தபால் துறை பணி: தேர்வு நடத்துங்கள்; முடிவுகளை வெளியிடாதீர்கள் - சென்னை உயர்நீதிமன்றம்

தபால்துறை வேலை படத்தின் காப்புரிமை Frank Bienewald

தபால்துறை வேலைகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தாமல், இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுதமுடியும் என மத்திய அரசு கொண்டுவந்த விதிமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தபால் துறையில் அஞ்சலர் உள்பட நான்கு வகையான பணியிடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெறுகிறது.

மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூலை 11ஆம் தேதி தபால் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை தமிழ் உள்ளிட்ட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுதமுடியும் என்ற விதிமுறைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வழக்கு

மதுரையில் இயங்கும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர், தபால்துறை தேர்வில் கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு மற்றும் மகாதேவன் ஆகியோர் சனிக்கிழமை இரவு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்தனர்.

தேர்வை நடத்த தடையில்லை என்று கூறிய உயர்நீதிமன்றம், மாநில மொழி அல்லாமல் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதவேண்டும் என்ற புதிய விதிமுறைக்கான காரணம் என்ன என்று மத்திய அரசு விளக்கம் கொடுக்கவேண்டும் எனக் கூறி ஜூலை 19ம்தேதிக்கு வழக்கை தள்ளிவைத்துள்ளது.

வழக்கில் ஆஜரான சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தேர்வை உடனடியாக நிறுத்த முடியாததால், தேர்வு முடிவுகள் வெளியாவதை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது என்பது மகிழ்ச்சி என்றார். ''தமிழகத்தில், தாய்மொழியில் தேர்வு எழுத முடியாதது என்பது அநீதி. உயர்நீதிமன்றம் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது எனக் கூறியுள்ளது. இந்தத் தேர்வில், மாநில மொழியை விட ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி ஏன் அவசியம் என மத்திய அரசு விளக்கவேண்டும்,'' என்றார்.

கண்டனம்

தபால் துறை போட்டித் தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்படாது என்று அறிவித்து, இந்தி பேசாதவர்கள் மத்திய அரசு பணியில் சேர்வதைத் தடுக்கும் பா.ஜ.க அரசைக் கடுமையாக எதிர்த்து திமுக சட்ட நடவடிக்கையையும் எடுக்கும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அஞ்சல்துணு தேர்வுகளை தமிழில் எழுதிட வழிவகை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக நிறுவனர் வைகோ உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்