவருக்கு காஷிநாத் கவாலி என்ற பெயரில் கவாலி என்பது மட்டும் நினைவில் இருந்தது.

படத்தின் காப்புரிமை RAVIKANT GAVALI

அதுவும் அவர் அதனை 'கவாயா' என்று உச்சரித்தார். எனவே அங்கிருந்தவர்களால் அவர் யாரை தேடி வந்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன்பின் காஷிநாத் எவ்வாறு ஒரு பனியன் அணிந்து கொண்டு தன் கடையில் அமர்ந்திருப்பார் என்று சுற்றுயிருந்தவர்களுக்கு விவரித்தார் ரிச்சர்ட். அதிர்டவசமாக அந்த கூட்டத்தில் காஷிநாத்தின் உறவினர் ஒருவரும் இருந்தார். எனவே, அவர் ரிச்சரிட்டை காஷிநாத்தின் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

விவசாயியின் மகன்

ரிச்சர்ட் மற்றும் காஷிநாத் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

காஷிநாத் ரிச்சர்ட்டை தனது வீட்டிற்கு அழைத்து சென்று தேநீர் வழங்கினார். அவர் ரிச்சர்ட்டை நன்கு உபசரித்தார். மேலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை தெரிந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார் காஷிநாத். மூன்று மணிநேரம் காஷிநாத்தின் வீட்டில் இருந்தார் ரிச்சர்ட். அப்போது பேசிக் கொண்டிருந்தபோது தான் காஷிநாத்திற்கு 200 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார்.

எனவே 250 யூரோக்களை காஷிநாத்திடம் வழங்கினார். ஆனால் காஷிநாத் அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார். ரிச்சர்ட் தன்னை இவ்வளவு தூரம் தேடி வந்து சந்தித்ததில் தான் மகிழ்ச்சியடைந்ததாக அவர் கூறினார். ஆனால் ரிச்சர்ட் அந்த பணத்தை வாங்கிகொள்ள அவரை வற்புறுத்தினார்.

"நீங்கள் எனது கஷ்ட காலத்தில் எனக்கு உதவி செய்தீர்கள். நான் அதை மறக்கமாட்டேன். நான் ஒரு விவசாயியின் மகன். கடனை திரும்ப செலுத்தாமல் என்னால் உயிர் வாழ முடியாது. கடனை திரும்ப கொடுக்கவில்லை என்றால் எவ்வாறு நான் கடவுளை எதிர்கொள்வேன்." என்று கேட்டார் ரிச்சர்ட்

அதன்பின் காஷிநாத் கண்ணீருடன் அந்த பணத்தை பெற்றுக் கொண்டார். காஷிநாத்தின் குடும்பம் கென்யாவுக்கு வர வேண்டுமென அழைத்துவிட்டு ரிச்சர்ட் ர் அங்கிருந்து சென்றார்.

பல மாணவர்களுக்கு உதவியவர் காஷிநாத்

காஷிநாத் பல ஏழை மாணவர்களுக்கு உதவி செய்துள்ளார். மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து எப்போது பணம் வருகிறதோ அப்போது அதை திருப்பிக் கொடுப்பர்.

எனவே, காஷிநாத்திற்கும் அந்த மாணவர்களுக்கு ஒரு நல்ல உறவு உண்டாயிற்று. அதில் பலர் காஷிநாத்தை இப்போதும் வந்து சந்திக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை RAVIKANT GAVALI

"இந்த மாணவர்கள் அனைவரும் பல்வேறு இடத்தில் இருந்து வருகின்றனர். எனக்கு அவர்களின் துயரம் தெரியும் என்பதால் அவர்களுக்கு கடன் கொடுத்தேன். நாங்கள் அப்போது ஏழ்மையில் இருந்தோம். எனவே, பிற ஏழை மக்களுக்கு எங்களால் ஆன உதவியை செய்தோம்."

மேலும், "நமது கலாசாரம், விருந்தாளி என்பவர் கடவுளுக்கு சமம் என்கிறது. நான் அதை கடைபிடிக்கிறேன். ஒவ்வொரு மாணவர்களுக்கும் என்னால் முடிந்த உதவியை நான் செய்திருக்கிறேன். இந்த மாணவர்களால்தான் எங்களின் வாழ்க்கையும் உயர்ந்தது. நாங்கள் வீடு கட்டினோம். பின் உணவகம் ஒன்றை தொடங்கினோம். இது அனைத்தும் இந்த மாணவர்களுக்கு நாங்கள் உதவி செய்ததால்தான் எங்களுக்கு கிடைத்தது." என்று தெரிவித்து நெகிழ வைத்தார் காஷிநாத்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்