குமாரசாமி ராஜிநாமா: கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வி

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜிநாமா படத்தின் காப்புரிமை TWITTER/ANI

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார்.

குமாரசாமியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மாற்று ஏற்பாடுகள் செய்து முடிக்கும்வரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொண்டார்.

படத்தின் காப்புரிமை TWITTER/ANI

நேற்று (செவ்வாய்கிழமை) இரவு 7 மணிக்கு மாநில சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 பேர் வாக்களித்தனர். அதேவேளையில் அரசுக்கு எதிராக 105 பேர் வாக்களித்தனர்.

கர்நாடக சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி வியாழக்கிழமை தாக்கல் செய்த நிலையில், அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால், பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஒரே நாளில் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை வியாழக்கிழமையே நடத்தி முடிக்கும்படி கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா-வும் சபாநாயகரிடம் கடிதம் மூலம் கேட்டு கொண்டார்.

படத்தின் காப்புரிமை ANI
Image caption சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார்

மூன்று நாட்களாக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து காரசாரமான விவாதங்கள் நடந்தன. பலமுறை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தி முடிக்கும்படி கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலா பலமுறைகள் சட்டப்பேரவை தலைவருக்கும், முதல்வர் குமாரசாமிக்கு கடிதங்கள் அனுப்பினார்.

மூன்று நாட்களாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கர்நாடக மாநில பாஜக வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''இது கர்நாடக மக்களுக்கு கிடைத்த வெற்றி'' என்று குறிப்பிட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியுற்றது குறித்து கருத்து வெளியிட்ட பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா, ''இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. குமாரசாமி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்'' என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் 15 பேர் பாஜக-வுக்கு சாதகம் அளிக்கும் வகையில் பதவி விலகல் கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமாருக்கு அனுப்பினர்.

இதனால் கர்நாடக அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. மாநில அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறப்பட்டது.

இதனிடையே பெங்களுரூ மாநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. மேலும் மதுக்கடைகள், பார் இயங்குவதற்கு 48 மணிநேர தடை விதிக்கப்பட்டது.

இதன்மூலம் கடந்த சில வாரங்களாக கர்நாடக அரசியலில் நிலவிவந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

இனி முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்வாரா என்றும் பாஜக அரசு அமைக்க விருப்பம் கோருமா என்றும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

இதனிடையே, கட்சியின் உத்தரவை மீறி குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான மகேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக, அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :