நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டது எப்போது? - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை

NEET படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டது எப்போது?'

'நீட்' மசோதாக்கள் 2017-ம் ஆண்டே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டன என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

'நீட்' தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டசபையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட மசோதா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்ட மசோதா என 2 மசோதாக்களை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த 6-ந் தேதி நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை சார்பு செயலாளர் கூறியதாக மத்திய அரசு வக்கீல்கள் கூறினர்.

அதைத் தொடர்ந்து, "தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் எப்போது பெறப்பட்டன?, அந்த மசோதாக்கள் எப்போது நிராகரிக்கப்பட்டன? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்" என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிலையில், மத்திய அரசு உள்துறை அமைச்சக துணைச்செயலாளர் ராஜிஸ் எஸ்.வைத்யா, சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "'நீட்' தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்களும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி கிடைத்தன. அன்றைய தினமே இந்த மசோதாக்கள் உரிய நடவடிக்கைக்காக மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்த அமைச்சகங்களில் இருந்து உரிய கருத்துருக்கள் பெற்று கடந்த 2017-ம் செப்டம்பர் 11-ந்தேதி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் ஜனாதிபதி 2017 செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவிட்டார்.

அதன்பிறகு அந்த 2 சட்ட மசோதாக்களும் 2017 செப்டம்பர் 22-ந் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. அதற்கான ஆவணங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'நீட்' தேர்வு தொடர்பான வழக்கு, இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

- இவ்வாறாக விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ்.

தினமணி: 'சரவண பவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை'

படத்தின் காப்புரிமை Getty Images

சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பின் வருமாறு அந்நாளிதழ் விவரிக்கிறது:

சென்னை உயர்நீதிமன்றத்தில், ராஜகோபாலின் மகன் சரவணன் தாக்கல் செய்த மனுவில், பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள எனது தந்தை ராஜகோபாலுக்கு சிறுநீரகத் தொற்று நோய் பாதிப்பு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே படுத்தப் படுக்கையாகவே இருந்து வரும் அவரது வலது கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வரும் ஸ்டான்லி மருத்துவமனையில் போதுமான வசதிகள் எதுவும் இல்லை.

எனவே அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ராஜகோபாலின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வழக்கு ,நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபாலின் உடல்நிலை குறித்து ஸ்டான்லி மருத்துவமனை தலைவர் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் ராஜகோபாலின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் அவரை ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றம் செய்வதை ஆபத்தானது. எனவே அவரை இடமாற்றம் செய்யும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு அரசு மருத்துவர்கள் பொறுப்பு கிடையாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யும்போது நிகழும் அசம்பாவிதங்களுக்கு மனுதாரர் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்வார். மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் தனியார் மருத்துவமனை செலவு முழுவதையும் மனுதாரரே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள ராஜகோபாலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மனுதாரரின் சொந்த செலவில் மாற்ற வேண்டும்.

சிறை விதிகளைப் பின்பற்றி இந்த இடமாற்றத்தை செய்ய வேண்டும். அதே போன்று இடமாற்றம், சிகிச்சை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மனுதாரர் மேற்கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்காது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஏர் இந்தியா - மொத்த பங்குகளும் விற்பனை'

படத்தின் காப்புரிமை Getty Images

சர்வதேச ஏலத்தின் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

கடந்தாண்டு 74 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு ஏலத்தை அறிவித்தது. ஆனால், யாரும் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. சில விதிகளால் தான் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. அந்த உட்பரிவுகளில் மாற்றம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்து தமிழ் : 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசின் அனுமதியின்றி செயல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை'

படத்தின் காப்புரிமை Getty Images

மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "மக்களவையில் நேற்று (ஜூலை 15) ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக் குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழகத்தில் மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் 7 ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒதுக்கப்பட்டு அதில் 2 திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்துக்கு மேலும் 23 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான உரிமம் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியிருக்கிறார். எனவே, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்." என்றார்.

"மக்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். 'ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமம் கொள்கை' படி (Hydrocarbon Exploration and Licensing Policy HELP) ஒற்றை உரிமம் மூலம் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஏலம் விடுகிறது. கனிம வளங்களை கண்டறிந்து இணையதளத்தில் வெளியிட்டு பொதுஏலம் மூலம் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்கிறது. ஆனால், சட்டப்படி மாநில அரசின் அனுமதி இல்லா மல் அந்த மாநிலத்தின் நிலப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது. எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அரசு அறிவித்து விட்டது.மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த சட்டத்தில் இடமில்லை. எனவே, தமிழக அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கும் சட்டத்தில் இடம் உள்ளது." என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்