குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

குல்பூஷன் ஜாதவ் படத்தின் காப்புரிமை Hindustan Times/Getty Images

இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தானில் வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பாக இறுதி தீர்ப்பை இன்று புதன்கிழமை சர்வதேச நீதிமன்றம் வழங்கவுள்ளது.

குல்பூஷன் ஜாதவ் விவகாரம் இந்திய-பாகிஸ்தான் இடையில் ராஜீய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

யார் இந்த குல்பூஷன் ஜாதவ்?

46 வயதான குல்பூஷன் ஜாதவ் மும்பையை சேர்ந்தவர். பத்தாண்டுகளுக்கு மேல் இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர். திருமணமாகி அவருக்கு குழந்தைகளும் உள்ளன.

சொந்தமாக தொழில் தொடங்க, கடற்படையில் இருந்து ஜாதவ் விலகியதாகவும், இரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தில் பணியாற்றி வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2016ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். 2016-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது,

பாகிஸ்தானின் பதற்றமான பகுதியான பலூசிஸ்தானில், உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் பலூசிஸ்தானில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பலூசிஸ்தானில் தனிநாடு கோரி பிரிவினைவாதக் கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் பின்னணியில் இருப்பது இந்தியா என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் சர்ச்சை

இந்நிலையில், "பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்ட உளவாளிக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது", என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ செய்தித் தொடர்பாளர் 2017ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியிட்ட ஓர் அறி்க்கையில் தெரிவித்தார்.

ஜாதவ் எப்போது தூக்கிலிடப்படுவார் என்பது அறிவிக்கப்படவில்லை.

கைது செய்யப்பட்டவுடன், பாகிஸ்தான் வெளியிட்ட காணொளியில், குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததை அவர் ஒப்புக்கொண்டதாகத் கூறுவதைப் போல் இருந்தது.

படத்தின் காப்புரிமை RSTV
Image caption சுஸ்மா சுவராஜ்

குல்பூஷன் ஜாதவ் இந்திய குடிமகன் என்று கூறிய இந்திய அரசு, அவர் உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

அவர் பலூசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை என்றும், இரானில் இருந்து கடத்தப்பட்டார் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, கேலிக்கூத்தானது என்று இந்தியா கண்டனம் தெரிவித்த்து.

"ஜாதவ், 2016ம் ஆண்டு இரானிலிருந்து கடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தானில் இருப்பது தொடர்பாக எந்த நேரத்திலும் வெளிப்படையாக விளக்கமளிக்கப்படவில்லை", என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ஜாதவுடன் ராஜாங்க ரீதியான தொடர்புகள் மேற்கொள்ள, 13 முறை கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும் பாகிஸ்தான் அதற்கு அனுமதியளிக்கவில்லை என்றும், அவர் மீது விசாரணை நடத்தப்படும் தகவலும் எந்த நேரத்திலும் வெளியிடப்படவில்லை என்றும் இந்தியா தெரிவித்தது.

எனவே, தற்போது விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றினால் அதை திட்டமிடப்பட்ட படுகொலையாகவே இந்தியா கருதும் என்றும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

சர்வதேச நீதிமன்றம் தடை

குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணையில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை என்று இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.

இந்த நீதிமன்றத்தில் மேலும் வலிமையான வாதங்களை வைத்து குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வோம் என அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை PAKISTAN FOREIGN MINISTRY
Image caption ஜாதவ் - குடும்பத்தினர் சந்திப்பு

பாகிஸ்தான் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினர் அவரை சந்திப்பதற்கு இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால், இத்தகைய சந்திப்பை, பாகிஸ்தான் பரப்புரை கருவியாக பயன்படுத்திக்கொண்டது என்று சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சர்வதேச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த இந்த வழக்கின் இநுதி தீர்ப்பு இன்று புதன்கிழமை வழங்கப்படுகிறது.

இந்த தீர்ப்பால் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலைகள் உள்ளன.

சர்வதேச நீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்பை ஏற்றுகொள்ள வேண்டும் என்பது கடமை. ஆனால், இது வழங்கும் தீர்ப்புகள் உறுப்பு நாடுகளால் எல்லா நேரங்களிலும் ஏற்றுகொள்ளப்படவில்லை.

தீர்ப்புக்கு அப்பாற்பட்டு, இந்திய பாகிஸ்தான் உறவு எப்படியுள்ளதோ அதை பொறுத்தே குல்பூஷன் ஜாதவ் விவகாரம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :