''பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்'' - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ்

பிராமணர்கள் படத்தின் காப்புரிமை Godong
Image caption கோப்புப் படம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - "பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும்"

முற்பிறவிகளில் செய்த நல்வினைகள் காரணமாக பிராமணர்கள் இரு முறை பிறந்தவர்கள் என்று கேரள மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வி.சிதம்பரேஷ் பேசியுள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொச்சியில் நடந்த தமிழ் பிராமணர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், தூய்மை, உயர்ந்த சிந்தனை, நல்ல குணம், பெரும்பான்மை சைவ உணவுப் பழக்கம், கர்நாடக சங்கீதம் மீதான ஈர்ப்பு போன்ற தனித்துவம் மிக்க குணாதிசயங்கள் அனைத்தும் ஒருங்கே பிராமணர்களுக்கு உண்டு என்று அவர் பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை http://highcourtofkerala.nic.in
Image caption நீதிபதி வி.சிதம்பரேஷ்

பிராமணர்கள் எப்போதும் மதவாதிகளாக இருந்ததில்லை, மக்களை நேசிப்பவர்கள், பிறருக்கு கேடு விளைவிக்காதவர்கள், அஹிம்சாவாதிகள் என்று சிதம்பரேஷ் பேசியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

நல்ல காரியங்களுக்கு தாராளமாக பொருளுதவி செய்யும் பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

"அரசமைப்புச் சட்டப் பொறுப்பில் இருப்பதால் நான் இட ஒதுக்கீடு பற்றி கருத்துக்கூற முடியாது. ஆனால், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடரவேண்டுமா? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டுமா என்பதை இந்த சமூகம்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். குரல் உயர்த்திப் பேசவேண்டும். அழுகிற குழந்தைதான் பால்குடிக்கும்."

"நம்மை ஓரம்கட்ட அனுமதிக்கக்கூடாது; நாம் எப்போதுமே மைய நீராட்டத்தில் இருக்க வேண்டும்; தனிக் குரலில் பாடாமல் சேர்ந்து இசைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிதம்பரேஷ், டிசம்பர் 2012 முதல் நிரந்தரம் ஆக்கப்பட்டார்.

தி இந்து - 'ஒடிஷாவில் பட்டினிச்சாவு'

ஒடிஷா மாநிலம் நூவாபடா மாவட்டத்தில் ஐந்து நாட்கள் உணவின்றி பட்டினி கிடந்ததால் 17 வயதாகும் மாற்றுத் திறனாளியான கௌதம் பெஹேரா என்பவர் ஜூலை 6 அன்று உயிரிழந்துள்ளதாக செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது ஒரு பட்டினிச்சாவு என்று குற்றம் சாட்டியுள்ள 'ரைட் டு ஃபுட் கேம்பைன்' அமைப்பினர் அரசு இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்று, இத்தகைய மரணங்கள் வரும் காலங்களில் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அவருடன் பட்டினி கிடந்த அவரது சகோதரி மீட்கப்பட்டு அருகிலுள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கௌதம் பெஹேரா மரணத்துக்குப் பிறகு மிகவும் வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அந்த்யோதயா அண்ண யோஜனா குடும்ப அட்டை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி - ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண்

படத்தின் காப்புரிமை dailythanthi.com

கேரளாவின் கொல்லம் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி மதுரை வந்தடைந்தபோது, ரயிலில் பயணம் செய்த பூர்ணிமா என்ற பெண் தூக்க கலக்கத்தில் நடந்து சென்று ரயில் பெட்டியில் இருந்து நடைமேடையில் இறங்கியுள்ளார்.

இதில் அவர் தவறி விழுந்து தொடர்வண்டிக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்து ரயில்வே போலீசாரும், பொதுமக்களும் அவரை மீட்க முயன்றனர்.

தொடர்ந்து ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார் என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன்பின் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அந்த வழியே செல்ல வேண்டிய மற்ற ரயில்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்