மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான்-2 பற்றி பேட்டி: நிலவில் குடியேறுவதற்காகவா? ஹீலியம்-3 எடுக்கவா?

படத்தின் காப்புரிமை ISRO

இஸ்ரோ நிலவை நோக்கி தனது இரண்டாவது விண்கலனை அனுப்பியிருக்கும் நிலையில், அந்தத் திட்டத்தின் பயன்கள், இந்தியாவின் எதிர்கால விண்வெளி வாய்ப்புகள் குறித்து சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து.

கே. இந்த சந்திரயான் - 2 திட்டம் இஸ்ரோவுக்கு எவ்வளவு முக்கியமானது?

ப. சந்திரயான்-1 2008ல் அனுப்பப்பட்டது. அது நிலவைச் சுற்றிவரும் வகையில் அனுப்பப்பட்டது. தொழில்நுட்ப ரீதியாக அதற்கு அடுத்த கட்டம் என்பது நிலவில் மெதுவாக தரையிறங்குவது. அந்த வகையில் சந்திரயான் ஒன்றின் அடுத்த கட்டம்தான் சந்திரயான் - 2.

கே. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு என்ன கிடைக்கும்?

ப. நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்தார்கள் என்றாலும்கூட, அவர்கள் அதன் மத்திய ரேகைப் பகுதியில் இறங்கித்தான் ஆய்வுசெய்தார்கள். அங்கு ஏதும் இல்லையென விட்டுவிட்டார்கள். இப்போது நாம் திரும்பவும் இந்த ஆய்வில் இறங்குகிறோம் என்றால், அதற்குக் காரணம் நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதுதான்.

படத்தின் காப்புரிமை facebook
Image caption மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான் - 1, 2 ஆகிய இரு திட்டங்களுக்கும் திட்ட இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

தவிர தென்துருவப் பகுதியில் மிகப் பெரிய பள்ளங்கள் இருக்கின்றன. அங்கு ஆய்வுகளை நடத்துவதன் மூலம், சூரியன், சந்திரன் ஆகியவற்றின் ஆதிகாலம் குறித்து அறிய முடியும். அடுத்ததாக மனிதன் நீண்ட நாள் நிலவில் தங்க வேண்டுமென நினைத்தால், அது துருவப் பகுதிகளில்தான் முடியும். நிலவு குறித்து நாம் அடுத்த கட்ட ஆய்வை மேற்கொள்ள நாம் அடுத்து சென்று இறங்க வேண்டிய இடமும் துருவப் பகுதிகளாகத்தான் இருக்கும்.

இங்கு நடக்கும் ஆய்வு முடிவுகளை வைத்து, அடுத்ததாக மனிதன் இறங்குவதற்கும் வசிப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய முடியும். அந்தவகையில் பார்த்தால், இந்தியாவுக்கு மட்டுமல்ல சர்வதேச அளவிலும்கூட இது மிக முக்கியமான பயணம்தான்.

கே. நிலவு தொடர்பான ஆய்வுகளின் மீதான ஆர்வம் தற்போது உலகம் முழுவதுமே அதிகரித்திருக்கிறது. என்ன காரணம்?

ப. 2008ல் நாம் சந்திரயான் -1ஐ அனுப்பினோம். அந்த விண்கலன் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் மூலக்கூறுகள் இருந்ததைக் கண்டுபிடித்தது. இது மிக முக்கியமான காரணம் எனக் கருதுகிறேன். அதற்கு முன்பாகச் சென்ற எந்த விண்கலனும் இதைக் கண்டறியவில்லை.

படத்தின் காப்புரிமை ISRO

தவிர, விண்வெளி ஆய்வு மையங்களில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இருக்கும் கருவிகள் எவ்வளவோ மேம்பட்டவை. ஆகவே ஆய்வுகளைப் புதுப்பிக்கலாம் என நினைக்கிறார்கள். மேலும் மனிதர்கள் கூடுதல் காலத்திற்கு நிலவில் இருக்கும் சாத்தியம் இப்போது உருவாகியிருக்கிறது. எல்லாம் சேர்ந்துதான் இந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

கே. இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்கா, நிலவின் தென் துருவப் பகுதிக்கு ஆட்களை அனுப்பப்போவதாகத் தெரிவித்திருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பே நிலவில் மனிதன் தரையிறங்கிவிட்டான். இந்த நிலையில், நம்முடைய திட்டம் சாதிக்கப் போவதென்ன? புதிதாக எதைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்?

ப. 1969-70களில் நிலவின் மனிதன் கால் பதித்திருந்தாலும்கூட, அங்கு ஏதும் இல்லை எனக் கருதி ஆய்வுகளைத் தொடரவில்லை. இப்போது நாம் மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகளை துவங்கியிருக்கிறோம். இந்தியா அங்கு செல்லவிரும்பும் நிலையில் அங்கு என்ன இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இந்தத் திட்டங்கள் நமக்கு உதவும். அடுத்த வரக்கூடிய ஆய்வுகளுக்கான துவக்கப் புள்ளியாக இந்தத் திட்டம் இருக்குமென நினைக்கிறேன்.

கே. நிலவில் அதிகம் கிடைக்கக்கூடிய ஹீலியம் - 3 என்ற தனிமத்தை எடுத்துவருவதற்காகவே மீண்டும் அந்த துணைக் கோள் மீது ஆர்வம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?

ப. ஒரு சாரார் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், நிலவுக்குச் செல்ல பல காரணங்கள் இருக்கின்றன. நிலவைப் பற்றித் தெரிந்துகொள்ள, நிலவு எங்கிருந்து வந்தது என்பதைத் தெரிந்துகொள்ள, நிலவில் குடியேற்றம் அமைக்க முடியுமா என்பதைச் சோதிக்க, சர்வதேச விண்வெளி ஆய்வுமையம் போல நிலவில் ஆய்வு மையம் அமைக்க முடியுமா என்பதை ஆராய என பல விஷயங்களுக்காக சந்திரனை ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.

நாம் இதுவரை நிலவின் ஒரு பக்கத்தைத்தான் பார்த்திருக்கிறோம். நாம் பார்த்திராத நிலவின் மறுபக்கத்திற்குச் சென்று, அங்கிருந்து விண்வெளியை ஆராய்ந்தால் என்ன தெரியவரும் என்பது ஆர்வமூட்டக்கூடியது. இதுபோல பல காரணங்கள் நிலவை ஆராய இருக்கின்றன.

அதில் ஒரு சாரார் இந்த ஹீலியம் 3ல் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் மூலம் கதிர்வீச்சு இல்லாமல் அணுசக்தியை உற்பத்தி செய்யலாம் என கருதப்படுகிறது. பூமிக்கு அருகில் அந்த தனிமம் அதிகம் கிடைக்கும் இடம், நிலவுதான். ஆகவே அங்கிருந்து எடுத்துக் கொண்டுவர முடியுமென ஒரு சாரார் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு நீண்ட காலம் ஆகலாம். இதன் நடைமுறை சாத்தியங்களை இப்போதே சொல்ல முடியாது.

கே. இந்தியாவின் மிகப் பெரிய விண்வெளித் திட்டங்களில் ஒன்று, செவ்வாய் கோளுக்கு விண்கலத்தை அனுப்பிய மங்கள்யான் திட்டம். அதன் தற்போதைய நிலை என்ன?

ப. மங்கள்யான் அனுப்பப்பட்டு ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. அந்தத் திட்டத்தின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள்தான் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும், அதன் ஆயுளை நீட்டிக்க பல வழிமுறைகள் இருந்தன.

இங்கிருந்து செல்லும்போதே பெருமளவில் எரிபொருள் சேமிக்கப்பட்டது. அதை வைத்துக்கொண்டு அதனுடைய நீள் வட்டப்பாதையை மாற்றியமைத்தோம். அதனால், அதன் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன் கருவிகள் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த செப்டம்பரோடு, ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாவது ஆண்டு துவங்குகிறது. அதைக் கொண்டாடலாம். இதற்கிடையில் சந்திரயான் ஏவப்பட்டதால் பலரது கவனமும் இந்தப் பக்கம் இருக்கிறது. அவ்வளவுதான். மங்கள்யான் மட்டுமல்ல, நாம் கவனிக்காத அஸ்ட்ரோசாட்டின் செயல்பாடுகளும் சிறப்பாகவே இருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

கே. நிலவுக்கு, இஸ்ரோ செயற்கைக்கோள்களை அனுப்பியிருக்கிறது. இதன் அடுத்த கட்டம் என்ன? ஒரு விண்வெளி நிலையத்தை நம்மால் அமைக்க முடியுமா?

ப. இஸ்ரோ எப்போதும் ஒரு நேரத்தில் ஒரு அடியை மட்டும்தான் முன்னெடுத்து வைக்கும். மேலும் நமக்குத் தேவையான தொலைத்தொடர்பு, வானிலை போன்ற செயற்கைக்கோள்களை அனுப்புதற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறோம். இப்போது நிலவுக்கு விண்கலனை அனுப்பியிருக்கிறோம். அடுத்ததாக, அங்கு ஒரு விண்கலனை அனுப்பி, திரும்பவும் பூமிக்கு வர வைக்க முடியுமா என்பதை பரிசோதிப்போம். அதற்குப் பிறகு மனிதனை நிலவுக்கு அனுப்பலாம். ககன்யான் திட்டம் முதற்கட்டமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவிருக்கிறது.

இவை எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்பட்சத்தில், ஒரு விண்வெளி ஆய்வு மையம் அமைக்க நாம் விரும்பலாம். அப்போது, நாம் மட்டுமே அதை அமைப்போமா அல்லது பிற நாடுகளுடன் சேர்ந்து அமைப்போமா என்பதையெல்லாம் முடிவுசெய்ய வேண்டும். அம்மாதிரியான தருணத்தில், விண்வெளியில் அதை அமைப்போமா அல்லது நிலவில் அமைப்போமா என்பது குறித்தும் விவாதங்கள் நடந்துவருகின்றன.

என்னைப் பொறுத்தவரை நிலவிலேயே விண்வெளி மையம் அமைக்க வேண்டும் என்றுதான் கருதுகிறேன். இதை சர்வதேச அளவில் பலர் ஏற்கவும் செய்கிறார்கள். தற்போதுள்ள விண்வெளி ஆய்வு மையத்தின் ஆயுள் முடிந்ததும், திரும்பவும் இதேபோல விண்வெளியில்தான் அமைக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். ஆனால், தற்போதுள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கான அமைப்பில் சீனாவும் இந்தியாவும் உறுப்பினர்கள் இல்லை. புதிதாக அமைத்தால், அதை நிலவில் அமைத்தால் இந்த இரு நாடுகளையும் இணைக்க வேண்டுமென நான் சொல்லிவருகிறேன். அதற்கான சாத்தியங்கள் வரும் காலங்களில் தெரியுமென நினைக்கிறேன்.

கே. இந்தியாவின் சந்திரயான் திட்டங்களில் நிலவுக்குச் செல்லும் விண்கலன்களில் பூமியிலிருந்து நேராக நிலவுக்குச் செல்லாமல் சுற்றுவட்டப் பாதையில் செல்கின்றன. இதற்குக் காரணம் என்ன?

ப. இதற்கு இரண்டு, மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக நிலவுக்குச் சென்றால், 100-120 கிலோவுக்குமேல் பொருட்களை அனுப்ப முடியாது. அந்த எடைக்குள் பெரிதாக அறிவியல் சாதனங்களை வைத்து அனுப்ப முடியாது.

ஆனால், பிஎஸ்எல்வியில் 1,300 கிலோ எடையுள்ள சாதனங்களை நீள் வட்டப்பாதையில் அனுப்ப முடியும். அந்த சாதனங்களில் உள்ள எரிபொருளைப் பயன்படுத்தி, நிலவை நெருங்கும்போது 600 கிலோ எடையுள்ள தொழில்நுட்ப சாதனங்களை நிலவுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

இரண்டாவதாக, இப்படி பல முறை சுற்றி சந்திரனை அடையும்போது நம்முடைய சாதனங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதைக் கணிக்க நமக்கு கூடுதலாக கால அவகாசம் கிடைக்கிறது. அதனால், நாம் முதல் முயற்சியிலேயே வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எல்லோருமே முதல் முறையில் வெற்றிபெறுவதில்லை.

நிலவு பூமியிலிருந்து கிட்டத்தட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் கி.மீ. தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு விநாடிக்கு ஒரு கி.மீ. தூரத்தைக் கடக்கும்படியாக பூமியைச் சுற்றிவருகிறது. இந்த விண்கலன்கள் கிட்டத்தட்ட ஒரு விநாடிக்கு ஒரு கி.மீ. தூரத்தைக் கடக்கும். அப்படியான சூழலில், ஐந்து நாள் பயணத்தில் இந்த விண்கலன்கள் துல்லியமான இடத்தை அடைவதற்கு வாய்ப்பு குறைவு. மெதுவாகச் சென்றால், கண்டிப்பாக துல்லியமான இடத்திற்கு சென்று சேர்ந்துவிடலாம்.

படத்தின் காப்புரிமை Ani

இதேபோலத்தான் மங்கள்யான் பயணம் திட்டமிடப்பட்டது. இதிலும் வெற்றிகிடைத்தது. ஆகவேதான், இந்தத் திட்டமும்கூட சுற்றிச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. தோல்வி இல்லாமல் இருப்பதற்காக இப்படித் திட்டமிடப்படுகிறது.

கே. இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு மங்கள்யான், சந்திரயான், ககன்யான் என சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. இந்தப் பெயர்கள் எப்படித் தேர்வுசெய்யப்படுகின்றன?

ப. திட்டங்களை மட்டும்தான் இஸ்ரோவால் முன்வைக்க முடியும். பெயர்கள் அரசால் சூட்டப்படும். துவக்கத்திலிருந்தே, விண்வெளித் துறையின் அமைச்சராக பிரதமர்தான் இருப்பார். சந்திரயான் திட்டத்தைப் பொறுத்தவரை, இஸ்ரோ ஒரு பெயரைப் பரிந்துரைத்தது. அப்போது பிரதமராக இருந்தவர் வாஜ்பேயி. அந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அவர், பெயரை மட்டும் மாற்றினார். அவர்தான் சந்திரயான் - 1 என பெயரை எழுதினார். ஒன்று எனக் குறிப்பிட்டால், அடுத்ததாக இரண்டு, மூன்று என திட்டங்கள் வர வேண்டுமென அர்த்தம். அதைப் பார்த்து எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு திட்டத்தோடு சென்றபோது, மேலும் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததைப் போல இருந்தது.

மங்கள்யான் திட்டம் மன்மோகன் சிங் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை சுதந்திர தினத்தன்று அறிவிக்கும்போது, மங்கள்யான் என பெயர் சூட்டி அறிவித்தார். ஆகவே, இவற்றுக்கு பெயர் சூட்டியது பிரதமர்கள்தான்.

Image caption மங்கள்யான்

கே. இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டிற்கு இம்மாதிரி செலவுபிடிக்கும் திட்டங்கள் தேவையா என்ற கேள்வி இருக்கிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த விண்வெளித் திட்டங்களால் என்ன கிடைக்கும்?

ப. இந்தியாவில் ஒருவர் மிகவும் கஷ்டப்படுபவராக இருந்தால்கூட, தன்னுடைய குழந்தைகளைக் கல்வி கற்க அனுப்ப வேண்டுமென நினைப்பார். தேசத்தின் தலைவர்களும் அப்படித்தான். தற்போதுள்ள மக்களைக் கவனிப்பதோடு, அடுத்த தலைமுறைக்கும் ஏதாவது செய்தாக வேண்டும். இந்த விண்வெளித் திட்டங்களின் மூலம் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள் உருவாகியிருக்கிறார்கள்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விண்கலன்கள், செயற்கைக் கோள்களை அனுப்பியிருக்கிறோம். அவற்றில் மங்கள்யான், சந்திரயான் திட்டங்களைத் தவிர பிற திட்டங்கள், செயற்கைக்கோள்கள் எல்லாம் தனி மனிதனுக்கும் உதவக்கூடியவைதான். மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, வங்கிகளை இணைக்க, செய்திப் பரிமாற்றத்திற்கு, கல்விக்கூடங்களை இணைக்க, மருத்துவ ஆலோசனைகளுக்கு எல்லாம் இந்த செயற்கைக்கோள்கள்தான் உதவுகின்றன. இதெல்லாம் தவிர, வணிக ரீதியாகவும் நாம் முன்னேறத் துவங்கியிருக்கிறோம்.

இன்றைக்கு நாம் செலவழிக்கக்கூடிய மூலதனம் இந்த தலைமுறைக்கான மூலதனம் மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கான மூலதனமும்கூட. அந்த வகையில் இந்தத் திட்டங்கள் மிக முக்கியமானவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :