சென்னையில் விடிய விடிய மழை: இன்று எந்த மாவட்டங்களில் பெய்யும்?

சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை படத்தின் காப்புரிமை BBC TAMIL

கடும் குடிநீர் பற்றாக்குறையில் தவித்துவரும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (புதன்கிழமை) இரவு முதல் அதிகாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது.

நேற்று இரவு பெய்ய ஆரம்பித்த மழை, சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் விட்டுவிட்டும் தொடர்ச்சியாகவும் அதிகாலைவரை பெய்துகொண்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை மழை பெய்திருந்த நிலையில், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பெய்த இந்த மழை சென்னை வாசிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

வெப்பச் சலனத்தின் காரணமாக பெய்துவரும் இந்த மழை, இன்னும் இரு நாட்களுக்குத் தொடரக்கூடும்.

இந்த மழை சென்னை மீனம்பாக்கத்தில் 75 மி.மீட்டராகவும் செம்பரம்பாக்கத்தில் 41 மில்லி மீட்டராகவும் கே.கே. நகரில் 64 மி.மீட்டராகவும் பதிவாகியிருக்கிறது.

இந்த மழைகளின் காரணமாக ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 24ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில் சென்னையில் 169.6 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் சராசரியாக 146.5 மி.மீட்டர் மழையே பதிவாகும் என்பதால், 16 சதவீதம் அதிக மழை பதிவாயிருப்பதாக வானிலை ஆய்வுமையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில், திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய இடங்களிலும் இந்த காலகட்டத்தில் வழக்கமாக பெய்வதைவிட அதிக மழை பதிவாகியிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று வேலூர், காஞ்சிபுரம், மதுரை, தேனி, திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், விழுப்புரம், சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், விருதுநகர், காரைக்கால் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவில் மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்