மின்சார வாகனங்களை நோக்கிய இந்தியாவின் பயணம் வெற்றிபெறுமா?

மின்சார வாகனங்களை நோக்கிய இந்தியாவின் பயணம் வெற்றிபெறுமா? படத்தின் காப்புரிமை Getty Images

நாடு முழுவதும் மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடுகிறார் ஆற்றல் துறைசார் வல்லுநரான வந்தனா கோம்பர்.

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 100 சதவீதம் மின்சார கார்களை கொண்ட நாடாக மாற்றுவதற்கு தான் முயற்சித்து வருவதாக கூறி நாட்டின் வாகன உற்பத்தித்துறை மட்டுமின்றி உலக நாடுகளையும் கடந்த 2017ஆம் ஆண்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.

"உங்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ, நான் இதை செயல்படுத்தபோகிறேன். நான் உங்களிடம் கோரிக்கை விடுக்கப் போவதில்லை. நான் மொத்தமாக மாற்றிவிடுவேன்" என்று துறைசார் கருத்தரங்கு ஒன்றில் அவர் அப்போது பேசினார்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளே வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் கார்களை 2040ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில் நிதின் கட்கரியின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஆனால், சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் பதவியேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு, இந்த இலக்கை 100 சதவீத்திலிருந்து 30 சதவீதமாக குறைத்துள்ளது.

வாகன உற்பத்தித்துறையின் எதிர்மறையான பதில் மற்றும் வேலையிழப்பு குறித்த அச்சங்களே மத்திய அரசு பின்வாங்கியதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனையடுத்து, கார்களை விடவும் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகும் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் பக்கம் அரசின் கவனம் திரும்பியுள்ளது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், 21.2 மில்லியன் இருசக்கர வாகனங்களும், சுமார் 3.4 மில்லியன் கார்களும் விற்பனையாகியுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசாங்கத்தின் புதிய பரிந்துரையில் முதலாவதாக 2023ஆம் ஆண்டுக்குள் மின்துறை மூன்று சக்கர வாகனங்களும், 2025ஆம் ஆண்டுக்குள் இருசக்கர வாகனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாசுபாட்டை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, வளர்ந்து வரும் மின்சார வாகன உற்பத்தித்துறையில் முன்னிலை பெறுவதற்கும் அரசு விரும்புகிறது.

இம்மாதத்தின் தொடக்கத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்தபோது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மையமாக விளங்க இந்தியா விரும்புகிறது" என்று கூறினார். இதற்கு முந்தைய தினம் வெளியான மத்திய அரசின் அறிக்கையில், "மின்சார கார்களுக்காக உலகின் டெட்ராய்டாக இந்திய நகரம் ஒன்று உருவெடுக்க வாய்ப்புள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது மின்சார கார்களின் மையமாக விளங்கும் சீனாவை போன்று இந்தியாவில் மின்சார கார்களுக்கு போட்டிமிக்க வர்த்தகமோ அல்லது உற்பத்தி செய்வதற்காக கட்டமைப்போ சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை.

மின்சார கார்களின் உற்பத்தி மட்டுமின்றி, அவற்றிற்கு தேவையான மின்கலன் தயாரிப்பிலும் சீனாவே உலகின் முன்னணி நாடாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி, அந்நாட்டில் மின்சார கார்களின் பயன்பாடும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.

மின்சார கார் உற்பத்தியில் உலகின் பிரபல நிறுவனமாக திகழும் டெஸ்லா, சீனாவின் ஷாங்காய் நகரில் தனது உற்பத்தி ஆலை இந்தாண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வருமென்று தெரிவித்துள்ளது.

சீனாவிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்வதற்கு பல விடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, ஒரேயடியாக மின்சார கார்களின் உற்பத்தியை அதிகரிக்காமல், வாடிக்கையாளர்கள் திணிக்காமல் படிப்படியாக நகரத்துக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட இலக்கை முன்வைத்து சீனா செயற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, கார் தயாரிப்பாளர்களும் ஒரு குறிப்பிட்ட அளவு மின்சார கார் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு நிபந்தனை வகுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதே போன்று சென்றாண்டு தனது மொத்த கார் உற்பத்தியில் பாதி மின்சார கார்களை கொண்டுள்ள நார்வேயை இந்தியா முன்னுதாரணமாக கொள்ளலாம். அந்நாட்டில், 2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சூழ்நிலையில், இந்தியாவிற்கும் உற்சாகமளிக்கக் கூடிய வகையிலான அறிகுறிகள் உள்ளன.

இந்தியா முழுவதும் மின்சார கார்களுக்காக ஆற்றல் ஏற்று நிலையங்கள் (சார்ஜிங் ஸ்டேஷன்ஸ்) அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் போன்ற மின் நிறுவனங்கள் விரைவில் ஆற்றல் ஏற்று நிலையங்களை தொடங்கத் திட்டமிட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 நிலையங்களை நிறுவுருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, இந்தியாவில் மின்சார கார்களின் வருகை சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், இந்தியாவின் முதல் எஸ்யுவி ரக மின்சார காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ததாகவும், அதை நேற்று (புதன்கிழமை) தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தங்களது மின்சார கார்களை நிசான், மகேந்திரா & மகேந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளன.

அதேபோன்று, நாடுமுழுவதும் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களும் தயாரிப்பும், விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையும் சீரிய வேகத்தில் உயர்ந்து வருகிறது.

அதேபோன்று, தனியார் தபால் சேவை நிறுவனங்கள் மற்றும் செயலி மூலமாக இயங்கும் வாடகை கார் சேவை நிறுவனங்கள் மின்சார கார்கள், இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களை தங்களது சேவைகளில் அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

அதேபோன்று, மின்சார வாகனங்களுக்கு அதிக நேரம் பிடிக்கும் ஆற்றல் ஏற்றும் முறையை விடுத்து, ஒவ்வொருமுறையும் மின்கலனை மாற்றிக்கொள்ளும் வகையிலான நிலையங்களை பயன்படுத்திக்கொள்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

இந்தியாவில் மின்சார கார்கள் மற்றும் மின்கலன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்க திட்டமிட்டு வருகிறது.

எப்போது இந்தியாவில் மின்கலன்களின் விலை குறைய தொடங்குகிறதோ, அப்போதுதான் அவை ஏனைய கார் வகைகளுக்கு போட்டியாக மாறும். கூடுதல் பலனாக சுத்தமான காற்று நமக்கு கிடைக்கும்.

அதுவே, இந்தியா தனது தனித்துவமான பாதையில் பயணித்து மின்சார கார்கள் தொடர்பான இலக்கை எட்ட வழிவகுக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்