நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து கூறியதென்ன? - விரிவான தகவல்கள்

நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து கூறியதென்ன? படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: 'புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்'

அகரம் மூலமாக பல மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அரசுப் பள்ளிகளில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. அரசுப் பள்ளிகளில் சரியாகக் கட்டடம் இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல் பல தடைகளைத் தாண்டி படிக்கும் கிராமப்புற மாணவர்களின் பிரதிநிதியாக, அவர்களுடைய பெற்றோர்களின் பிரதிநிதியாகத்தான் தேசியக் கல்விக் கொள்கையை ஒரு பார்வையாளராகப் பார்த்துள்ளேன். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு இதுகுறித்த சரியான வெளிச்சம் போய்ச்சேரவில்லை. கல்விக் கொள்கை இந்தியா முழுக்க உள்ள 30 கோடி மாணவர்களின் கல்வியை நிர்ணயம் செய்யவுள்ளது. இதைப் பற்றி ஏன் யாருமே சரியாகப் பேசவில்லை? கோபமாக வருகிறது என்று நடிகர் சூர்யா பேசியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.

20 வருடங்களாக நான் நடித்துக்கொண்டிருப்பதால் நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன். எல்லோருடைய கோபம், அச்சம் என்னவென்றால் மீண்டும் மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம் சமமான, தரமான மாணவர்களுக்காகச் செய்யப்படவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டு. சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? அப்படி என்ன நேரமில்லை, உடனடியாக ஏன் செய்தாகவேண்டும்? ஏன் இங்குள்ள அத்தனை பேரும் இதுகுறித்துப் பேசவில்லை? இதற்காகக் குரல் கொடுத்த கல்வியாளர்களுக்குப் பெரிய மரியாதை. அந்தக் குரலை எழுப்பாமல் இருந்திருந்தால் கடைசித் தேதி ஜூன் 30-லிருந்து ஜூலை 30 ஆக மாறியிருக்காது. இதில் ஏன் மாணவர்களோ, ஆசிரியர்களோ, பெற்றோர்களோ கவனம் செலுத்தவில்லை என்பது கேள்வியாக உள்ளது. இதுதான் நம் வீட்டுக் குழந்தைகளின் கல்வியை மாற்றப்போகிறது.

கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு பரிந்துரையில், ஒரு ஆசிரியர் அல்லது 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று சொல்கிறார்கள். அந்த மாணவர்கள் எங்கே போவார்கள்? எங்கே குறை உள்ளதோ அதைச் சரி செய்யாமல் ஓர் ஆசிரியர் பள்ளிகளை மூடிவிட்டு ஒருங்கிணைந்த பள்ளிகளை ஆரம்பிக்கவுள்ளார்கள். கிராமங்களில் படிப்பவர்களின் ஆரம்பப் பள்ளி வாழ்க்கை இனி என்னவாகப் போகிறது? கிட்டத்தட்ட 1800 பள்ளிகளை மூடப்போகிறார்கள். 60 சதவிகித மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து வரக்கூடியவர்கள். எங்கள் வீட்டில் மூன்று மொழிப் பேசுபவர்கள் உள்ளார்கள். இருந்தாலும் என் மகனுக்கு, என் மகளுக்கு மூன்றாவது மொழியைச் சொல்லிக் கொடுப்பது சவாலாக உள்ளது. இதனால் முதல்தலைமுறை மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? மூன்றாவது மொழியைத் திணித்தால் அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள்? நீங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தால் இது திணிக்கப்படும்.

பள்ளித் தேர்வுகளில் மூன்றாவது, ஐந்தாவது, எட்டாம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகளை நடத்தவுள்ளார்கள். ஒரு தேர்வைச் சரியாகச் சந்திக்க முடியாமல் போனால் பள்ளியை விட்டே மாணவர்கள் சென்றுவிடுகிறார்கள். 11-ம் வகுப்புப் படிப்புக்கு முன்பு 40% மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகிவிடுகிறார்கள். வளர்ந்த நாடுகளில் எட்டாம் வகுப்பு வரை தேர்வு கிடையாது.

நாங்கள் 10 வருடங்களாக மாணவர்களைப் பார்த்து வருகிறோம். 10 வருடங்களாக 30% மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 30% +2 மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்? எல்லாத் தேர்வுகளையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வரும். அதை எழுதினால் தான் எந்த டிகிரியாக இருந்தாலும் போகமுடியும். நீட் தேர்வு சமூகத்தின் சமநிலையை மாற்றுகிறது. தேர்வுப் பயிற்சி மையங்களின் ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி. எட்டாவதிலிருந்து தேர்வுகளை எழுத பயிற்சி மையங்கள் தேவைப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படிப் படிப்பான்? இவ்வளவு நுழைத்தேர்வுகள் இருந்தால் எங்குச் சென்று படிப்பார்கள்?

படத்தின் காப்புரிமை Getty Images

ரூ. 30,000 சம்பாதிப்பவர்களே, ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் கொண்ட பள்ளியில் தங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் எனத் தவியாகத் தவிக்கிறார்கள். பயிற்சி மையங்கள் காளான்களாக முளைத்துள்ளன. நான்கில் ஒரு பங்குக் கல்லூரிகளைக் குறைக்கப் போகிறார்கள். 50,000 கல்லூரிகள் 12,000மாகக் குறைக்கப்படவுள்ளன. இதனால் ஊர்களில், கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மூடப்படும். கல்வி பயில மறுபடியும் அவர்களுக்குத் தடை ஏற்படும். நிறைய நுழைத் தேர்வுகள் நடக்கப்போகின்றன. ஆனால் படிப்பதற்குப் பள்ளிகள், கல்லூரிகள் இருக்கப்போவதில்லை. இதுபற்றிய பயமோ, விழிப்புணர்வோ ஏன் நம்மிடம் இல்லை. இதனால் எனக்குத் தூக்கமில்லை. தூக்கம் இல்லாமல் தான் நான் இவ்வளவு கோவப்பட்டுப் பேசுகிறேனா எனத் தெரியவில்லை. நம் சமுதாயத்தில் 80 லட்சம் ஆசிரியர்கள் உள்ளார்கள். ஆனால் ஒரே ஒரு ஆசிரியர் அமைப்பும் அதே மாதிரி ஒரு ஒரே மாணவர் அமைப்பும் அவர்களுக்குப் பிரதிநிதியாக இருந்துள்ளார்கள். அவர்களிடம் மட்டும் கேட்டுப் பண்ணதாகத் தெரிய வருகிறது. எல்லோரும் தயவு செய்து விழிப்புணர்வுடன் இருங்கள். கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்காகப் போராடும் சங்கங்கள் என அத்தனை பேரும் விழித்துக்கொள்ளவேண்டும். நாம் இங்கு ஏதோ பேசிக்கொண்டுள்ளோம். அங்கிருந்து பார்க்கும்போது நாம் சின்ன சின்ன ஆள்களாக இருப்போம். அனைவரும் ஜூலை 30-க்குள் அதற்கான இணையத்தளத்தில் உங்களுடைய கருத்துகளைத் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். இது நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கானது. நிச்சயமாக, அதில் நிறைய நல்ல விஷயங்களும் உண்டு. ஆனால், அச்சம் கொடுக்கக் கூடிய நிறைய விஷயங்களும் உள்ளன. அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுடைய ஆதரவுடன் என்ன மாற்றம் வேண்டுமோ அதை உடனடியாகச் செய்யவும் விழித்திருந்து செய்யவும் அகரம் மூலமாகச் சொல்லவேண்டும் என எண்ணினேன் என்று பேசியுள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு, தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. இதற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக, கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அமைச்சகம் வரவேற்றுள்ளது. வரும் 31-ஆம் தேதி வரை இந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

இந்து தமிழ்: 'சென்னை, நாகையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை'

இலங்கை குண்டுவெடிப்பு, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ் பின் வருமாறு விவரிக்கிறது:

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேசிய புலானாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பினர் தீவிர சோதனை நடத்தி, குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்கள் என சந்தேகப்படும் சிலரை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இதையடுத்து என்ஐஏ அதிகாரி கள் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் இயங்கும் 'வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்' என்ற அமைப்பு தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக அல் காய்தா அமைப்புக்கு ஆதரவாக இந்த அமைப்பு செயல்படுவதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இந்த அமைப்பு செயல்படும் இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

சென்னையில் சோதனை நடந்த அதே நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் டிஎஸ்பி சாகுல் ஹமீது தலைமையில் அங்கு உள்ள ஹசன் அலி (35) என்பவரது வீட்டில் நேற்று காலை 5.30 மணி முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து சுமார் 10 செல்போன்கள், ஒரு லேப்டாப், பென் டிரைவ், ஏராளமான சிடிக்கள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பத்திரிகை களில் பிரசுரமான செய்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி: 'சந்திரயான்-2 நாளை விண்ணில் பாய்கிறது'

படத்தின் காப்புரிமை Getty Images

நிலவில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்க்கிறார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

நிலவில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பியது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை அது உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக 'ஆர்பிட்டர்' என்ற சாதனம், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய 'லேண்டர்' என்ற சாதனம், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய 'ரோவர்' என்ற சாதனம் என மொத்தம் 3 சாதனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சந்திரயான்-2 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்தியாவின் கனமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் பாய்கிறது.

அதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுண் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.51 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

விண்ணில் ஏவிய 16 நிமிடங்களில் புவி சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்படும். பின்னர், நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு விண்கலம் மாறும். அந்த பாதையில் 45 நாட்கள் பயணித்து, செப்டம்பர் 6-ந் தேதி நிலவை சென்றடையும்.

நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்பட்டு சோதனையில் ஈடுபடும். விண்கலத்தை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுவதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிடுகிறார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஆந்திர கவர்னர் நரசிம்மன், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் நேரில் பார்வையிடுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பார்வையிடுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பறக்க வேண்டி, இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சந்திரயான்-2 விண்கலத்தின் மாதிரி தோற்றம், ஆவணங்கள் ஆகியவற்றை மூலவர் பாதத்தில் வைத்து வழிபட்டார். அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் ஆகியவற்றை அதிகாரிகள் வழங்கினர்.

முன்னதாக, இஸ்ரோ தலைவர் சிவன், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் அதிகாரிகள் சிறப்புத் தரிசன ஏற்பாடுகளை செய்தனர். அப்போது அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை அதிகாரிகள் வழங்கினர். அவரை, தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் அமர வைத்து, வேதபண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினார்கள்.

பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன், கோவிலில் இருந்து வெளியே வந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது, "சந்திரயான்-2 விண்கலம் திங்கட்கிழமை (அதாவது நாளை) விண்ணில் ஏவப்பட உள்ளது. 2 மாதங்களுக்குப் பிறகு நிலவில் தென்திசையில் லேண்டர் மூலமாக, விண்கலத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில், நிலவில் மெதுவாக இறக்கும் விதமாக, தொழில்நுட்பரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட நேரத்தில் சரியான திசையில் லேண்டர் நிலவில் இறங்கும் என நம்பிக்கை உள்ளது. அதற்கானப் பணிகள் அனைத்தும் நல்ல முறையில் நடந்து வருகின்றன.

மழை பெய்தாலும் சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதில், எந்தப் பாதிப்பும் இருக்காது. முற்றிலும் ரெயின் ப்ரூப் (மழையால் பாதிக்காத வகையில்) வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலம் ரூ.1000 கோடியில் தயார் செய்யப்பட்டுள்ளது." என்கிறது.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கர்நாடகத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும்…?'

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்எல்ஏக்கள், விரைவில் பாஜகவில் இணைவார்கள் என அக்கட்சியின் மூத்த தலைவரான முகுல் ராய் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு காலத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு நெருக்கமாக பணியாற்றி முகுல் ராய், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாஜகவின் மாநில தலைமையோடு எம்எல்ஏக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

ஆனால், எப்போது, எந்த எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவார்கள் என்று அவர் குறிப்பிடவில்லை.

294 உறுப்பினர்கள் கொண்ட மேற்கு வங்க சட்டசபையில், திரிணாமுல் காங்கிரசுக்கு 207 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். பாஜகவிற்கு வெறும் ஆறு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்