திருநெல்வேலியின் முன்னாள் மேயர் உள்பட மூவர் வெட்டிக் கொலை

உமா மகேஸ்வரி படத்தின் காப்புரிமை Twitter

திருநெல்வேலியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு பணிப்பெண் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் முருக சங்கரன். இவர் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்.

இவர்களது வீடு நெல்லை ரெட்டியார் பாளையத்தில் அரசு பொறியியல் கல்லூரிக்கு எதிரில் உள்ளது. இந்த நிலையில், இன்று பிற்பகலில் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், வீட்டின் பணிப்பெண் மாரி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றனர். உமா மகேஸ்வரியின் மகள் வீடு திரும்பியபோது இந்த விஷயம் தெரியவந்தது.

உமா மகேஸ்வரி தற்போது தி.மு.கவின் மத்திய மாவட்ட மகளிர் அணியின் துணை அமைப்பாளராக இருந்தார். 2011ல் திருநெல்வேலியில் சங்கரன் கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்தக் கொலை எதற்காக நடந்தது என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. காவல்துறை தற்போது விசாரணையைத் துவங்கியுள்ளது.

மு.க. ஸ்டாலின் இரங்கல்

இதனிடையே திமுக தலைவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்லை மாநகர முதல் பெண் மேயர் என்ற பெயரையும் பெற்ற உமா மகேஸ்வரி எளிமைக்கு இலக்கணமானவர். மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துக் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடத்தியவர்.

2011-ல் நடைபெற்ற கழக கழக முப்பெரும் விழாவில் தலைவர் கலைஞர் அவர்களால் "பாவேந்தர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டவர். கழக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மாவட்ட மகளிர் அணித் தலைவர், மற்றும் மாவட்ட துணை செயலாளராக இருந்த அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கை கட்டிக் காப்பாற்ற முடியாத அதிமுக ஆட்சியில் தி.மு.க. நிர்வாகிகள் சமீப காலமாக படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. முன்னாள் மேயர் நெல்லை உமா மகேஸ்வரி கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்