சாத்வி பிரக்யா: 'கழிவறையை சுத்தம் செய்வது என் வேலையல்ல' - நாடாளுமன்ற உறுப்பினரின் பணி என்ன?

சாத்வி பிரக்யா படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சாத்வி பிரக்யா

"எனது இருப்பின் ஒரே நோக்கம் வடிகால்களை சுத்தம் செய்வது அல்ல. குறிப்பாக உங்களது கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக நான் பிறக்கவில்லை. எனக்காக ஒதுக்கப்பட்ட வேலையை நான் நேர்மையுடன் செய்வேன்.

நான் இதை இதற்கு முன்னரே தெரிவித்துள்ளேன்; இன்று மீண்டும் கூறுகிறேன்; எதிர்காலத்திலும் தொடருவேன்" என்ற பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வி பிரக்யாவின் கருத்து மிகப் பெரிய விவாதமாக உருவெடுத்துள்ளது.

மேற்கண்ட கருத்தை பிரக்யா கூறுவதை போன்ற 24 நொடிகள் ஓடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

சாத்வி பிரக்யாவின் கருத்துக்கு எதிர்கருத்துகள் ஒருபுறம் குவிந்துக் கொண்டிருக்க, அவரை ஆதரித்தும் கருத்துகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, வடிகால்கள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்வது உள்ளாட்சி அமைப்புகளின் வாய்ப்பு என்று ஒரு தரப்பினரும், பிரக்யாவின் இந்த கருத்தை பிரதமர் நரேந்திர மோதி ஒருபோதும் மன்னிக்கமாட்டார் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, உண்மையிலேயே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணி என்ன? என்ற கேள்வி பலரது மனதிலும் எழுகிறது. அதற்கான பதிலை அறிந்து கொள்வதாக சட்ட வல்லுநர் சுபாஷ் காஷ்யப்பிடம் பேசினோம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணிகள் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று கூறும் சுபாஷ், மக்களவையின் விதியில் இதுகுறித்த குறிப்பு உள்ளது என்கிறார்.

மக்களவை விதியின்படி, சட்டமியற்றுவதே உறுப்பினர்களின் தலையாய பணி. அடுத்ததாக, நாடாளுமன்றத்தில் புதிதாக இயற்றப்படும் சட்டங்கள் தொடர்பான விவாதத்திலும், கேள்வி நேரத்திலும் உறுப்பினர்கள் பங்கெடுக்க வேண்டும்.

நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்களில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் பல்வேறுபட்ட குழுக்களின் உறுப்பினர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுகிறார்கள்.

அதே போன்று, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியின் வளர்ச்சி மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஐந்து கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. ஆனால், இந்த நிதி தக்க மாவட்ட குழுவின் ஆலோசனை, ஒப்புதல் மற்றும் கண்காணிப்பின் கீழ் செலவிடப்பட வேண்டும்.

ஒரு மக்களவை உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதியை, அவர் தான்தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்காக மட்டும்தான் பயன்படுத்த முடியும்.

அதே வேளையில், மாநிலங்களவை உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதியை அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்திலுள்ள எந்த பகுதியிலும் பயன்படுத்த விதிகள் அனுமதிக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதிக்காக அதிகாரப்பூர்வ இணையதளத்திலுள்ள கருத்துப்படி, உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும், கல்வி, மின்சாரம், உடல்நலம் மற்றும் துப்புரவு, நீர்ப்பாசனம், ரயில்வே, சாலை, மேம்பாலம், விளையாட்டு, விவசாயம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்டவற்றிற்காக பயன்படுத்த முடியும்.

நரேந்திர மோதி தலைமையிலான அரசு முக்கியத்துவம் கொடுத்து வரும் விடயத்துக்கு நேர்எதிர்மறையாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வி பிரக்யாவின் கருத்து அமைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :