ஆந்திராவில் உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு - நடைமுறையில் சாத்தியமா?

ஆந்திராவில் உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு - நடைமுறையில் சாத்தியமா? படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் தொழிற்சாலை/ நிறுவனங்கள் உள்பட அனைத்து வகை தொழிற்துறை வேலைவாய்ப்பிலும் 75% சதவீதம் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் மசோதா ஆந்திர பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர அரசின் இந்த முடிவு நடைமுறையில் சாத்தியப்படுமா என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பி வருகின்றனர்.

மசோதாவின் முக்கிய கூறு என்ன?

நடைபெற்று வரும் ஆந்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அம்மாநில அரசு ஆறு மசோதாக்களை அறிமுகம் செய்தது. அதில் முக்கியமாக, மாநிலம் முழுவதுமுள்ள தனியார் தொழிற்சாலை/ நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75% சதவீதம் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் மசோதாவை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் கும்மானுர் ஜெயராம் தாக்கல் செய்தார்.

அதன்படி, உள்ளூர் மக்களுக்கு அப்பகுதியிலுள்ள அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு-தனியார் பங்களிப்பில் செயல்படும் நிறுவனங்களிலுள்ள வேலைவாய்ப்பில் 75 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்படும்.

அதாவது, இந்த சட்டம் அமலான நாளிலிருந்து மூன்றாண்டுகளுக்குள் இந்த இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை தங்களுக்கு ஏற்ற திறன்வாய்ந்த பணியாட்களை உள்ளூரில் அடையாளம் காண முடியவில்லை என்றால், தொழில்துறையினர் அரசோடு இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சட்டம் மேலும் எடுத்துரைக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், மாநில, மாவட்ட மற்றும் வட்ட அளவில் உள்ளூர் மக்களின் தற்போதைய வேலைவாய்ப்பு நிலவரம் வகைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திலிருந்து விலக்கு பெற விரும்பும் துறைகள் அதுதொடர்பாக மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த சட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து கண்காணிப்பதற்காகவும், முறைப்படுத்தவும் தனியே அமைப்பொன்று ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்தை உறுதிசெய்தல்

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் கும்மானுர் ஜெயராம், "தொழில்துறைகளில் வளர்ச்சிக்காக தங்களது நிலங்களை கொடுத்துதவிய மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் இந்த சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், தங்களுக்கு சொந்தமான நிலத்தில் உருவெடுத்துள்ள தொழிற்சாலைகளில் மிகவும் ஊதியம் குறைந்த அடிப்படை வேலைகள் வழங்கப்படுவது தொடர்பாக மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

இதன் காரணமாக, திறன்வாய்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை தேடி, வாழ்வாதாரத்துக்காக இடம்பெயரும் சூழல் நிலவுகிறது. அதெல்லாம் மாற்றும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

'வேலையில்லா இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்': ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் வேலைவாய்ப்புகளைத் தேடி இடம்பெயரும் சூழ்நிலையில் இந்நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கும் இந்த சட்டம் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையுமென்று அவர் மேலும் கூறினார்.

'கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்'

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கும் மாநில அரசின் இந்நடவடிக்கையை வரவேற்பதாக சிஐடியூ தொழிலாளர் அமைப்பின் ஆந்திரப்பிரதேச தலைவர் நரசிங்க ராவ் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், "தற்போதைய தொழிலாளர் சட்டத்தில் தெளிவில்லாத காரணத்தினால், தொழிற்துறையினர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களையே அதிகளவில் பணியமர்த்தி வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, மாநிலத்தின் தலைநகரை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் 90 சதவீதத்தினர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். எனவே, இச்சட்டமானது கடுமையான விதிமுறைகள் மற்றும் கண்காணிப்புடன் அமல்படுத்தப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதே சட்டம் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டால்…?

படத்தின் காப்புரிமை Getty Images

உள்ளூர் மக்களுக்கு தொழிற்துறையில் போதிய வாய்ப்பளிக்க தயங்கும் நிறுவனங்களின் செயல்பாட்டினாலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக பிபிசியிடம் பேசிய மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி இ.ஏ.எஸ். சர்மா தெரிவித்தார்.

ஆந்திர அரசின் இந்நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவிக்கும் அவர், இதுபோன்றதொரு சட்டத்தை நாட்டிலுள்ள மற்ற மாநிலங்கள் அமல்படுத்தும்பட்சத்தில் ஆந்திராவிலிருந்து வேலைவாய்ப்புகளுக்காக பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள ஆந்திர மக்களும் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என்று அவர் எச்சரிக்கிறார். அதுமட்டுமின்றி, 'நாம் அனைவரும் இந்தியர்கள்; ஒரே நாட்டை சேர்ந்தவர்கள்' எனும் கருத்துக்கு இது எதிராக அமையும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அது ஏற்படும் தாக்கம் குறித்து உற்றுநோக்கி, ஆய்வு மேற்கொண்ட பிறகே இதன் பயன்பாடு குறித்த முடிவுக்கு வர முடியுமென்று கூறுகிறார் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) ஆந்திர மாநில பிரதிநிதி ஷியாம். மேலும், இந்த சட்டத்தை செயல்படுத்தும்போது, அரசு கடைபிடிக்கும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அடிப்படையாக கொண்டே இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க முடியுமென்று அவர் மேலும் கூறினார்.

நடந்து முடிந்த ஆந்திர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலின்போது தான் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை இதன் மூலம் ஜெகன்மோகன் நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :