தாராவி: மும்பை தமிழர்களின் நூற்றாண்டு பந்தத்தின் கதை என்ன?

தாராவி

இந்தி திரையுலகமான பாலிவுட், இந்தியாவின் மிகப் பெரும் தொழில் நிறுவனங்கள், கார்ப்ரேட் நிறுவனங்களின் தலைமையகங்கள் என ஜொலிக்கும் மும்பை மாநகரத்தின் தெற்கு பகுதியில், அதன் சாயலுக்கு சம்பந்தமில்லாமல், ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய குறுகலான சந்துகள், அதில் இருபுறமும் ஏராளமான வீடுகள், பத்துக்கு பத்து அடியில் உள்ள வீடுகளில் குறைந்தது 5, 6 பேர், பொது கழிப்பறைகள் என மாநகரின் இன்னொரு முகம் உண்டு.

ஆசியாவின் மிக பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் தாராவியில் கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்றான தாராவி, எண்ணற்ற திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய பகுதியில் அமைந்திருப்பதும், நகரின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல இங்கு போதுமான போக்குவரத்து வசதி இருப்பதும் தாராவியில் ஆரம்ப காலம் முதல் தமிழர்கள் புலம்பெயர ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

ஆனால், அண்மை காலங்களில் நீண்ட காலமாக இங்கு வசித்து வந்த தமிழர்கள், மும்பையின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்வதாகவும், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு இருந்தது போல் தற்போது தமிழகத்தில் இருந்து மக்கள் தாராவியை நோக்கி பிழைப்புக்காக வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

தாராவிக்கும், தமிழர்களுக்கும் என்ன பந்தம்?

இவை ஒருபுறம்இருக்க, தாராவியில் வாழும் மக்களின் நிலை எவ்வாறு இருக்கிறது, குறிப்பாக தமிழர்களுக்கும், தாராவிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை அறியவும், இங்குள்ள மக்களின் பார்வையில் எடுத்துரைக்கவும் தாராவிக்கு பிபிசி தமிழ் பயணித்தது.

Image caption மிக சிறிய வீடுகள்

''தாராவிக்கும், தமிழர்களுக்கும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலான பந்தம் உள்ளது. ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்து,, குறிப்பாக தென் தமிழகத்தில் இருந்து தமிழர்கள் இங்கு புலம்பெயர்ந்தனர். பின்னர் 1950-70 வரை மிக அதிகமாக தமிழர்கள் இங்கு வர ஆரம்பித்தனர்'' என சமூக விழிப்புணர்வு இயக்கமான மும்பை விழித்தெழு இயக்கத்தை சேர்ந்த சிறீதர் தமிழன் நினைவுகூர்ந்தார்.

''காலப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், இங்கிருந்து சிலர் நகரின் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தாலும், இந்த பகுதியில் இன்னமும் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கனவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களும், சில காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தாலும் அவர்களின் இதயம் தாராவியில்தான் இருக்கும். உலகின் எந்த இடத்தில் தற்போது வாழ்ந்தாலும், தாராவியை எப்படி மறக்க முடியும்?'' என்றார்.

''தாராவி தமிழர்களின் முக்கிய பிரச்சனை கழிப்பறை பிரச்சனையோ, நெரிசலான சாலைகள் அல்லது இடப்பற்றாக்குறையோ அல்ல. இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு அரசு பணிகள் கிடைப்பதில்லை. இவர்களுக்கு தமிழகத்திலும் அரசு பணி கிடைக்காது. இங்கும் கிடைக்காது என்றால் என்ன செய்வது?' என்று சிறீதர் தமிழன் மேலும் கூறினார்.

Image caption சிறீதர் தமிழன்

''தமிழகத்தில் இருந்து வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து வாழும் தமிழர்கள், தங்கள் ஊர், சாதி, மதம் என்ற ரீதியில் தனி பிரிவுகளாக வாழ்ந்தாலும், தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்'' என்று தாராவிவாசியான மணி பிபிசி தமிழிடம் கூறினார்.

''தாராவி மும்பை தமிழர்களின் கோட்டை. இது ஒரு நாள், இரு நாள் உறவல்ல. நூற்றாண்டு கால பந்தம்'' என்று மேலும் தெரிவித்தார்.

ஏராளமான பிரச்சனைகள், ஆனாலும் தாராவியை விட்டு மக்கள் செல்லாமல் இருப்பது ஏன்?

தாராவியில் வாழும் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதற்கு பதிலளித்த சமூக பணியாளர் சைமன், ''தாராவியில் பொது கழிப்பறைகள் இரவு 10 மணிக்குள் மூடப்பட்டு விடும். பல வீடுகளில் தனி கழிப்பறை இல்லாததால் அவர்கள் பொது கழிப்பறைகளுக்கு செல்ல வேண்டும். இது பெண்களுக்கு எவ்வளவு சிரமம் என்று தெரியுமா'' என்று வினவினார்.

Image caption சைமன்

''ஆனாலும் இங்குள்ள சிறு தொழிற்சாலைகளால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் சகாய விலையில் கிடைக்கும் உணவு பொருட்கள் ஆகியவை மக்களை தொடர்ந்து இங்கேயே இருக்க வைக்கிறது'' என்று சைமன் கூறினார்.

எப்போது நிறைவேறும் தாராவி வீடுகள் சீரமைப்பு திட்டம்?

தாராவி வீடுகள் சீரமைப்பு திட்டம் என்ற இங்குள்ள குடிசை வீடுகளை மற்றும் பழைய வீடுகளை அப்பறப்படுத்தி மாற்று வீடுகள் கட்டித்தரும் அரசின் திட்டம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தாலும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை.

தாராவியை குடிசையில்லா பகுதியாக மாற்ற பல ஆண்டுகளாக மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு முயற்சிகளையும், வாக்குறுதிகளையும் தந்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் இது ஒரு முக்கிய கோஷமாகவும், வாக்குறுதியாகவும் இருக்கிறது. ஆனால், எப்போது, எப்படி அது செயல்பாட்டுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும்,, பல ஆட்சிகள் மாறிவிட்டாலும், இங்குள்ள வீடுகளை அப்புறப்படுத்தும்போது அங்குள்ள மக்களை குடியேற்ற அரசு கூறும் இடங்கள் அங்குள்ள மக்களுக்கு இசைவாக இல்லை. மேலும், இங்குள்ள எண்ணற்ற சிறு தொழிற்சாலைகளை இங்கிருந்து அப்பறப்படுத்தமுடியுமா என்ற கேள்விக்கும் பதில் தரப்படவில்லை.

தாராவியில் இருந்து வேறு இடத்துக்கு செல்வீர்களா என்று கேட்டதற்கு பதில் அளித்த சைமன், ''நாங்கள் பிறந்து வளர்ந்த இடம் தாராவி. நாங்கள் ஏன் தாராவியை விட்டுக் கொடுக்க வேண்டும்? இங்கிருந்து நாங்கள் செல்லமாட்டோம்.. இது எங்கள் பூமி'' என்று குறிப்பிட்டார்.

அதேவேளையில் தற்போது நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள்தொகையால் தாராவி பெரிதும் திணறி வருகிறது. சுகாதார பிரச்சனை, மழை காலங்களில் வீடுகளுக்குள் புகுந்துவிடும் மழை நீர் மற்றும் வீதிகளில் வழிந்தோடும் கழிவு நீர் என்று மக்கள் அன்றாடம் போராடி கொண்டிருக்கின்றனர்.

கழிவுநீர் பிரச்சனை குறித்து பதிலளித்த மாநகராட்சி உறுப்பினர் மாரியம்மாள் முத்துராமலிங்கம், ''அரசு முடிந்தளவு தாராவி மக்களின் பிரச்னைகளை தீர்க்க பாடுபடுகிறது. ஆனால், கழிவுநீர் தொட்டிகளுக்கு மேல் சில மக்கள் வீடுகளை கட்டுவதால், அதை சுத்தம் செய்வது துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மக்கள் சற்று பொறுப்பாக இருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

Image caption மாநகராட்சி உறுப்பினர் மாரியம்மாள்

தாராவி வீடுகள் சீரமைப்பு திட்டம் நடைமுறைக்கு ஏன் இன்னமும் வரவில்லை என்று தாராவி சட்டமன்ற உறுப்பினர் வர்ஷா கெய்க்வாட்டிடம் கேட்டதற்கு, ''இங்குள்ள வீடுகள் சிலவற்றை அப்பறப்படுத்தி மாற்று வீடுகள் கட்ட மற்றும் அடுக்கு மாடிகள் கட்ட சில தடைகள் உள்ளன. விமான நிலையத்துக்கு அருகே தாராவி இருப்பதால் இங்கும் கட்டப்படும் கட்டங்களின் உயரம் குறித்து சில கட்டுப்பாடுகள் உள்ளன'' என்று விவரித்தார்.

''மேலும் இங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அவர்களுக்கு விருப்பமான இடங்களை அரசு தேர்வு செய்ய வேண்டும். எண்ணற்ற வீடுகள், ஏராளமான மக்கள், மிகப்பெரிய மற்றும் கடினமான திட்டம். ஆனாலும் மக்களின் நல்வாழ்வுக்கு இந்த திட்டம் நிறைவேற வேண்டும். அரசு, அதிகாரிகள், தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் என அனைத்து தரப்பினரும் இது குறித்து ஆக்கபூர்வமான முறையில் பேச வேண்டும்'' என்று வர்ஷா கெய்க்வாட் கேட்டுக்கொண்டார்.

தாராவி பற்றிய பிம்பம்

தாராவியில் உள்ள பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, கடந்த காலங்களில் இங்கு வாழ்ந்த சில நிழலுலக தாதாக்களால் அடிதடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றுக்கு பெயர் போன இடம் தாராவி என்ற ஒரு பிம்பமும் உள்ளது.

தாராவியில் 30 ஆண்டுகளாக வசித்து தற்போது அந்தேரியில் வாழும் ரவீந்திரன் இது பற்றி கூறுகையில், ''இரண்டாம் நம்பர் என்று கூறப்படுகின்ற சட்டவிரோத காரியங்கள் இங்கு நடப்பதாக சொல்வார்கள். மிகப்பெரிய பகுதி இது. பல லட்சம் மக்கள், பல மாநிலங்களில் வந்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். அதனால் ஓரிரு சம்பவங்கள், முன்பு இங்கு வாழ்ந்த சிலரின் பின்னணி ஆகியவற்றை மட்டும் வைத்து இந்த பகுதியை ஒரு குற்றபூமியாக வர்ணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று கூறினார்.

தாராவியில் பிறந்துவளர்ந்த இளம் பெண் சிம்ரன் கூறுகையில், ''வேலைக்காக நேர்முக தேர்வுகளுக்கு செல்லும்போது தாராவியில் இருந்து வருகிறேன் என்று கூறினால் சிலர் இளக்காரமாக பார்ப்பதுண்டு. ஏனெனில், தாராவி குறித்து கடந்த காலங்களில் பல எதிர்மறையான பிம்பங்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது'' என்றார்.

''ஆனால், இவையெல்லாம் கடந்த காலத்தில் உண்டான தவறான புரிதல். தாராவி தற்போது வெகுவாக மாறிவிட்டது. அண்மை காலங்களில் இங்கிருந்து எண்ணற்ற இளம்வயதினர் தங்களின் தனி திறமையால் முன்னேறி வருவது தாராவி குறித்த பார்வையை நேர்மறையாக மாற்றிவிட்டது எனலாம். தாராவியா என்று இளக்காரமாக பார்த்தவர்கள் எதிர்காலத்தில் தாராவியா என்று வியப்புடன், மரியாதையுடன் நோக்கும் காலம் கனிந்துவருகிறது ' என்று சிம்ரன் மேலும் குறிப்பிட்டார்.

தாராவியின் கலாசாரம் மற்றும் நாகரீகம் ஆகியவை மும்பையை ஒத்து இல்லையென்றாலும், ஆனால் இந்த பகுதி என்றும் பெண்களுக்கு பாதுகாப்பாகவே இருந்து வருகிறது. ''தாராவி போல பெண்களுக்கு பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை. வெளியே சென்றுவிட்டு இரவு 1 மணி ஆனாலும் என்னால் தாராவிக்கு திரும்ப முடியும். இதுதான் இந்த பகுதியை விட்டு நாங்கள் செல்லாததற்கு காரணம்'' என்று சிம்ரன் கூறினார்.

Image caption சிம்ரன் மற்றும் தோழிகள்

'தாராவிதான் எங்களுக்கு எல்லாமே'

தாராவியில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கலாம், மூச்சுவிடக்கூட சிரமப்படும் அளவு மக்கள்தொகை இருக்கலாம், தாராவி குறித்து தவறான பிம்பம் நகரமெங்கும், ஏன் நாடெங்கும் இருக்கலாம். ஆனாலும் இங்குள்ள மக்களுக்கு தாராவி தான் எல்லாமே.

தாராவியில் பிறந்து வளர்ந்த சந்தீப் கூறுகையில் ''மும்பையின் மத்திய பகுதிகளில் உள்ள பல அப்பார்ட்மெண்ட்களில் அடுத்த வீடுகளில் வசிப்பவர்கள் யாரென்று தெரியாமல் வாழ்வர். ஆனால், இங்கு அப்படியில்லை. தாயாக, பிள்ளைகளாக இங்கு மக்கள் பழகி வருகிறோம். உலகத்தில் எங்கு சுற்றினாலும் எப்ப தாராவி வருவோம்னுதான் என் மனசு அடிச்சிக்கும்'' என்றார்.

''தாராவி எங்க வீடு, ஏரியா மட்டுமில்லை. இது எங்கள் மண். எங்க அம்மா, எல்லாமே எங்களுக்கு தாராவி தான்'' என்றார்.

தாராவி குறித்து பேச நீண்ட கதை உள்ளது. தாராவி மக்களுக்கும் உள்ளது. மற்ற கதைகளும், பிரச்சனைகளும் பிபிசி தமிழில் வெளியாவது தொடரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்