மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது

மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம் படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது'

மருத்துவ படிப்புக்கு அரசு ஒதுக்கீடு செய்த இடங்களில், அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இதுவரை இடம் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் கடந்த ஆண்டை விட மிக மோசமான நிலை ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 8-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து கலந்தாய்வு நடந்து வருகிறது. அரசு கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அதேபோல், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் நிரப்பப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புப் படம்

இந்த ஆண்டு பிளஸ்-2 படிப்பை முடித்து 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த திருச்சியை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவிக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அதுவும் சுயநிதி கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளில் 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் (453) எடுத்தவர்.

ஆனால் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், இதுவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் எத்தனை பேருக்கு இடம் கிடைத்து இருக்கின்றன என்ற பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட அரசு தயங்குவது ஏன்? என்று கல்வியாளர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 8 பேருக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைத்தன. அதோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலைக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

அரசு சார்பில் 'நீட்' தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்மூலம் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த மாணவ-மாணவிகளில் எத்தனை பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து இருக்கின்றன? என்பதும் ரகசியமாகவே இருக்கிறது.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினமணி: 'ஆர்பிஐ உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்கலாம்'

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) உபரி நிதியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று ஆர்பிஐ முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ்.

ரிசர்வ் வங்கியிடம் ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் ரிசர்வ் வங்கிகளிடம் இருக்கும் உபரி நிதி, அரசிடம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள ரிசர்வ் வங்கிகள் அதிகபட்சமாக 14 சதவீத உபரி நிதியை தங்கள் வசம் வைத்துள்ளன. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி 28 சதவீத உபரி நிதியை வைத்துள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி, உபரி நிதியை வழங்குமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய நிதியமைச்சகம் கோரியது. ஆனால், அந்த நிதியைத் தர ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.

இதனால், ரிசர்வ் வங்கியின் அப்போதைய ஆளுநரான உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைப்பதற்கு கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் வாரியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின், முதல் கூட்டம் நடைபெறும் நாளில் இருந்து 90 நாள்களில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், குறித்த காலத்துக்குள் அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யாததால் 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்தக் குழு தனது

இறுதி அறிக்கையை தயாரித்துள்ளது.

அதில், 3 முதல் 5 ஆண்டு இடைவெளியில் ஆர்பிஐ தனது உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்கலாம். இதன் மூலம் அரசு தனது நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்பிஐ-யிடம் இருந்து உபரித் தொகையை மட்டும் கோராமல், ஈவுத் தொகையாக ரூ.90,000 கோடி வரை நடப்பு நிதியாண்டில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. கடந்த நிதியாண்டில் ரூ.68,000 கோடியை ஆர்பிஐ-யிடம் இருந்து ஈவுத் தொகையாக மத்திய அரசு பெற்றது.

இந்து தமிழ்: 'காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீர்திறப்பு'

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
Image caption கோப்புப் படம்

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 855 கனஅடி நீரினை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், 'உச்ச நீதிமன்ற இறுதி உத்தரவின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்து வழங்க வேண்டிய 40.43 டிஎம்சி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும். கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை பொழிவின் அளவை பொறுத்து தமிழகத்துக்கு நீரை திறந்து விடலாம் என உத்தரவிடப்பட்டது.

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
Image caption ஒகேனக்கல்

இதையடுத்து, கர்நாடக அரசு கடந்த இரு வாரங்களாக காவிரியில் விநாடிக்கு சுமார் 300 கனஅடி முதல் 500 கனஅடி வரை தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டது. கடந்த 5 நாட்களாக குடகில் உள்ள தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத் துக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியை தாண்டியது.

எனவே, முதல்வர் குமாரசாமி மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கும் தமிழகத்துக்கும் காவிரி நீரை திறந்துவிடுமாறு நீர்ப் பாசனத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இதன்பேரில், நேற்று முன்தினம் இரவு, தமிழகத்துக்கு கபினி அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீரும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 350 கனஅடி நீரும் திறக்கப்பட்டது. இந்த நீர், இரு மாநில எல்லையான பிலிகுண்டுலுவை நேற்று பிற்பகலில் வந்தடைந்தது. இன்னும் இரு தினங்களில் இது மேட்டூர் அணையை வ‌ந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'அதிகரிக்கும் இரு சக்கர வாகனங்கள்'

இருசக்கரங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 64 லட்சம் இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018- 2019 ஆகிய காலக்கட்டங்களில் 17.5 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்துள்ளது என்கிறது ஒரு தரவு. 2015ம் ஆண்டு 22,474 என்ற எண்ணிக்கையில் இருந்த அரசு பேருந்து, 2019ம் ஆண்டு 19,489 ஆக குறைந்துவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்