"ரூட்டு தல என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் 90 பேர் அடையாளம் காணப்பட்டனர்"

'ரூட்டு தல' படத்தின் காப்புரிமை STR/AFP/GETTY IMAGES

பேருந்தில் பயணிக்கும் சென்னைக் கல்லூரி மாணவர்களில் 'ரூட்டு தல' என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் 90 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

ஜூலை 23ஆம் தேதியன்று சென்னை பெரம்பூரிலிருந்து திருவேற்காடு நோக்கிச் சென்ற பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்தப் பேருந்தை மறித்து நின்றனர். பேருந்து நின்றவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறினர்.

அந்தப் பேருந்திற்குள் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அந்தக் கத்தியால் தாக்க ஆரம்பித்தனர். பல மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களையும் துரத்தித் துரத்தி இந்த கும்பல் வெட்டியது.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சென்னை பாரி முனை பகுதியில் இருந்து பேருந்தில் வரும் மாணவர்களுக்கும் பூந்தமல்லியிலிருந்து பேருந்தில் வரும் மாணவர்களுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே மோதல் இருந்துவந்ததும் செவ்வாய்க் கிழமையன்று கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இரு தரப்பும் இது தொடர்பாக மோதிக்கொண்டதாகவும் தெரியவந்தது.

பேருந்தில் இப்படித் தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிலரால் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலை தளங்களிலும் ஊடங்களிலும் ஒளிபரப்பானது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், இம்மாதிரி தொடர்ச்சியாக மோதல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கொண்ட பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்களுடன் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் இன்றும் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் வந்து செல்லும் 17 வழித்தடங்களில் ஆறு வழித்தடங்கள் அடிக்கடி மோதல்கள் நடக்கும் வழித்தடங்களாக அடையாளம் காணப்பட்டன. இந்த வழித்தடங்களிலிலும் பிற வழித்தடங்களிலும் சேர்ந்து மொத்தமாக 90 'ரூட் தல'கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த 'ரூட்டு தல' எனப்படுபவர்கள், அந்த பேருந்து வழித்தடத்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு தலைவர்களைப் போல கருதப்படுகிறார்கள். ஒரு வழித்தடத்தில் 'ரூட்டு தல'யாக இருக்கும் ஒருவர் மற்றொரு வழித்தடத்தில் பயணிக்கும்போதும் ஒரு கல்லூரியின் ரூட்டு தல, இன்னொரு கல்லூரியின் ரூட்டு தல பயணிக்கும் பேருந்தில் பயணிக்கும்போதும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பாரி முனை 'ரூட்டு தல' ஒருவரை பூந்தமல்லி வழித்தடத்தில் செல்லும் மாணவர்கள் சுற்றிவளைத்து, அரை நிர்வாணமாக்கி பாரி முனை வழித்தடத்தை கெட்டவார்த்தையில் திட்டும்படியும் பூந்தமல்லி வழித்தடமே சிறந்தது என 108 முறை எழுதும்படியும் வலியுறுத்தினர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாக்குதல்கள் நடைபெற்றன.

இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களிடம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 110 மற்றும் 107வதுவது பிரிவின்கீழ் ஓராண்டுக்கு நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் வாங்குவது என்றும் அந்த உறுதிமொழிப் பத்திரத்தை மீறி ரவுடித்தனம் செய்தால் அவர்களை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைப்பது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இப்படி அடையாளம் காணப்பட்ட 90 ரூட்டு தலகளின் பெற்றோர்களை அழைத்துப் பேசி எச்சரிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆறு வழித்தடங்களில் இயக்கப்படும் மாநகர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடமும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த காவல்துறை முடிவுசெய்துள்ளது.

சென்னை புறநகர் ரயில்களிலும் இதுபோன்ற "ரூட்டு தல" பிரச்சனைகள் இருந்துவருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களைத் தாக்க, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த ஒரு ரயில் மீது மற்றொரு கல்லூரியின் மாணவர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் பயணிகள் பலரும் காயமடைந்தனர்.

மற்றொரு சம்பவத்தில் சென்னை புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் ரயில் நுழையும்போது பட்டாக்கத்திகளை ரயில் பிளாட்ஃபாரத்தில் தேய்த்தபடி மாணவர்கள் பயணம் செய்தனர். இதனால், பொதுமக்கள் அஞ்சி அந்த இடத்தைவிட்டு ஓடினர்.

விரைவில் ரயில் ரூட்டு தல பிரச்சனைகள் குறித்தும் காவல்துறை கவனம் செலுத்தவிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்