சந்திரயான்-2: தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

சந்திரயான்-2

சந்திரயான்-1 விண்கலன் அனுப்பியதை தொடர்ந்து, சந்திரயான்-2 விண்கலனை இந்தியா விண்ணில் செலுத்தவுள்ளது.

இது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்களை தொகுத்து வழங்குகிறோம்.

10 முக்கிய அம்சங்கள்

01. இந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2 விண்கலனை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2019ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு விண்ணில் ஏவுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று, ஜூலை 22-ம் தேதி மீண்டும் ஏவுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்படும் சந்திரயான்-2, செப்டம்பர் 6 அல்லது 7ம் தேதி நிலவை சென்றடையும். உலகிலுள்ள விஞ்ஞானிகள் இதனை மிகவும் உற்று கவனிப்பது ஏன்?

படத்தின் காப்புரிமை ANI

02. சந்திரயான்-2 விண்கலன் நிலவிற்கு சென்று அதன் மேற்பரப்பில் தரையிறங்கும். விண்கலம் சுமூகமாக, மெதுவாக ஒரு கிரகத்தில் தரையிறங்குவது என்பது அனுப்பப்படும் கலன் சேதமடையாமல் இருப்பதை குறிக்கிறது. இதன் மூலம் நிலவில் விண்கலனை சுமூகமாக தரையிறக்குகின்ற தொழில்நுட்பத்தை கொண்டுள்ள நான்காவது நாடாக இந்தியா மாறும். நிலவில் இருந்து பல தகவல்களை சந்திரயான்-2 அனுப்பும். எப்படி?

03. சந்திரயான்-2இல் மூன்று முக்கிய கலன்கள் உள்ளன. முதலாவதாக, சுற்றுவட்டக்கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும். இரண்டாவதாக, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் கலன். மூன்றாவதாக, இந்த தரையிறங்கிய கலனில் இருந்து ரோவர் ஊர்தி வெளியேறும். இந்த ரோபோ ஊர்தி நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று தகவல்களை தரையிறங்கிய கலனுக்கு அனுப்பும். இந்த தரையிறங்கிய கலன் இந்த தகவல்களை நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்துகொண்டிருக்கும் கலனுக்கு அனுப்பும். இந்த சுற்றுவட்ட கலன் பூமிக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.

படத்தின் காப்புரிமை PIB

04. இந்த விண்கலத்தில் 13 கருவிகளை இந்தியா பொருத்தியுள்ளது. இவற்றை தவிர நாசாவின் இன்னொரு கருவியை இந்தியா கட்டணம் எதுவும் பெறாமல் அனுப்பி வைக்க உள்ளது. இவை அனைத்தும் நிலவின் தென்துருவத்திலுள்ள இடத்தை மிகவும் நெருங்கி செல்கின்றன. இதற்கு முன்னர் நடைபெற்ற நிலவுப் பயணத் திட்டங்கள் அனைத்தும் நிலவின் மத்தியரேகை பிரதேசத்தையே அடைந்துள்ளன. தென் துருவத்திற்கு அருகில் எந்தவொரு விண்கலனும் தரையிறக்கப்படவில்லை. எனவே, தென்துருவத்தில் தரையிறங்கும் சந்திரயான்-2 புதிய தகவல்களை அனுப்பும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

05. முன்னதாக, சந்திரயான்-1 விண்கலனை அனுப்பி இந்தியா பெருமைபெற்றது. இந்தியா நிலவுக்கு அனுப்பிய முதல் விண்கலன் இதுவாகும். செலவு குறைந்த, பெரும் திருப்புமுனை ஏற்படுத்திய இந்த நிலவுப் பயணத் திட்டத்தால் இந்தியா புகழ்பெற்றது. இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிலவுப் பயணத் திட்டத்தில் நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், பிரிட்டன் ஆகியவை பங்காற்றியிருந்தன. இரண்டு ஆண்டுகள் சந்திரயான்-1 செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 10 மாதங்களில் இந்த விண்கலனில் ஒரு பாகம் செயலிழந்து விட்டது. இந்த காலத்திற்குள் நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்து சந்திரயான்-1 வரலாறு படைத்தது.

படத்தின் காப்புரிமை PIB

06. சந்திரயான்-1 விண்கலன் நிலவுக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து சந்திரயான்-2 இப்போது அனுப்பப்படுகிறது. இந்தியாவின் கொடியை இது கொண்டு சென்று நிலவில் இறங்குவதால் சிறப்பு பெறுகிறது. இந்தியாவின் பெருமையாகவும் இது கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம், சிறு கிரகங்களில் விண்கலனை தரையிறங்க செய்கின்ற மற்றும் நிலவுக்கு மனிதனை அனுப்புகிற வாய்ப்புகளையும் இது வழங்கும். இந்தியா நிபுணத்துவம் பெற விரும்புகிற முக்கிய தொழில்நுட்பம் இதுவாகும்.

07. ஆனால், இது எளிதல்ல. இது ராக்கெட் அறிவியல். நிலவு பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு ஈர்ப்பு விசை மிகக் குறைவு. காற்று மண்டலம் கிடையாது. நிலவில் தரையிறங்கும் முதல் முயற்சி இந்தியாவால் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தரையிறங்குவதற்கு பாராசூட்டுகளை பயன்படுத்தமுடியாது. எனவே, நிலவில் தரையிறங்குவது, ஆய்வு ஊர்தி கொண்டு ஆய்வு மேற்கோள்வது மிகவும் கடினமானவை. இதற்கு முன்னர் முயற்சித்த பாதி திட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. அனைத்து பணிகளும் கணினியால் கட்டுப்படுத்தப்படும். நிலவில் தரையிறங்கும் கலனும், ரோவர் ஊர்தியும், சுற்றுவட்ட கலனில் இருந்து பிரிகிற 15 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை.

படத்தின் காப்புரிமை Getty Images

08. இந்த பணித்திட்டம் மிகவும் தாமதமாக நிறைவேற்றப்படுகிறது. சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்டபோது, சந்திரயான்-2 விண்கலன் 2014ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், ரஷ்யா இதில் ஒத்துழைத்து நிலவில் இறங்கும் கலனை வழங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷ்ய விண்வெளி நிறுவனத்தோடு ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக இது நடைபெறவில்லை. எனவே, நிலவில் தரையிறங்கும் கலனை இந்தியாவே உருவாக்க முடிவு செய்ததால் இந்த தாமதம் ஏற்பட்டது.

09. "பேலோடு" என்ற சொல்லை நீங்கள் கேட்டிருக்கலாம். ராக்கெட் சுமந்து செல்லுகிற, சுற்றுவட்ட கலன், தரையிறங்கும் கலன், ரோவர் ஊர்தி மற்றும் கொண்டு செல்கின்ற அறிவியல் கருவிகளை இது குறிக்கிறது. சுற்றுவட்ட கலனில் மிகவும் உயர் ரக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நிலவிலுள்ள மெல்லிய காற்று மண்டலத்தை ஆய்வு செய்கின்ற கருவி ஒன்றும் உள்ளது. பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதுபோல நிலவில் நிலவு நடுக்கம் நிகழ்வது ஆய்வு செய்யப்படும். நிலவின் மேற்பரப்பில் நுழைத்து (சொருகி) வைக்கப்படும் கருவி நிலவிலுள்ள தட்பவெப்பம் பற்றி தகவல் அளிக்கும். நிலவிலுள்ள மண்ணை ஆராய்வதற்கு ரோவர் ஊர்தியில் கருவியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

10. சந்திரயான்-2 நிலவுப் பயணத் திட்டம் இரண்டு பெண்களின் தலைமையில் நடைபெற்றிருப்பதாலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலவு பயணத்திட்டத்தின் இயக்குநராக ரித்து காரிதாலும், பணித்திட்டத்தின் இயக்குநராக முத்தேயாவும் பணியாற்றியுள்ளனர்.

இந்தியாவை ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்லது தேசிய ஜனநாயக கூட்டணி என எந்த அரசாக இருந்தாலும், விண்வெளி திட்டங்களுக்கு சிறந்த ஆதரவு அளிக்கின்றன. அதனால்தான் இந்தியா பல ராக்கெட்டுகளையும், செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தியுள்ளது என்று பிரபல அறிவியல் பத்திரிகையாளர் பல்லாவ் பேக்லா கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :