இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் 1994ஆம் ஆண்டிலிருந்து அக்கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்த எஸ்.சுதாகர் தனது பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளியன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ராஜாவின் பெயர் ஒருமனதாக முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது.

யார் இந்த டி.ராஜா?

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் சித்தாதூரில் பிறந்த இவருக்கு தற்போது 70 வயதாகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலித் பொதுச் செயலாளர் என்ற பெயரையும் பெற்றுள்ளார் டி.ராஜா மாணவர் தலைவராக தனது பயணத்தை தொடங்கியவர்.

2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதியிலிருந்து தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார் டி.ராஜா.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் சமயத்தில் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பேசினார். மேலும் அதே போராட்டத்தில் பங்கேற்ற தனது மகளுக்கு ஆதரவாகவும் பேசினார் டி.ராஜா.

ஆனால், இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுத்த ராஜாவின் மகளை கம்யூனிஸ்டுகள் சுட வேண்டும் என தமிழகத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பலத்த அடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அந்தக் கட்சியால் இரண்டே இடங்களில் மட்டும்தான் வெறி பெற முடிந்தது. தமிழகத்தின் நாகப்பட்டினம் தொகுதியில் எம்.செல்வராசு மற்றும் திருப்பூர் தொகுதியில் கே. சுப்பராயன் ஆகியோர் வெற்றிப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :