நளினி மகளின் திருமண ஏற்பாட்டிற்காக சிறைவிடுப்பில் வெளியில் வந்தார்

முருகனுடன் நளினி
படக்குறிப்பு,

முருகனுடன் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி சிறை விடுப்பில் (பரோலில்) வெளியில் வந்தார்.

அவரது மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வியாழக்கிழமையன்று காலை முதல் அவருக்கு சிறைவிடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இத்தம்பதியின் 26 வயது மகளான ஹரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். ஹரித்ராவுக்கு தற்போது திருமணம் செய்யவிருப்பதால், அந்த ஏற்பாடுகளுக்காக தன்னை 6 மாதம் சிறைவிடுப்பில் அனுப்பும்படி கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் மட்டும் சிறைவிடுப்பு அளிக்க ஜூலை ஐந்தாம் தேதி உத்தரவிட்டது.

பட மூலாதாரம், Getty Images

நீதிமன்ற உத்தரவுப்படி திங்கள்கிழமைக்குள் அவர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாதுகாப்புக் காரணங்களாலும் அவர் தங்குவதற்கு சரியான இடம் கிடைக்காததாலும் நளினியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவர் வியாழக்கிழமை காலை ஒன்பதரை மணியளவில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் இந்த ஒரு மாத காலமும் தங்கியிருப்பார்.

ஊடகங்களிடம் பேசக்கூடாது, காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் நளினிக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் முன்கூட்டியே விடுவிக்க முடிவெடுத்த தமிழக அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால், இது தொடர்பான உத்தரவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் அவர்கள் சிறையில் இருந்துவருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :